
சந்திரபாபுவை பிரிந்து லண்டன் சென்ற அவர் மனைவி ஷீலா, சில மாதங்களுக்கு பின், சந்திரபாபுவுக்கு எழுதிய கடிதம்...
டியர் பாபு, உங்களைப் பிரிந்து, மாதங்கள் பல ஓடி விட்டன; பிரிவின் துயரை நானும் உணர்கிறேன். ஆனாலும், மீண்டும் ஒன்று சேர முடியாத பிரிவாயிற்றே இது!
நான், ஒரு பெண்; எத்தனை காலத்துக்கு, என் தாய், என்னுடன் இருப்பாள்... பெண்ணான நான், தனித்து வாழ்வது சுலபம் இல்லயே... அதனால், என் எதிர்காலத்திற்காக, ஒரு முடிவை எடுத்துள்ளேன். அதற்கு நீங்களும் மனப்பூர்வமாகச் சம்மதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நான், மறுமணம் புரிய முடிவெடுத்துள்ளேன். தங்களின் சம்மதத்தை எதிர்நோக்குகிறேன்...
இப்படிக்கு,
ஷீலா.
இக்கடிதத்திற்கு, 'நான் நினைத்ததும் அது தான்; நல்லவனாக, வாழ்க்கை முழுவதும் நல்லபடியாக வைத்துக் காப்பாற்றக் கூடியவனாகப் பார்த்து, மணம் செய்து கொள்...' என, பதில் எழுதினார், சந்திரபாபு.
அதன்பின், அவர்களுக்கு இடையே தொடர்பு இல்லாமல் போனது.
தன் திருமண வாழ்க்கையின் அவலத்தை நினைத்து, சந்திரபாபு, குடித்துக் குடித்து தன்னையே அழித்துக் கொண்டிருக்க, மருத்துவரின் மனைவியாக, ஏழெட்டுக் குழந்தைகளுக்குத் தாயாக, ஷீலாவின் வாழ்க்கை அங்கே தொடர்ந்தது.
'ஷீலா' என்ற பெயரை எங்காவது கேட்டால் கூட, முகம் மாறி விடுவர், சந்திரபாபு. 'ஷீலா' என்றொரு நடிகை வரவே, அந்நடிகையின் பெயரை, யாராவது சொன்னால் கூட, 'சொல்லாதீங்கப்பா...' என, அவர்களை தடுக்கும் அளவுக்கு, ஷீலாவின் நினைவு, அவர் மனதில் வடுவாக பதிந்து விட்டது.
மலைக்கள்ளன் படம் துவங்கிய புதிதில், தயாரிப்பாளரிடம், நான்காயிரம் ரூபாய் முன்பணம் பெற்று, பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கினார், எம்.ஜி.ஆர்.,
பின், குலேபகாவலி படத்தில், கதாநாயகனாக, எம்.ஜி.ஆரும், நகைச்சுவை கதாபாத்திரத்துக்கு, சந்திரபாபுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இருவருக்கும் இடையில் நட்பு வளர்ந்தது.
எம்.ஜி.ஆரை, சந்திரபாபு, 'மிஸ்டர்
எம்.ஜி.ஆர்.,' என்றும், சந்திரபாபுவை,
எம்.ஜி.ஆர்., 'பாபு சார்...' என்று அழைப்பதும் வழக்கம். எம்.ஜி.ஆர்., வாங்கிய அக்காரிலேயே, சில சமயங்களில் இருவரும் தூங்குவர்.
சந்திரபாபுவை, முன் சீட்டில் படுத்துக் கொள்ளச் சொல்லி, பின் சீட்டில் தூங்குவார், எம்.ஜி.ஆர்.,
குலேபகாவலி படத்திற்கு பின், இருவரும் புதுமைப்பித்தன் படத்துக்கு ஒப்பந்தமாயினர்.
அப்படத்தில், சந்திரபாபுவின் நகைச்சுவைக்கு, ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைக்கவே, 'எம்.ஜி.ஆர்., நடிக்கும் படங்களில், காமெடியனாக, சந்திரபாபு தான் நடிக்க வேண்டும்...' என, தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் கூறத் துவங்கினர்.
'சந்திரபாபுவின் காமெடிக்காக, அப்படத்தை பார்க்கலாம்...' என்று பேச்சு வரவே, அது, எம்.ஜி.ஆரின் காதிற்கு சென்றது. அதன்பின், 'சந்திரபாபுவை போடாதீர்கள்; அவனைப் போட்டால், நான் கால்ஷீட் தரமாட்டேன்...' என்று, தயாரிப்பாளர்களிடம்,
எம்.ஜி.ஆர்., சொன்னதாக, சந்திரபாபுவுக்கு தகவல் வந்தது.
தர்மசங்கடமான நிலையில் இருந்த தயாரிப்பாளர்களிடம், 'அவர் அப்படி சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. காரணம், அவரோ கதாநாயகன்; நானோ சாதாரண, காமெடியன் தானே... என்னால், படம் ஓடியது என்றால், அது, அவரைப் புண்படுத்தாதா... அவர் எண்ணப்படியே செயல்படுங்கள்...' என்று, சொன்னார், சந்திரபாபு.
அதன்பின், அடுத்து சில ஆண்டுகள் எம்.ஜி.ஆரும், சந்திரபாபுவும் இணைந்து நடிக்கவில்லை.
இடையில், ஒருநாள், எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு வர, நேரில் சென்றார், சந்திரபாபு.
'வாங்க பாபு சார்...' என, வாய் நிறைய வரவேற்ற எம்.ஜி.ஆர்., 'நாடோடி மன்னன் என்ற பெயரில், படம் தயாரிக்கப் போறேன்; நீங்க அதில், காமெடியனாக நடிக்கணும்...' என்றார்.
