sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்! (3)

/

சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்! (3)

சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்! (3)

சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்! (3)


PUBLISHED ON : மே 24, 2020

Google News

PUBLISHED ON : மே 24, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'நிஜத்தைச் சொல்லிடுறேன். நான் இப்ப வேலையில இல்ல. நண்பன், ஸ்ரீதருக்காக, கல்யாண பரிசு படத்தின் நகைச்சுவை பகுதிகளுக்கான வசனம் எழுதிட்டு இருக்கேன்...' என, கோபு கூறியதும், மனமுவந்து ஏற்றுக்கொண்ட அவரது மனைவி கமலா, 'நானும், ஒரு உண்மைய உங்ககிட்ட மறைச்சுட்டேன்...' என்றார்.

'என்னம்மா அது...' என்றார், கோபு.

'திருமணத்திற்கு முன்பிருந்தே, கமலாதேவி என்ற பெயரில், பத்திரிகைகளுக்கு கதை எழுதி வருகிறேன். 'ஜகன் மோகினி' என்ற பத்திரிகையில், துணை ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறேன்.

'நான் எழுத்தாளர்ன்னு தெரிஞ்சா, நீங்க எப்படி ஏத்துக்குவீங்களோன்னு பயமா இருந்துச்சு... அதனால, உண்மையை மறைச்சுட்டேன். இப்ப நீங்களே, ஒரு எழுத்தாளர்ன்னு தெரிஞ்ச பிறகு, தைரியமா சொல்றேன். எழுத்தோட அருமையும், எழுத்தாளரோட பெருமையும், நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை...' என்றார்.

'ஒரு டாக்டருக்கு, இன்னொரு டாக்டர் மனைவியா வர்ற மாதிரி, ஒரு எழுத்தாளருக்கு எழுத்தாளரே மனைவியா வாய்க்கிறது பாக்கியம்...' என்று சொன்ன கோபு, தொடர்ந்து மனைவியை உற்சாகப்படுத்தினார்.

இதன் காரணமாக, எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, கமலா சடகோபனுக்கு, விருது வழங்கி கவுரவித்தார்.

இந்த தம்பதியரின் சந்தோஷத்தோடு, கல்யாண பரிசு படம், நகைச்சுவையோடு பிரமாதமாக வெள்ளி விழா கண்டது. தெலுங்கிலும், ஹிந்தியிலும் வெளியாகி, வசூலை குவித்தது.

கடந்த, 1962ல், ஸ்ரீதர் இயக்கத்தில், கோபுவின் நகைச்சுவை வசனத்துடன் வெளியான வெற்றித் திரைப்படம், நெஞ்சில் ஓர் ஆலயம்.

இதில், முத்துராமன், கல்யாண்குமார், தேவிகா, வி.எஸ்.ராகவன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குழந்தை நட்சத்திரமான, குட்டி பத்மினிக்கு மிகுந்த புகழை ஈட்டித்தந்த படம்.

காதலர்களான, கல்யாண்குமாரும் - தேவிகாவும், விதிவசத்தால் பிரிந்து விடுகின்றனர். தேவிகா, தான் மணந்து கொண்ட முத்துராமனின் இதய நோயை குணப்படுத்த, மருத்துவரிடம் செல்கின்றனர். மருத்துவராக, முன்னாள் காதலர் கல்யாண் குமார் இருப்பதை கண்டு, திகைப்பும், அதிர்ச்சியும் கொள்வதில் துவங்கும் இத்திரைப்படம்.

பெண்மை, கற்பு, கடமை, பெருந்தன்மை ஆகிய, பல பெரும் நற்குணங்களை சிறப்புற எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

'எங்கிருந்தாலும் வாழ்க... என்ன நினைத்து என்னை... முத்தான முத்தல்லவோ... நினைப்பதெல்லாம்... ஒருவர் வாழும் ஆலயம்... சொன்னது நீதானா...' போன்ற காலத்தால் அழியாத பாடல்கள், இடம் பெற்ற படம்.

இந்த படத்தில் தான், நாகேஷ் அறிமுகமானார். நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜி தான், நாகேஷை அழைத்து வந்து, 'இந்த தம்பி, சின்ன சின்ன வேடங்களில், நாடகங்களில் நடிச்சுக்கிட்டு இருக்கார். வாய்ப்பு இருந்தா, நம் படத்துல நடிக்க வையுங்க...' என்று, கோபுவிடம் சொல்லிச் சென்றார்.

