தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தேங்காய் சோறும், விரால் மீன் குழம்பும்!

தேங்காய் சோறும், விரால் மீன் குழம்பும்!

தேங்காய் சோறும், விரால் மீன் குழம்பும்!


PUBLISHED ON : ஆக 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 11, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டல், 'பார்' ஒன்றின் முன், சிவப்பு நிற, 'டொயோட்டா யாரிஸ்' காரில் வந்து இறங்கினான், கேசவ்.

வயது, 35, உயரம், 180 செ.மீ., திராவிட நிறம். ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் வியாபாரம் செய்யும் தொழிலதிபன். 'ஜீன்ஸ் பேன்ட், டி - சர்ட்' உடுத்தியிருந்தான். இடது கையில், 'சாம்சங் ஸ்மார்ட்போன்' வைத்திருந்தான்.

''ஹாய், கேசவ்!''

''ஹாய், சந்தோஷ்!''

இருவரும் சிரித்து பேசியபடியே, தங்களின் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைக்கு நடந்தனர். 'பாரில்' குறைந்த அளவில் வெளிச்சமும், இசையும் கலந்தோடின.

கேசவுக்கு, 'ரெட் லேபிள் விஸ்கி'யும், சந்தோஷுக்கு, 'எலிபன்ட் பஞ்ச் காக்டெயி'லும் வந்து சேர்ந்தன. சோடாவும், ஐஸ்கட்டிகளும் கலந்து, அவரவர் கோப்பையை உயர்த்தி, 'சியர்ஸ்' கூறினர்.

உற்சாக பானத்தை உறிஞ்சியபடி, இரண்டு நண்பர்களும் பேச ஆரம்பித்தனர்.

பங்கு சந்தை, அரசியல், இலக்கியம் என, கடைசியில், சமையலில் வந்து நின்றது, பேச்சு.

''சமையலை பற்றியும், சாப்பிடுவது பற்றியும் பேசுவது, அநாகரிகமான விஷயம் என்ற கருத்து, போன தலைமுறையோடு காணாமல் போய் விட்டது. சமையல் என்பது, சிம்பொனி இசை வடிவம் போல. உன்னதமான சமையல், ஆன்மாக்களுக்கும் உணவிடும் விஷயம். எந்த நாட்டில் சமையல் கலை உயர்ந்து நிற்கிறதோ, அந்த நாடு உயர் கலாசார பெருமைக்கு உரியது,'' என்றான், கேசவ்.

''எனக்கொரு சந்தேகம், வீடுகளில் பெரும்பாலும் பெண்களே சமைக்கின்றனர். வீடு தவிர்த்து, மற்ற எல்லா இடங்களிலும் ஆண்களே சமைக்கின்றனர்... ஏன்?'' என்றான், சந்தோஷ்.

''சமையலை வணிக மயமாக்குவதில், ஆண்கள் கில்லாடிகள் நண்பா!''

''பெரும்பாலும் சமையல் கலை நிபுணர்கள் குண்டாகவே இருக்கின்றனர்... அது ஏன்?''

''விரும்பி சமைப்பதை, முதலில் வயிறார ருசி பார்ப்பவர்கள் அவர்களே,'' என்றான், கேசவ்.

''சைவமா, அசைவமா, எது சமைப்பதில் சிரமம்?''

''உயர்தர சைவம் சமைப்பது மிக கடினம்,'' என்றான், கேசவ்.

''நாம், 'டிவி' சமையல் நிகழ்ச்சியை பார்த்து, சமைத்து சாப்பிட்டால் என்ன ஆகும்?''

''சாப்பிட்ட ஓரிரு நாட்களில், 'ஹார்ட் அட்டாக்' வந்து செத்து போவோம். கணவன் - மனைவியில், கணவனுக்கு சமைக்க தெரிந்தால், அந்த வீட்டில் ஒற்றுமையும், சகிப்புத்தன்மையும் நிலவும்,'' என்றான், கேசவ்.

''முப்பது ஆண்டுகளாய் சமைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை விட, புதிதாய் சமைப்பவள், சமையலில் அசத்துகிறாளே... அதெப்படி?'' என்றான், சந்தோஷ்.

''என்ன தான் சமையல் கலையை, இடையில் கற்றுக் கொள்வது என, நாம் கூறினாலும், அந்த திறமை ஒருவருக்கு மரபியல் ரீதியாக தொடர்வதாலேயே, நள பாகமாக்குகிறது,'' என்றான், கேசவ்.

''நீ சொல்வது தவறு நண்பா... மரபியல் ரீதியாக, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு நீரிழிவு நோயும், உயர் ரத்த அழுத்தமும் தான் வரும்; சமையல் வராது...