அந்தப் படத்தை வாங்க இருந்த வினியோகஸ்தர்கள், 'சந்திரபாபு நடித்தால் நன்றாக இருக்கும்...' என்று, எம்.ஜி.ஆரிடம் சொன்னதாலேயே இந்தச் சந்திப்பு நடந்தது.
தன்னை மதித்து, எம்.ஜி.ஆர்., கேட்டதால், அப்படத்தில் நடிக்க, சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டார் சந்திரபாபு.
எம்.ஜி.ஆர்., முதன்முதலில் இயக்கிய படம், நாடோடி மன்னன்; இப்படம் பெரும் வெற்றி பெற்றது. சகாயம் என்ற கதாபாத்திரத்தில், சந்திரபாபு செய்த நகைச்சுவை, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
சந்திரபாபுவின் நடிப்பு குறித்து,
எம்.ஜி.ஆர்., பேசியது:
சகாயம் என்பதன் அர்த்தமே, உதவி; கதையின் குறிப்பிடத்தக்க கதாபாத்திரமாக இருக்கும், 'நடோடி'க்கு உதவி செய்யப் போய், சில நேரங்களில் ஆபத்தையே ஏற்படுத்தி கொடுப்பார் சகாயம். ஆனால், அதன் விளைவு, நன்மையாகவே இருக்கும். எதை கண்டாலும் திகைப்பு; ஆனால், எதைப் பற்றியும் அலட்சியம். எல்லாவற்றிலும் விருப்பம். காதலும் வேண்டும், அது கஷ்டம் இல்லாமலும் கிடைக்க வேண்டும். இப்படி, குழப்பமான குணம் படைத்த கதாபாத்திரம் தான் சகாயம். இதை, ஏற்று நடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. சந்திரபாபுவின் திறமைக்கு இது போன்ற, எந்த கதாபாத்திரமும் மிகச்சாதாரணம் என்ற வகையில், இப்படத்தில் நடித்திருக்கிறார்.
நடிப்பதில் தனக்கெனத் தனிச் சிறப்பு ஏற்படுத்திக் கொண்டவர். அதற்காக, எந்த ஆபத்து வந்தாலும், அதை பொருட்படுத்தாதவர்.
ஆனால், என்னோடு பழகிய வரையில், அவருக்கு தன் விருப்பத்தை தடுப்பது பிடிக்காது என்றாலும், மறுக்காமல் நடித்துக்கொடுத்தார். 'மேலே இருந்து குதிப்பேன்...' என்பார். எனக்கு நன்கு தெரியும், அவரால் சரிவர குதிக்க முடியும் என்று! ஆனால், புதுவிதமாக குதிப்பதாக நினைத்து, ஆபத்து நேரும் விதத்தில் குதித்து விடுவார்.
மரக்கிளை ஒடிந்து விழும் காட்சியில், எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்தார். கடைசியில், அந்தக் காட்சியே வேண்டாம் என்று சொல்லி விடலாமா என்ற நிலைக்கு வந்த பின், மெல்ல விழுவதாக ஒப்புக்கொண்டார்; ஆயினும் எனக்கு பயம் தான்.
அவரை பொறுத்தவரையில், பொறுப்பை தட்டி கழித்து விடுவாரோ என்ற அச்சத்துக்கு மாறாக, பொறுப்பை நல்லமுறையில் நிறைவேற்ற, ஆபத்தை வரவழைத்து கொள்வாரோ என்று தான் பயப்பட வேண்டும்.
ஒருநாள், வெளிப்புற படப்பிடிப்பில், சந்திரபாபுவும் நடிக்க வேண்டிய காட்சி இருந்தது.
குதிரைகள் போகும் காட்சியை படமாக்கும் போது, ஒரு குதிரை சொன்னபடி கேட்காமல் தொல்லை கொடுத்தது. சிறிது நேரம் அதை ஓட்டி, ஒழுங்குக்கு கொண்டு வந்து, குறிப்பிட்ட நடிகரிடம் கொடுத்து, ஓட்ட செய்து படமெடுத்து முடித்தேன். அதற்குள், சந்திரபாபு தயாராகி விட்டதால், அவர் சம்பந்தப்பட்ட, 'ஷாட்'டுக்கு ஏற்பாடு செய்தபடி இருந்தேன். பாபுவும் வந்தார்; 'ஷாட்' எடுக்க பத்து நிமிடங்களாகும் என்பதை அறிந்தவர், முரட்டுத்தனம் செய்து, அடங்கியிருந்த குதிரை மீது ஏறப் போனார். வேண்டாம் என தடுத்தேன்.
'சிறிது நேரம் இங்கேயே சுற்றுகிறேன்...' என்றார். நான், குதிரைக்காரனிடம் எச்சரித்து, குதிரையுடனேயே, 'லகானைப்' பிடித்தபடி போக சொன்னேன். ஐந்து நிமிடம் கூட ஆகி இருக்காது. சிலர் ஓடி வந்து, 'சந்திரபாபு கீழே விழுந்து அடிபட்டு விட்டார்...' என்றனர். என்னால், கற்பனை செய்யவே முடியவில்லை.
எப்படியோ, இப்போது பழைய சந்திரபாபுவாகவே இருக்கிறார்.
தொழிலில் இவ்வளவு ஆர்வமும், அக்கறையும் எடுத்துக் கொள்கிறவர்கள் சிலர் தான் இருக்கின்றனர்; அதில் ஒருவர் சந்திரபாபு.
- இப்படி கூறியுள்ளார் எம்.ஜி.ஆர்.,
— தொடரும்.
- முகில்
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ்
சென்னை

