sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சந்திரபாபு (16)

/

சந்திரபாபு (16)

சந்திரபாபு (16)

சந்திரபாபு (16)


PUBLISHED ON : நவ 19, 2017

Google News

PUBLISHED ON : நவ 19, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்புத்துாரில் கண்ணதாசன் நடத்திய சினிமா விழாவிற்கு வந்திருந்த மனோரமா, சந்திரபாபுவிடம், எப்படியாவது பேசி விட வேண்டும் என்று, எஸ்.விஜயலட்சுமியிடம், 'என்னை, சந்திரபாபு கிட்ட அறிமுகப்படுத்தி வையுங்க...' எனக் கிசுகிசுத்தார்.

விஜயலட்சுமியும், 'பாபு... இவங்க தான் மனோரமா; இப்பத் தான் நடிகையா அறிமுகம் ஆகுறாங்க. மாலையிட்ட மங்கை, படத்துல நடிச்சுக்கிட்டிருக்காங்க...' என, அறிமுகப்படுத்தி வைத்தார்.

'அப்படியா, ஹலோ...' எனச் சொல்லி, மறுபடியும் விஜயலட்சுமியிடம் பேசத் துவங்கினார், சந்திரபாபு.

'ஹலோ' மட்டும் சொல்லி, மேற்கொண்டு ஏதும் பேசாததால், சந்திரபாபுவிடம், 'என்னங்க... எங்கிட்ட கொஞ்சம் பேசுங்களேன்...' எனக் குழைவாக கூற, இதைச் சற்றும் எதிர்பாராத சந்திரபாபு, திகைத்து, அங்கிருந்து ஓடி விட்டார். அப்போது தான், தன் செயலை எண்ணி, மிகவும் வெட்கப்பட்டுப் போனார், மனோரமா.

மனோரமாவும் புகழ் பெற்ற நடிகையான பின், போலீஸ்காரன் மகள் படத்தில், சந்திரபாபுவுடன் இணைந்து நடிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது.

பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது பாடல் பதிவு நடைபெற்ற நேரம் அது...

எல்.ஆர்.ஈஸ்வரியும், சந்திரபாபுவும் பாட வந்திருந்தனர்; அப்போது, அங்கே மனோரமா வர, தன் நண்பரிடம் அவரைக் காட்டி, 'இந்தப் பொண்ணு, ஒரு காலத்துல என்னைப் பார்த்து, 'எங்கிட்ட கொஞ்சம் பேசுங்க'ன்னு சொன்னா; இப்ப என்னடான்னா, இந்தப் போடு போடுறா...' என ஆச்சரியப்பட, மனோரமாவுக்கு ஏக சந்தோஷம்!

போலீஸ்காரன் மகள் படத்துக்காக, பாடல் கம்போசிங்கில், 'பொறந்தாலும் ஆம்பளையா...' பாடலின் துவக்க வரிகளை, கண்ணதாசன் சொன்னபோது, 'சபாஷ்யா கவிஞா...' என, உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார், சந்திரபாபு.

மற்றொரு நாள் படப்பிடிப்பில், 'இன்று, என்ன காட்சி...' என்று கேட்டார், சந்திரபாபு.

'நீங்களும், மனோரமாவும் நடிக்கும் காதல் காட்சி...' என்றனர்.

மனோரமாவை ஓரக் கண்ணால் பார்த்தபடி, 'நான் துர்பாக்கியசாலி... போயும் போயும், மனோரமாவையா காதலிக்கணும்...' என்றார்.

அன்று, சந்திரபாபு, மனோரமா, ராமநாதன் ஆகியோர் கலந்து கொள்ளும் ஒரு காட்சி படமாக்கப் பட இருந்தது. சந்திரபாபுவின் வருகைக்காக, படக் குழு காத்திருந்தது. காரில் இருந்து இறங்கிய சந்திரபாபு, செட்டுக்கு வெளிப்புறம் இருந்த கதவில், முகத்தைப் புதைத்து, பிரார்த்தனை செய்து, 'ஜீஸஸ்' என்று சொல்லி, 'ரெடி' என்றவாறு துள்ளிக் குதித்து செட்டுக்குள் நுழைந்தார். எப்போதும் செட்டுக்குள் நுழையும்போது இப்படிச் செய்வது, அவரது வழக்கம்.

கத்தியைக் காட்டி வில்லன் மிரட்டியதும், பயந்து, சிறு குன்றில் இருந்து சறுக்கி கீழே விழ வேண்டும் என்பதே அன்று எடுக்கப்பட இருந்த காட்சி. கேமரா கோணம் அமைத்து, 'ஸ்டார்ட்' என, ஸ்ரீதர் சொன்னதும், சாதாரணமாகக் கீழே விழாமல், மேலே இருந்து கீழே தாவிக் குதித்து, பல்டி அடித்து, கேமரா முன் வந்து விழுந்து, எழுந்து நின்றார், சந்திரபாபு.

'எதற்கு இப்படி ரிஸ்க் எடுக்கிறீங்க...' என்று கேட்டார், ஸ்ரீதர்.

