PUBLISHED ON : டிச 25, 2011

சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தில், இயற்கை வளத்துக்கு பஞ்சம் இல்லை. ஓங்கி உயர்ந்த மலைத் தொடர்களும், அடர்ந்த வனப் பகுதியும் இங்கு நிறைந்துள்ளன. இங்குள்ள தியானென்மென் மலைத் தொடர், உலகின் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த மலையையும், வனப் பகுதியையும், மிக அருகில் சென்று ரசிப்பதற்கு, ஒரு, 'த்ரில்லிங்'கான அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது, சீன அரசு.
கடல் மட்டத்தில் இருந்து, 4,700 அடி உயரத்தில், மலையை ஒட்டி, அழகான, அதே நேரத்தில் பிரமாண்டமான கண்ணாடி பாலத்தை அமைத்துள்ளனர். இருநூறு அடி நீளத்துக்கு இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடந்து செல்வோரின் கால்களுக்கும், கீழே உள்ள, 4,700 அடி உயரத்துக்கும் இடையில் இருப்பது, வெறும் 2.5 அங்குலம் தடிமண் உள்ள கண்ணாடி மட்டுமே. இதன் மேலிருந்து பார்த்தால், தியானென்மென் மலைத் தொடரும், அடர்ந்த வனப் பகுதியும் துல்லியமாக தெரியும்.
நம் கால்களுக்கு கீழே இயற்கை அதிசயம் குவிந்து கிடப்பதை, ஒருவித பீதி கலந்த மகிழ்ச்சியுடன் ரசித்துக் கொண்டே செல்லலாம். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இங்கு வந்தாலும், பயம் காரணமாக, பாதியிலேயே தலைதெறிக்க ஓடிச் சென்று விடுவதாக, அதிகாரிகள் கூறுகின்றனர். பின்னே, ஆகாயத்தில் நடப்பது என்றால் சும்மாவா?
— ஜோல்னா பையன்.