''கற்றுக்கொள்ள வேண்டும் என, வெறியுடன் கிளம்பினால், சமையலை ஒரே நேரத்தில் கற்றுக் கொள்ளலாம். ஆயிரத்தில், 900 பெண்கள் திருமணத்திற்கு முன் சமைக்க தெரியாதவர்கள். அதே பெண்கள், திருமணத்திற்கு பின் துாள் கிளப்புகின்றனரே!''

''துாள் கிளப்பும் பெண்களின் அம்மாக்களும், பாட்டிகளும், கொள்ளு பாட்டிகளும் சமையல் கலை நிபுணிகளாக இருந்திருப்பர்,'' என்றான், கேசவ்.

''உன்னுடைய தியரியை தவிடு பொடியாக்கி காட்டுகிறேன், நண்பா... உனக்கும், எனக்கும் ஒரு பந்தயம்,'' என்றான், சந்தோஷ்.

''என்ன பந்தயம்?''

''நம், 'தினமலர்' நாளிதழில், 'அறவே சமைக்கத் தெரியாத, 25 வயது சமையல்காரர் தேவை' என, விளம்பரம் கொடுப்போம்!''

''சரி!''

''வருகிறவனை, நம் சேலம், விருந்தினர் விடுதியில், சமையல்காரனாக பணி அமர்த்துவோம். அவனுக்கு ஒரு ஆண்டு அவகாசம் தருவோம். அதற்குள் அவன், நமக்காக, 104 தடவை சமைக்க வேண்டி வரும். ஒரு அட்டகாசமான, உலக தரமான, 'ரெசிபி'யை அவன் சமைத்து கொடுத்து விட்டால், பிழைப்புக்காக, ஒருவன் சமையலின் உச்சத்தை தொடுவான் என்பதை நீ ஒத்துக்கொள்ள வேண்டும்.

''பந்தயத்தில் தோல்வி அடைந்ததற்காக, நீ, என்னிடம், 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். ஒரு ஆண்டிற்குள் அவன் சமையலே கற்றுக்கொள்ளா விட்டால், நீ ஜெயித்து விடுவாய். நான் உனக்கு, 10 லட்சம் ரூபாய் தருவேன்,'' என்றான், சந்தோஷ்.

''சமையல் போட்டிக்கு வருபவன், சமையல் கலை குறிப்பு புத்தகங்களை வாசிக்கலாமா?'' என்றான், கேசவ்.

''வாசிக்க கூடாது, நண்பா,'' என்றான்.

''நல்லது... இப்போது, உற்சாக பான கச்சேரியை தொடர்வோம்,'' என்றான், கேசவ்.

கார்களை, 'பார்க்கிங்'கில் நிறுத்தி, ஆட்டோக்களில் வீடு திரும்பினர்.

குளிர்பதன அறையில், கேசவும், சந்தோஷும், 'புல் சூட்' அணிந்து அமர்ந்திருந்தனர்.

தயங்கியபடியே உள்ளே பிரவேசித்தான், ஸ்ரீனிவாசன். இள வயது குண்டு கல்யாணம் போலிருந்தான். தலை கேசத்தை துாக்கி சீவியிருந்தான். நெற்றியில் குங்குமம் தீற்றியிருந்தான்.

''வணக்கம், சார்!''

''வணக்கம்... யாரப்பா நீ?''

''என் பெயர் ஸ்ரீனிவாசன். வயது, 24, சொந்த ஊர், பள்ளிப்பாளையம். பிளஸ் 2 பெயில்.''

''சமைக்க தெரியுமா?''

''சுடு தண்ணி போடக் கூட, அடுப்பு பற்ற வைக்க தெரியாது. மளிகை சாமான் மற்றும் சில காய்கறிகளின் பெயரோ எனக்கு பரிட்சயமில்லை. சாப்பாட்டின் மீது பெரிய அளவில் ஈடுபாடு கிடையாது. பசி வந்தால், வான்கோழி போல, நான்கு கவளங்களை கபக்குவேன்.''

''உங்க அம்மாவுக்கு சமைக்க தெரியுமா?''

''அப்பா உயிருடன் இல்லை. அம்மா தான் இருக்கிறார். அவர் சமைக்க மாட்டார், ஓட்டலிலிருந்து தான் வாங்கி சாப்பிடுவோம்.''

''உங்க குடும்ப அங்கத்தினர் யாருக்காவது சமைக்க தெரியுமா?''

''எங்க அம்மாவுக்கு, ஒரே பையன்!''

''உங்கப்பா என்ன தொழில் பார்த்தார்?''

''பழைய இரும்பு கடை வைத்திருந்தார்.''

''உங்க அம்மா வழி தாத்தா, அப்பா வழி தாத்தா!''

