தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சுருட்டு முருகன்!

சுருட்டு முருகன்!

சுருட்டு முருகன்!


PUBLISHED ON : ஜன 21, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 21, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பக்திக்கு பணமோ, பொருளோ தேவையில்லை; சிவலிங்கத்தை வணங்க, சாக்கிய நாயனாருக்கு பூ கிடைக்கவில்லை. அதனால், கீழே கிடந்த கல்லை, பூவாகக் கருதி, லிங்கத்தின் மீது எறிந்து வழிபட்டார். அது, கல்லென்று கருதவில்லை, பரம்பொருள்; அவரது பக்தியின் ஆழத்தைத் தான் பார்த்தார். இதுபோல, குளிரில் நடுங்கிய பக்தர் ஒருவருக்கு, முருகப்பெருமான் சுருட்டு வழங்கிய சம்பவம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவிலில் நடந்துள்ளது. அக்கதையை தெரிந்து கொள்வோமா...

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பறந்த பொறிகள், ஆறு குழந்தைகளாயின. அவர்களை, கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். அவர்களில் ஒருவர், வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.

ஒருமுறை குழந்தைகள் அழுத போது, என்ன செய்வதென அறியாமல் தவித்தாள், அருந்ததி. இதுகண்ட வசிஷ்டர், 'குழந்தையின் அழுகையை நிறுத்த, பாலுாட்ட வேண்டும் என்ற எளிய வழி கூட தெரியாத நீ, என்னை விட்டு சில காலம் பிரிந்திரு...' என, தண்டனை கொடுத்தார். உடனே, முருகனுக்கு கோபம் வந்து விட்டது.

'முனிவரே... குழந்தையின் அழுகையை நிறுத்த பாலுாட்ட வேண்டியது தாயின் கடமை தான்; அதே நேரம், இதற்காக, நீர் அவளுக்கு அறிவுரை சொல்வதை விடுத்து, தண்டிப்பது தவறு. எனவே, நீர் உன் தவ வலிமையில் ஒரு பகுதியை இழப்பீராக...' என, சாபமிட்டார்.

இழந்த தவ வலிமையை மீண்டும் பெற, தன் மனைவியுடன் விராலிமலை வந்தார், வசிஷ்டர். வள்ளி - தெய்வானை சமேதகராக இருந்த சுப்பிரமணியரை வணங்கி, அருள் பெற்றார்.

இக்கோவிலில், சரிவர படிக்காத குழந்தைகளுக்காக பிரார்த்தனை நடைபெறும்.

விராலிமலையில் வசித்த ஞானவரோதயன் என்ற சிறுவன், பள்ளிக்குச் செல்லாமல் அடம் பிடித்தான். வற்புறுத்தி, கொண்டு போய் விட்டாலும், ஆசிரியருக்கு தெரியாமல் ஓடி விடுவான். அவனைத் திருத்த எடுத்த முயற்சிகள் வீணாயிற்று. ஒருமுறை பெற்றோர் தண்டிப்பர் எனப் பயந்து, விராலிமலை முருகன் கோவிலுக்குள் புகுந்து, ஒளிந்து கொண்டான். படிப்பு தலையில் ஏறாத தன்னை எண்ணி, நொந்து அழுதான். முருகப் பெருமான் அவனுக்கு காட்சியளித்து, அவனைப் பெரும் கவிஞராக்கினார்.

அக்கவிஞர், அந்நாட்டு மன்னன் அழகிய மணவாளனைச் சந்தித்து, கோவில் திருப்பணிக்கு ஏற்பாடு செய்தார். இதனால், சரியாக படிக்காத குழந்தைகள் பெயரில் இங்கு அர்ச்சனை செய்வர்.

மேலும், வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில், சந்தியா கால பூஜையில், (மாலை பூஜை) சுருட்டு ஒன்றை முருகன் முன் வைக்கின்றனர். காரணம், இக்கோவில் திருப்பணி நடந்த காலத்தில், கருப்பமுத்து எனும் முருக பக்தர் கோவிலுக்கு வந்துள்ளார். வழியில் பெரு மழை பெய்து, அங்கிருந்த நதியில் வெள்ளம் கரை புரண்டோடியது. குளிரில் நடுங்கிய அவர், சுருட்டு பிடித்தார்.

அவர் அருகில் நின்றிருந்த வரும் குளிரால் நடுங்கினார். அவரிடம், 'சுருட்டு பிடிக்கிறீர்களா... குளிர் குறையும்...' என்றார் கருப்பமுத்து. அந்த நபரும் சுருட்டு வாங்கிப் பிடித்தார். பின், ஆற்றைக் கடக்க கருப்பமுத்துவுக்கு உதவிய அந்த நபர், மாயமாகி விட்டார்.

பின், கோவிலுக்கு சென்று, முருகன் சன்னிதியில் நின்றார், கருப்பமுத்து. அதேநேரம், சன்னிதியில் புகைக்கப்பட்ட சுருட்டு துண்டு கிடக்கவே, அதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்தார், அர்ச்சகர். பின்னர், நடந்ததைக் கேள்விப்பட்டு, ஆச்சரியத்தில் மூழ்கினார்.

அன்று முதல், மாலை பூஜை வேளையில், முருகனுக்கு சுருட்டு வைக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இடைப்பட்ட காலத்தில், இப்பழக்கத்திற்கு தடை விதித்தார், புதுக்கோட்டை மகாராஜா. அவரது கனவில் முருகன் தோன்றி, 'புகைப்பதற்கு இதில் முக்கியத்துவம் இல்லை; துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வகையில் உதவவேண்டும் என, என் பக்தர் விரும்பினார்; அந்தப் பழக்கம் மற்றவர்களுக்கும் வர வேண்டுமென்பதற்காகவே, தகுதியற்றதாயினும், அவரது பரிசை ஏற்றுக் கொண்டேன். இந்த வழக்கம் தொடரட்டும்...' என்றார். இன்று வரை, மாலையில் சுருட்டு வைக்கப்பட்டு, யாருக்காவது பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

திருச்சி - மதுரை சாலையில், 31 கி.மீ., துாரத்தில் உள்ளது, விராலிமலை!

- தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us