PUBLISHED ON : பிப் 25, 2018

சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்று தொடரை எழுதுவதற்கு முன், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், சந்திரபாபு பற்றிய சில சுவையான தகவல்களையும் தொகுத்துள்ளார் கட்டுரை ஆசிரியர், முகில். அது:
சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு முன், அவரது பாடல்களும், படங்களும் மட்டுமே எனக்கு பரிச்சயம்; வேறொன்றும் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இப்புத்தகம் உருப்பெறக் காரணம்.
பிலிம் நியூஸ் ஆனந்தன், பிள்ளையார் சுழி போட்டார். ரோஜா முத்தையா நுாலகம் பல அரிய தகவல்களோடு காத்திருந்தது.
இனிமேல் கவலை இல்லை; சுலபமாக வேலையை முடித்து விடலாம் என நினைத்தால், கிடைத்த தகவல்கள் அனைத்தும் சல்லி வேர்களாக மட்டுமே இருந்தன. அதனால், ஆணி வேரைத் தேடி அலையத் துவங்கினேன்.
திங்கட்கிழமை கிடைக்கிற தகவல்களின்படி சந்திரபாபு, 'செம ஜாலி ஆளுப்பா...' என, எண்ணத் தோன்றும்; செவ்வாய் கிழமையோ, 'மனுஷனுக்கு லொள்ளு ஜாஸ்தி...' என்று நினைப்பேன். புதன் கிழமை, யாரிடமாவது பேசிவிட்டு வரும்போது, 'அய்யோ பாவம் சந்திரபாபு...' என, பரிதாபப்படுவேன். வியாழக்கிழமை, வேறொரு நபருடன் பேசும்போது, 'ச்சே, சந்திரபாபு கெட்ட ஆளு...' என்று மனசு நினைக்கும். வெள்ளிக்கிழமை, 'அட... இந்த ஆளு இவ்வளவு நேர்மையானவரா...' என்று வியப்பேன்.
சனிக்கிழமை, பழைய பத்திரிகைகள் எதையாவது புரட்டினால், 'என்ன தைரியம் இருந்தா இந்த மனுஷன் இப்படிச் சொல்வாரு...' என்று தோன்றும். ஞாயிற்றுக் கிழமையோ, எல்லாவற்றையும் சேர்த்து யோசிக்கும்போது, நாயகன் ஸ்டைலில், 'சந்திரபாபு நல்லவரா, கெட்டவரா...' என, எனக்கு நானே கேட்டுக் கொள்வேன்.
'ஆச்சரியப்படும் படலம்' இதோடு முடிந்து விட்டதா என்று எண்ணும் அளவுக்கு, என் தேடலை ஒவ்வொரு நாளும் ஆச்சரியமாக்கினார், சந்திரபாபு. சிகரத்தின் உச்சி, பாதாளத்தின் பாதம் இரண்டையும் முழுமையாக வாழ்க்கையில் உணர்ந்தவர், சந்திரபாபு. எதையும் வெளிப்படையாக பேசிவிடும் சந்திரபாபுவின் வாழ்க்கையிலும், சிதம்பர ரகசியங்கள் உண்டு என்று, இந்த தேடலின் மூலம் கண்டுகொண்டேன்.
இந்தப் புத்தகத்தை உருவாக்க ஆதரவு தந்த சந்திரபாபுவின் உடன் பிறந்தவர்களான ஏஞ்சலின் மேத்யூ, ஜோதி, ஜே.பி.பெஞ்சமின் ஆகியோருக்கு என் நன்றிகள்.
சந்திரபாபுவுடன் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகைகள் மனோரமா, சச்சு, நடிகர் சிவகுமார், 'கவர்ச்சி வில்லன்' கண்ணன்,'சித்ராலயா' கோபு, ஏ.என்.எஸ்.மணியன், பத்திரிகையாளர் நவீனன் மற்றும் 'சங்கொலி' திருநாவுக்கரசு ஆகியோருக்கும் நன்றிகள்.
சந்திரபாபு பிறந்தது முதல் இறந்தது வரை, ஆண்டு வாரியான தகவல்களை கொண்ட புத்தகமல்ல இது; இருப்பினும், அவரது வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்கள் மூலம், அவரது வாழ்க்கையை நேர்த்தியாக தொகுக்க என்னாலான சிறு முயற்சியே இது!
தன்னிகரற்ற கலைஞரான சந்திரபாபுவுக்கு இந்த புத்தகம் என் காணிக்கை.
