
கோடை விடுமுறை வந்து விட்டாலே, 'சுற்றுலா கிளம்பலயா?' என்ற விசாரிப்புகள் தான், முன்னே வந்து நிற்கும். உண்மையிலேயே, சுற்றுலாவில் மனம் நிறைய வேண்டும்; அதேசமயம், பர்சுக்கும் பங்கம் வராதிருக்க வேண்டுமா? இதோ... நால்வர் கொண்ட சிறு குடும்பத்துக்கு, இரு நாள் சுற்றுலாவாக குறைந்தது, 5,000 ரூபாய் முதல் அதிகபட்சம், 10,000 ரூபாய்க்குள் அடங்கும் சுற்றுலாத் தலங்கள் சில ஆங்காங்கே இந்த இதழில் வெளியாகியுள்ளன.
ஏலகிரி!
வேலூரிலிருந்து, திருப்பத்தூர் சாலையில் பொன்னேரி வந்து, அங்கிருந்து, 15 கி.மீ., மலைப் பாதையில் பயணித்தால், ஏலகிரியை அடையலாம். ரயில் மார்க்கம் எனில், ஜோலார்பேட்டை வந்து, அங்கிருந்து பஸ்சில் ஏலகிரி வரலாம். இங்கு, நீரூற்று மற்றும் சிறுவர் பூங்காவுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட பூங்கானூர் ஏரி, அரசு மூலிகைப் பண்ணை பழப்பண்ணை, முருகன் கோவில், தொலைநோக்கி இல்லம் மற்றும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியை கண்டு களிக்கலாம்.
மேலும், ஏலகிரியிலிருந்து, 25 கி.மீ., தூரத்தில், காவனூரில், இந்தியாவின் மிகப் பெரிய தொலைநோக்கி உள்ளது. இதை, குழந்தைகளுடன் கண்டு மகிழலாம். சாகசப் பிரியர்களுக்கான பாரா கிளைடிங், பைக்கிங், டிரெக்கிங் போன்ற விளையாட்டுகள், உள்ளூர் விளையாட்டு கழகத்தினரால் நடத்தப்படுகிறது. இங்கு, அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் ஏராளமாக உள்ளன.
டாப்ஸ்லிப், வால்பாறை!
சுற்றுலாவை, காட்டு விலங்குகள், பறவைகள் என மறக்க முடியாத நினைவுகளால் நிறைக்க வேண்டுமா? பொள்ளாச்சிக்கு வாருங்கள்.
பொள்ளாச்சியில் தங்கினால், 37 கி.மீ., தூரத்தில் ஆனைமலை சரணாலயமும், 30 கி.மீ., தூரத்தில் டாப்ஸ்லிப் மற்றும் 64 கி.மீ., தூரத்தில் வால்பாறையும் உள்ளது.
ஆனைமலை சரணாலயத்தில் புலி, சிறுத்தை, யானை, முள்ளம்பன்றி மற்றும் பெயர் தெரியா பறவையினங்களை அருகிலேயே பார்த்து, ரசிக்கலாம். காட்டெருமைகள், விதவிதமான மான்கள் மற்றும் யானைகள் டாப்ஸ்லிப்பின் ஸ்பெஷல்!
மரகதப் பச்சை போல விரிந்திருக்கும் தேயிலைத் தோட்டங்கள், வால்பாறையின் சிறப்பு, அருகில் உள்ள ஆழியாறு அணை, மங்கி பால்ஸ், நல்லமுடி பூஞ்சோலை மற்றும் நம்பர் பாறை போன்ற இடங்களையும் கண்டு களிக்கலாம்.
ஆரஞ்சு கவுன்ட்டி!
காவிரி ஊற்றெடுக்கும் கர்நாடக மாநிலம் குடகு மலையின் மடியில் அமைந்திருக்கிறது, 'ஆரஞ்சு கவுன்ட்டி!' நம்மூரில், 'கார்ப்பரேஷன் வார்டு' என்று சொல்வதைப் போல, அமெரிக்காவில், 'கவுன்ட்டி' என்று சொல்வர். சும்மா ஸ்டைலுக்காக தன் பெயருடன், 'கவுன்ட்டி'யை சேர்த்துள்ள ஆரஞ்சு கவுன்ட்டி அமைந்திருப்பது, காபி தோட்டத்தில்!