''அவர்களுமே பழைய இரும்பு கடை வியாபாரம் தான் பார்த்தனர்!''

''உண்மையிலேயே, உனக்கு சமைக்க தெரியாது என்பதை மெய்படுத்த, உயிர் நண்பர் இருவரிடமும், உன் பக்கத்து வீட்டுக்காரர் இருவரிடமும் கையெழுத்து பெற்றுத் தரவேண்டும்!''

''சரி!''

''குழப்பமான எங்க விளம்பரம் பார்த்து, எந்த நம்பிக்கையில் எங்களது நேர்காணலுக்கு வந்தாய்?''

''வேலை இல்லை... வீட்டில் சும்மா இருக்கிறேன்... உங்களிடமாவது ஏதாவது வேலை கிடைத்து விடாதா என்ற குருட்டு நம்பிக்கையில் வந்தேன்!''

''சபாஷ்... நாளை காலை, எங்கள் சேலம் விருந்தினர் மாளிகையில், சமையல்காரனாக பணி அமர்த்தப்படுகிறாய். உனக்கு, மாதம், 10 ஆயிரம் சம்பளம்.''

கை கூப்பினான், ஸ்ரீனிவாசன்.

முதல் மாதம் -

சமையலறை முழுக்க, பெருச்சாளி கடித்து குதறியது போல, சமையல் பொருட்களை வாரி இறைத்திருந்தான், ஸ்ரீனிவாசன்.

இரண்டு முதல், 11ம் மாதம் வரை, சமையலை பூதமாக பாவித்து, அதனுடன் வாய் சண்டை, கை சண்டை, 'பாக்ஸிங்' போட்டிருந்தான்.

ஒரு ஆண்டு கெடுவின், இறுதி நாள்.

சமையல் அறையிலிருந்து, இனிய நறுமணம் கமழ்ந்தது.

உற்சாக பானம் உறிஞ்சி கொண்டிருந்த கேசவ் மற்றும் சந்தோஷிடம், ''முதலாளிஸ்... சாப்பிட வருகிறீர்களா?'' என்றான், ஸ்ரீனிவாசன்.

''சீனி... சாப்பாட்டை அஞ்சப்பரிலிருந்து வாங்கினாயா?'' என்றான், கேசவ்.

''இல்லை... நானே சமைத்தேன்!''

''என்ன சமைத்தாய்?''

''தேங்காய் சோறும், விரால் மீன் குழம்பும். தொட்டுக்கொள்ள கருப்பட்டி கலந்த இனிப்பு மாங்காய் சட்னி. பொரித்த விரால் மீன்களில் பாதியை, தேங்காய் பாலில் ஊற போட்டிருக்கிறேன்,'' என்றான், ஸ்ரீனிவாசன்.

''யாராவது சமையலுக்கு உதவி செய்தனரா?''

''இல்லை... நானே,'' என்று கூறிய சீனி, பரிமாறினான்.

''தேவாமிர்தம்... இப்படி ஒரு சுவையான சாப்பாட்டை, என் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை. விரால் மீன் குழம்பை, 'ஸ்டிரா' போட்டு குடிக்கலாம் போல... இனிப்பு மாங்காய் சட்னி அட்டகாசம்...

''பொரித்த விரால் மீன், தனி சுவை என்றால், தேங்காய் பாலில் ஊற வைத்த பொரித்த விரால் மீன்கள், வேறொரு சுவை... தேவலோகத்திலிருந்து ஒரு தேவதை வந்து சமைத்து கொடுத்து போனது போலிருக்கிறது. இந்த சமையலை யார்கிட்ட கத்துக்கிட்ட?''

''பண்ணனும்ன்னு தோணுச்சு... பண்ணினேன்.''

''நீதான் சமையல் பண்ணினேன்னு நாங்க எப்படி நம்புறது?''

''என் முழு சமையலையும், 'வீடியோ' பண்ணி வச்சிருக்கேன்... பாருங்க முதலாளி!''

''பனிரெண்டு மாதமா வராத சமையல் திறமை, கடைசி நாள், கடைசி நொடியில் எப்படி வந்தது சீனி?'' என்றான், கேசவ்.

''நீங்க குடுக்கற, 10 ஆயிரம் சம்பளத்தை வச்சுதான், எங்க குடும்பம் மூச்சு விடுது... இரண்டாவது ஆண்டும், நீங்க என்னை சமையல்காரனாக வைக்கணும்ன்னா, சமையல் செஞ்சே ஆக வேண்டிய கட்டாயம்... நீச்சல் தெரியாது என, கிணற்றின் மேலே நின்றிருந்த நான், ஆனது ஆகட்டும் நீந்துவோம் அல்லது மூழ்கி சாவோம் என்ற முடிவுடன் குதித்தேன்,'' என்றான், ஸ்ரீனிவாசன்.