அந்தப் படத்தில், ஒரு சில காட்சிகளே வரக்கூடிய வேறு வேடம் தான், முதலில் நாகேஷுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், படம் முழுவதும் வரக்கூடிய, 'வார்டு பாய்' வேடத்தில் நடிக்க வேண்டியவர், அன்று படப்பிடிப்பிற்கு வரவில்லை.

எனவே, 'இந்த பையனையே, அந்த வேடத்துக்கு போட்டுடு...' என்று, சொல்லி விட்டார், ஸ்ரீதர்.

இப்படி திடீர் அதிர்ஷ்டமாக கிடைத்த வாய்ப்பை, நன்கு பயன்படுத்திக் கொண்டார், நாகேஷ். அந்தப் படத்தில் அவரது கேரக்டர் மிகவும் ரசித்து பேசப்பட்டது.

அதன் பிறகு, ஸ்ரீதர்,- கோபுவின் படங்களின், ஆஸ்தான நடிகராகவே மாறிப் போனார்; கோபுவிடம், அடாபுடா போட்டு பேசக்கூடிய பாசக்கார நண்பராகி விட்டார், நாகேஷ்.

'நீ எப்ப, 'யூ கோ அஹேட் செல்லப்பா...' என்று, எனக்கு வசனம் வெச்சியோ, அன்னையிலிருந்து என் வாழ்க்கை பிரமாதம் கோபு...' என்று, நன்றியோடு குறிப்பிடுவார்.

படப்பிடிப்பு இல்லாத வேளையில், நாகேஷ் இருக்குமிடம், கோபு வீடு தான். மணிக்கணக்கில் வம்பளத்துக் கொண்டிருப்பார்.

போலீஸ்காரன் மகள், கல்யாண பரிசு மற்றும் நெஞ்சில் ஓர் ஆலயம் என்று, சோக படங்கள் தந்த வெற்றி காரணமாக, அடுத்து, அதே மாதிரி ஒரு படம் பண்ண, கோபுவை அழைத்து, கடற்கரை காந்தி சிலையருகே வந்தார், ஸ்ரீதர். காந்தி சிலை தான், இவர்கள் இருவரது, 'பேவரிட்' இடம்.

இப்போதெல்லாம், 'ஸ்டோரி டிஸ்கஷன்' என்று, கும்பலாக, 'ரூம்' போட்டு பேசிக்கிறாங்க... வெளிநாட்டுக்கு போய் யோசிக்கிறாங்க... 'டிஸ்கஷ'னுக்கே பல லட்சம் செலவு செய்யிறாங்க... ஆனால், நானும், ஸ்ரீதரும், காந்தி சிலையை சுற்றியிருக்கிற திண்டுல உட்கார்ந்து, பேசிப் பேசியே பல படங்களை உருவாக்கினோம். எங்களோட அதிகபட்ச, 'ஸ்டோரி டிஸ்கஷன்' செலவு, சுண்டலும், டீயும் தான்.

நெஞ்சில் ஓர் ஆலயத்தை சுமந்து, அதே போன்ற கதை தேடலுடன் காந்தி சிலைக்கு வந்த ஸ்ரீதர், கதையை ஆரம்பித்தார். நான் இடைமறித்து, 'ஒரு மாறுதலுக்கு, முழு நீள நகைச்சுவை படம் எடுத்தால் என்ன...' என்றேன்.

'என்னை வெச்சு காமெடி படமா...' என்று அதிர்ந்தார், ஸ்ரீதர்.

ஜனாதிபதி விருது பெற்றது!



நெஞ்சில் ஓர் ஆலயம் படம், பின்னர், ராஜேந்திர குமார், ராஜ்குமார், மீனாகுமாரி ஆகியோரின் நடிப்பில், தில் ஏக் மந்திர் எனும் பெயரில், 1963ல், ஹிந்தியில் வந்தது,

மானசி மந்திரம் எனும் பெயரில், 1966ல், தெலுங்கிலும், குங்கும ரக்சி என்ற பெயரில், கன்னடத்திலும் வெளியானது.

அந்நாட்களில் பரிசோதனை முயற்சியாக, திரைப்படம் முழுவதுமே ஒரு மருத்துவமனை அரங்கமைப்பில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது.

இதில், பாடல்கள், காட்சி அமைப்புகள், கோணங்கள் ஆகியவற்றிற்கு மிகுந்த அளவில் பாராட்டு கிடைத்தது. இத்திரைப்படத்திற்கு, ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.

தொடரும்

எல். முருகராஜ்






      Dinamalar
      Follow us