இங்கு பணிபுரியும் பெண்கள், குடகு மலைப் பெண்கள் அணிவதைப் போன்று, பாரம்பரிய உடைகளையே அணிகின்றனர். இங்கிருக்கும் ஒவ்வொரு காட்டேஜுமே, தனித் தனி பங்களா போன்று, அகன்ற தாழ்வாரம், விசாலமான பெட்ரூம், அதில் தேக்குமர கட்டில், ஈஸி சேர், வாசல், திண்ணை, வீட்டுக்குப் பின் தோட்டம், நீச்சல் குளம், அதற்கு பின் மரங்கள் மற்றும் ஏரி சூழ்ந்து காணப்படுகிறது. 'வாழ்ந்தால் இப்படி ஒரு வீட்டில் வாழ வேண்டும்...' என்ற எண்ணம் இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஏற்படும்.
இவ்வீடுகளில், கீசர் துவங்கி, 'டிவி' வரை அத்தனை நவீன வசதிகளும் உண்டு. அத்துடன், நாக்கின் சுவை அறிந்து, விதம் விதமான சுவைகளில் பரிமாறும் ஓட்டல்களுக்கும் பஞ்சமில்லை; பாதுகாப்புக்கும் குறைவில்லை. காடும், காபி தோட்டமுமாக இருப்பதால், சீசனுக்கு தகுந்த மாதிரி பறவை இனங்கள் வந்து போகின்றன. இந்த ஆரஞ்சு கவுன்ட்டிக்கு அருகில், திபெத் மக்கள் வசிக்கும் குடியிருப்பும் உள்ளது.
ஏற்காடு!
சேலத்தில் இருந்து, 36 கி.மீ., தூரத்தில் இருக்கிறது ஏற்காடு. ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளை கடந்து, மலையை அடையலாம். நடுவில் நீரூற்றுடன் அமைந்துள்ள ஏரி தான், ஏற்காட்டின் மையக் கவர்ச்சி. கண்கவர் பூங்காவில், ஜப்பான் தோட்டக்கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து மரங்களை வளர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. மே மாதம் இங்கே நடக்கும் மலர் கண்காட்சி தான் ஹைலைட்! தவிர, தொலை நோக்கியுடன் கூடிய, 'லேடீஸ் ஸீட்' மற்றும் தொலை நோக்கி இல்லாமலேயே ரசிக்க வைக்கும், 'பகோடா பாயின்ட்' கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, திகிலூட்டும் கரடி குகை, பக்தி மணம் கமழும் சேர்வராயன் மற்றும் ராஜேஸ்வரி அம்மன் கோவில்கள் என்று குடும்பத்தினர் அனைவரும் கண்டு களிக்கலாம்.
கொல்லிமலை!
சில ஆண்டுகளுக்கு முன் வரை மர்மம், அமானுஷ்யம், சித்தர்கள் என்றே வெளியுலகுக்கு அடையாளம் காட்டப்பட்ட கொல்லி மலை, இன்று வெகு ஜனங்களை ஈர்க்கும் அளவுக்கு மாறியிருக்கிறது. இதற்கு காரணம், அதன் தூய்மை மற்றும் கையைக் கடிக்காத செலவுகள் தான். 'எகோ டூரிசம்' எனப்படும் சுற்றுச்சூழலுக்கான, சிறப்பு சுற்றுலாத்தலமாக, கொல்லிமலையை அங்கீகரித்துள்ளது மாநில அரசு. நாமக்கல்லில் இருந்து, கொல்லிமலைக்கு தனிப்பேருந்து மற்றும் வாடகை வாகனங்கள் கிடைக்கின்றன. 26 கி.மீ., தூர மலைப்பாதையில் பயணித்தால், கொல்லிமலை உங்களை வரவேற்கும்.
இங்கு, 600 அடி உயரத்தில் இருந்து கொட்டும், ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி மற்றும் கொல்லி பால்ஸ் உள்ளன. வாசலூர்பட்டி படகுத் துறையில், 'போட்டிங்' போகலாம். சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில், அருமையான, 'வியூ' பாயின்ட்டுகள் உள்ளன. அரப்பளீஸ்வரர் மற்றும் சமணர் கோவில்கள் என, ஆன்மிகமும் விரிந்திருக்கிறது.
கையைக் கடிக்காத வகையில், ஓட்டல்களும் உண்டு.