'அப்போது தான் ரியலிசம் இருக்கும்; அது மட்டும் இல்லாமல், பாபுக்கு இணை பாபுவாகத்தான் இருக்கணும்...' என்றார்.

இதேபோன்று, விருந்து கொடுப்பதில், சந்திரபாபுவுக்கு நிகர் அவரே தான்.

போலீஸ்காரன் மகள் படப்பிடிப்பு நிறைவடைந்ததும், சித்ராலயா யூனிட் நண்பர்கள் அனைவரையும் தன் வீட்டுக்கு அழைத்து, பலவிதமான பலகாரங்களை வரவழைத்து, அவர்கள் வயிராற உண்பதைப் பார்த்து ரசித்தார், சந்திரபாபு. விருந்து கொடுக்கும்போது அவர் பேச்சு, நடை, உடை, பாவனை எல்லாம் ஆங்கிலப் பாணியில் இருக்கும்.

போலீஸ்காரன் மகள் படம் ரிலீசுக்கு தயாரான நிலையில், அதை, ஸ்டுடியோ தியேட்டரில் போட்டுப் பார்த்தனர். சந்திரபாபு வரும் காட்சி ஒன்று திரையில் ஓட, தன் இருக்கையை விட்டு எழுந்து, திரைக்கு அருகே சென்று, 'கொன்னுட்டேடா பாபு...' எனக் கூறி, தன் கன்னத்தைக் கிள்ளி, தானே முத்தம் கொடுத்தார். 'தன்னைத் தானே ஒருவன் ரசிக்கவும், பாராட்டவும் கற்றுக் கொள்ள வேண்டும்...' என்பதே, சந்திரபாபுவின் கொள்கை!

ஏவி.எம்.,மின், அன்னை படத்தில், சந்திரபாபு, பெருச்சாளியை முகத்திலும், மார்பிலும் விட்டு துாங்குவது போன்று ஒரு காட்சி!

சிறிதும் அருவருப்பு அடையாமல், தன் உடம்பின் மீது பெருச்சாளியை ஓட விட்டு, தத்ரூபமாக நடித்தார், சந்திரபாபு.

பெருச்சாளிகள் அவரது முகத்திலும் மார்பிலும் கடித்து வேதனைப்படுத்திய போதும், காட்சி, ஓ.கே., ஆகும் வரை பொறுத்து, நடித்துக் கொடுத்த சந்திரபாபு, பின், தடுப்பு ஊசி போட்டுக் கொண்டார். அதனால் தானோ என்னவோ, ஒருமுறை, கதாநாயகர்களைப் பற்றி குறிப்பிடும் போது, 'இன்று சண்டைக் காட்சிகளுக்கு எல்லாம், 'டூப்' போட்டு நடிக்கின்றனர். அதைக் கண்டு ரசிகர்கள் விசில் அடித்து, 'வாத்தியார்' என்று பாராட்டுகின்றனர்.

'குதிக்க வேண்டுமா, குதிரை மேல் தாவ வேண்டுமா, சிங்கத்தோடு சண்டை போட வேண்டுமா, சில காட்சிகளில் மட்டும் கதாநாயகர்களின் முகத்தைக் காட்டி, பின், அத்தனைக் காட்சிகளுக்கும், 'டூப்' போடுகின்றனர். ஆனால், இவர்களுக்கு கிடைக்கும் ஊதியமோ, 100 அல்லது 200 ரூபாய் தான்; பாவனை செய்வோருக்கோ லட்சக்கணக்கில்! இதை, ஏன் யாரும் கேட்க முன் வர மாட்டேன் என்கிறீர்கள்...' என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

திரையுலகில், அப்போதிருந்த எல்லா நகைச்சுவை நடிகர்களுடனும் சுமூக உறவு வைத்திருந்தார், சந்திரபாபு.

'குலேபகாவலி படத்தில் ஒரு காட்சி... எதிர்பாராதவிதமாக, நான், வீட்டுக்குத் திரும்புகிறேன்; கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருக்கிறார், சந்திரபாபு. அவர் இருப்பது தெரியாமல், அவரது மீசையை மிதித்த படி நிற்பேன். என் காலில் மாட்டிக் கொண்ட மீசையை எடுக்க முடியாமல் அவர் தவிப்பார். வலி ஒரு பக்கம்; கத்த முடியாத சூழ்நிலை ஒரு பக்கம்ன்னு அவர் காட்டிய தத்தளிப்பு நடிப்பை, பின், படத்தில் பார்த்து வியந்து போனேன். சந்திரபாபு வெறும் நடிகர் மட்டும் இல்ல; சிறந்த டைரக்டர், பாடகர், கதாசிரியர். வெளிநாட்டில் பிறந்திருந்தால், இவர் புகழ், உலகம் முழுவதும் பரவியிருக்கும்...'

- இப்படிச் சொன்னவர் வேறு யாரும் அல்ல; சந்திரபாபுவோடு சம காலத்தில் நகைச்சுவையில் பிரகாசித்த, 'டணால்' தங்கவேலு தான்!

தொடரும்.

நன்றி: சிக்ஸ்த்சென்ஸ், சென்னை.

முகில்






      Dinamalar
      Follow us