''சந்தோஷ்... பந்தயத்தில் நான் தோற்று விட்டேன். இதோ, 'பேடிஎம்'மில் உனக்கு, 10 லட்சம் ரூபாய் அனுப்புகிறேன்,'' என்றான், கேசவ்.

முறுவலித்தான், ஸ்ரீனிவாசன்.

பள்ளிப்பாளையம்.

ஸ்ரீனிவாசன் வீட்டை கேசவும், சந்தோஷும் கண்டுபிடித்தனர்.

கடையிலிருந்து வாங்கி வந்த டீயையும், உளுந்த வடையையும் சாப்பிட்டு கொண்டிருந்தாள், ஸ்ரீனிவாசனின் அம்மா.

''வாங்க முதலாளி... வாங்க,'' என, இருவரையும் வரவேற்றான், ஸ்ரீனிவாசன்.

''எங்க பந்தயத்துல யார் ஜெயிச்சோம்ன்றது ஒரு பக்கம் இருக்கட்டும்... ஆனா, நீ வச்ச தேங்காய் சோறும், விரால் மீன் குழம்பும் உலக தரம். அதை சிலாகித்து, உனக்கு, ஒரு லட்ச ரூபாய் பரிசு தர விரும்புகிறோம்,'' என்றவாறு, பணத்தை நீட்டினான், கேசவ்.

கை நீட்டி வாங்க போனான், ஸ்ரீனிவாசன்.

''குழந்தைகளா... என்ன காரணத்துக்காக, சீனிக்கு ஒரு லட்சம் தர்றீங்க?'' எனக் கேட்டாள், பக்கத்து வீட்டு, 98 வயது பாட்டி.

தங்களது பந்தயம், ஸ்ரீனிவாசனின் சமையலையும் கூறினர்.

''சீனியின் அம்மா வழி தாத்தா, பட்டுதுரை, இரும்பு வியாபாரம் செஞ்சதா சொன்னது, பாதி பொய். அவர், அசைவ சமையல் நிபுணர். அவர், சமையல் செஞ்சா சுத்துப்பட்டி, 40 கிராமங்களும் சொக்கி நிக்கும்... அவர் ஒரு தடவை பிரியாணி செய்யும்போது, அவரின் தொழில் எதிரிகள், பிரியாணி தேக்ஸாவில் பல்லியை போட்டு விட்டனர்.

''பிரியாணி சாப்பிட்ட, 200 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம். ஊர் பஞ்சாயத்து கூடி, 'இனி, சமையல் தொழிலில், பட்டுதுரை ஈடுபடக் கூடாது; அவரும், அவரின் குடும்ப அங்கத்தினர் யாரும், வீட்டிலும் கூட சமைக்கக் கூடாது...' என, எழுதி வாங்கி விட்டது.

''இரும்பு வியாபாரத்துக்கு தாவி விட்டார். பட்டுதுரை. அவரின் ஸ்பெஷல் சமையல் என்ன தெரியுமா? தேங்காய் சோறும், விரால் மீன் குழம்பும்... தொட்டுக்க, கருப்பட்டி சேர்த்து மாங்கா சட்னி வைப்பார் பாருங்க... அப்படியே சப்புக்கொட்டி சாப்பிடலாம். பொரித்த மீன்கள், ஒரு சுவைன்னா, தேங்காய் பாலில் ஊற வைத்த பொரித்த மீன்கள், வேறொரு சுவை,'' எனக் கூறி முடித்தாள், பாட்டி.

கேசவும், சந்தோஷும் அசந்து போயினர்.

''ஜூனியர் பட்டுதுரை... இனி, நீதான் எங்க நிரந்தர சமையல் கலைஞன்... கொடுத்த ஒரு லட்ச ரூபாய் உன்னிடமே இருக்கட்டும்... திறமைகள், மரபியல் ரீதியாகவும் வரக்கூடும்... சொந்த ஈடுபாடான, உழைப்பிலும் வரக்கூடும்... யார் கண்டது, எல்லாம் அவன் செயல்,'' என்றான், சந்தோஷ்.

''முதலாளிஸ்... நாளை மதியம் என்ன சமையல் செய்யட்டும்?''

''அதே தேங்காய் சோறும், விரால் மீனும், தொட்டுக்க, கருப்பட்டி கலந்த மாங்கா சட்னி. மறந்திராத, பொரித்த மீன்களும், தேங்காய் பாலில் ஊறிய பொரித்த மீன்களும் கூட இருக்கட்டும்,'' என்றான், கேசவ்.

அனைவரும் பள்ளிப்பாளையம் வெடிக்க சிரித்தனர்.

ஏ. பிர்தவுஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us