இனி, சந்திரபாபுவைப் பற்றிய சுவையான தகவல்கள்:
* தமிழ் சினிமா உலகில், முதன் முதலாக, மிகவும் நேர்த்தியாக, கோட், சூட் அணியும் பழக்கத்தை கொண்டு வந்த பெருமை சந்திரபாபுவையே சாரும். அவர் உடை அணியும் அழகே தனி; புதிய நாகரிகத்தை தன்னை பார்த்து பிறர் தெரிந்துகொள்ளும்படி உடை அணிவார்.
* சந்திரபாபுவுக்கு மிகவும் பிடித்த ஆடை, வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட். சட்டையின் கையை மடித்து விட்டிருப்பது அழகாக இருக்கும். பேன்ட் பாக்கெட்டுக்கு வெளியே கர்ச்சீப் தெரிவது போல் ஸ்டைலாக வைத்திருப்பார்.
* ரேடியோகிராமில், வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட, அமெரிக்க, ஸ்பானீஷ் மற்றும் மெக்சிகன் இசைத்தட்டுகளை ஓடவிட்டு, பக்கத்தில் இருப்பவர் யாராக இருந்தாலும், அவரை தன்னுடன் நடனமாட அழைப்பார். நடனமாட விரும்புவோரை மேற்கத்திய பாணியில் கட்டிப்பிடித்து ஆடுவார். தன்னுடன் ஈடுகொடுத்து ஆடாதவர்களை செல்லமாக, கெட்ட வார்த்தையில் திட்டுவார்.
* ஷூட்டிங்கின் போது, துண்டு துண்டாக நறுக்கப்பட்ட கேரட்டு மற்றும் வெள்ளரிகாயையும் தட்டு நிறைய வைத்து சாப்பிடுவார்.
* யாருக்கு போன் செய்தாலும், வெளியிலிருந்து அழைப்பு வந்தாலும், 'ஹலோ' என தொடங்காமல், 'சந்திரபாபு' என, தன் பெயரை ரசனையுடன் சொல்லி, உரையாடலை துவங்குவார்.
* வீட்டில், தானே சப்பாத்தி மாவு பிசைந்து, சுட்டு எடுத்து, அதற்கு தொட்டுக் கொள்ள ஏதாவது, 'சைடு - டிஷ்' செய்வார். பின், குளித்து முடித்து, டைனிங் டேபிளில் அமர்ந்து, ஒரு கிளாசில் விஸ்கியை ஊற்றி, சப்பாத்தியை கத்தியால் அழகாக வெட்டி, ஸ்டைலாக உண்பார்.
* கார் ஓட்டுவதில் கூட வித்தியாசத்தை கடைப்பிடித்து வந்தார், சந்திரபாபு. தன் பியட் காரை ஓட்டிச் செல்லும்போது, பார்ப்பவர்கள், ஒன்று பயப்படுவர் இல்லை சிரிப்பர். காரணம், அடிக்கடி தன் முழங்கைகளாலேயே ஸ்டியரிங்கை பிடித்து, காரை வளைத்து திருப்பி, அவர் ஓட்டும் வேகம் பிறரை திரும்பிப் பார்க்க வைக்கும். இப்படி ஓட்டி, சிறிய விபத்துகளையும் சந்தித்துள்ளார்.
*'யார்ட்லிங்' எனப்படும் குரலை இழுத்து இழுத்து, பிசிர் அடிப்பது போல் பாடுவது, மேலை நாட்டை சார்ந்தது. இந்தியில் நடிகர் கிஷோர் குமார் அடிக்கடி, 'யார்ட்லிங்' செய்வார். தமிழ் பாடல்களில், 'யார்ட்லிங்' முறையை கொண்டு வந்த பெருமை சந்திரபாபுவையே சாரும்.
* ஒரு நகைச்சுவை நடிகர் பாடிய சோக கீதங்கள் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது என்றால், அது சந்திரபாபுவின் பாடல்கள் மட்டும் தான்.
* 'சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம்' சார்பாக, ஆண்டுதோறும் திரைக் கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வந்தது. அதில், 1957ல், 'சிறந்த நகைச்சுவை நடிகர் - நடிகை' என, விருதுகள் உருவாக்கப்பட்டன. அதில், முதல் விருதை பெற்றவர், சந்திரபாபு. படம்: மணமகன் தேவை!
—முற்றும் —
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் சென்னை.
முகில்
