
காக்கா பிடித்தல் என்றால் என்ன... ஒருவருக்கு, 'ஐஸ்' வைத்து காரியம் சாதிப்பது என்ற அளவில், நமக்கு தெரியும். காகத்தை வாகனமாக உடைய சனீஸ்வரரே, காரியம் சாதிக்க, காக்கா பிடித்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். காரியம் சாதிக்க, ஒருவரது கை, காலை பிடிப்பது தான், இதன் உண்மைப் பொருள். 'காரியம் சாதிக்க வேண்டுமானால், கழுதை காலைக் கூட பிடிச்சாகணும்...' என்று சொன்னது கூட, இதனால் தான். காகம் என்ற பறவையை, காரியம் சாதித்தலுக்கு ஏன் உதாரணமாக்க வேண்டும்!மற்ற பறவைகளை ஒப்பிடும் போது, மிகுந்த அறிவுத்திறன் உடையது, காகம். தனித்து வாழ்வதை அது விரும்பாது. மனிதகுலத்திடம் இல்லாத ஒற்றுமை, இந்த ஜீவனிடம் இருக்கிறது. மன்தேய்பெல் என்ற நுாலாசிரியர் எழுதிய, 'இயற்கை விஞ்ஞானியின் கதை' என்ற நுாலில், தனக்கு கெடுதல் செய்பவர்களின் முகங்களை, காகம் எளிதில் மறக்காது, என்று சொல்லியுள்ளார். பறவைகளின் மூளைப்பகுதியில் உள்ள, 'நிடோபோடாலியம்' என்ற பகுதியே, அதன் அறிவுத்திறனுக்கு காரணம். காகத்திற்கு இந்த பகுதி, மனித குரங்குகளுக்கு உள்ளதை விட பெரிதாக இருப்பதால், இதற்கு ஞாபக சக்தி அதிகம்.அதனால் தான், பிறருக்கு கெடுதல் செய்வோருக்கு, தண்டனை வழங்கும் சனீஸ்வரருக்கு, காகத்தை வாகனமாக படைத்துள்ளனர், நம் முன்னோர். தனக்கு கெடுதல் செய்தவர்களை, காகம் எப்படி மறக்காதோ, அதே போல, இவர், அவ்வளவு எளிதில், மனிதர்கள் செய்யும் தவறுகளை மறக்க மாட்டார். மனிதர்கள் என்ன... தேவர்கள், தெய்வங்கள் என, யாரையும் விட்டு வைக்க மாட்டார்.சனீஸ்வரருக்கு, காகம் வாகனமாக உள்ளதை அனைவரும் அறிவர். ஆனால், அவர் அதைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அதிசயத்தை, திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், சிவந்தியப்பர் கோவிலில் காணலாம். இந்தக் கோவில் மிகவும் பழமையானது என்பதால், இதன் வரலாறு தெரியவில்லை. செவி வழி செய்திகளின்படி, சிவந்தியப்பர் என்ற சிற்றரசர், இந்த பகுதியை ஆண்டதாகவும், சிவ பக்தரான அவர், சிவனுக்கு இந்தக் கோவிலை எழுப்பியதாகவும் தகவல் இருக்கிறது. இவரது பெயரே, சிவனுக்கு சூட்டப்பட்டது. இவரை, 'சிவபாலேஸ்வரர்' என்றும் அழைப்பர்.வாழும் காலத்தில், பொருள் செல்வமும், வாழ்வுக்கு பின், முக்தியும் தருபவர், இவர். அரசரின் பெயர் உடையவர் என்பதால், லிங்கத்துக்கு, விழா காலங்களில் தலைப்பாகை, அதாவது, கிரீடம் சூட்டப்படும்.அம்பாளை, வழியடிமை கொண்ட நாயகி என்றும், மார்க்க சம்ரக் ஷணி என்றும் அழைப்பர். தன்னை வணங்குவோரை நல்வழியில் நடத்திச் செல்பவள், இவள். இங்குள்ள தட்சிணாமூர்த்தி அருகில் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என்ற முனிவர்கள், அதாவது, சீடர்கள் இல்லை. காரணம், அந்த முனிவர்கள், தட்சிணாமூர்த்தியிடம் கல்வி கற்க வரும் முன் தோன்றிய பழமையான கோவில் என்பதால், இவரது இடக்கையில் ஏடு அல்லது அக்னி இருக்கும். ஆனால், இங்கு அது இல்லை. அதற்கு பதிலாக, தன் கையை, நாகத்தின் மீது வைத்து அழுத்தியுள்ளார்.ராகு - கேதுவால் ஏற்படும் நாகதோஷ பரிகாரத்திற்கு, இவருக்கு அர்ச்சனை செய்தாலே போதும்; நீங்கி விடும் என்பது ஐதீகம். இங்கு, அதிகார நந்தியும், பைரவரும் எதிர் எதிராக உள்ளதும், ஆறுமுக நயினாரான முருகன் சன்னிதியில் வள்ளி, தெய்வானை எதிரெதிரே ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்பதும் விசேஷம். தனி சன்னிதியில் தெற்கு நோக்கி உள்ளார், சனீஸ்வரர். இவருக்கு, காக வாகனம் மட்டுமின்றி, தீமை செய்வோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கையில் ஒரு காகமும் ஏந்தியுள்ளது அபூர்வமான அமைப்பு. காக்கா பிடித்துள்ள இந்த சனீஸ்வரரை, காக்கா பிடித்தால், அவர் தரும் தீய பலன்களிலிருந்து தப்பி, நன்மை பெறலாம். திருநெல்வேலி - பாபநாசம் சாலையில், 40 கி.மீ., துாரத்திலுள்ள மூன்று விளக்கு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, கோவிலுக்கு செல்லலாம்.
- தி.செல்லப்பா

