PUBLISHED ON : அக் 31, 2010

நவ.,5 தீபாவளி!
இந்த கலியுகத்தில், இளைஞர்களை ஈர்க்கும் கவர்ச்சி சக்திகள் அதிகமாகி விட்டது. இவற்றிலிருந்து தங்கள் பிள்ளைகளை எப்படி பாதுகாப்பது என்று, பெற்றோர் தவியாய் தவிக்கின்றனர். ஆனால், இன்று நேற்றல்ல. முந்தைய யுகங்களிலும் உலக கவர்ச்சியால் ஈர்க்கப்பட்ட குழந்தைகளை திருத்த, பெற்றோர் சிரமப்பட்டுள்ளனர். அந்த இளைஞர்கள் தங்கள் பழக்க வழக்கங்களால், தாங்க முடியாத சிரமத்திற்கு ஆளாகும் போது திருந்தியும் இருக்கின்றனர் அல்லது பெற்றோரால் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். பூமாதேவிக்கும், பெருமாளுக்கும் பிறந்த புத்திரன் பவுமன். 'பவுமன்' என்றால், 'பூமியின் பிள்ளை' எனப்பொருள். மனிதனாகப் பிறந்த அவன், அசுர குணங்களுடன் வாழ்ந்தவன் என்பதால், 'நரகாசுரன்' என பெயர் பெற்றான். 'நரன்' என்றால், 'மனிதன்! ஆனால், இவனது அகங்கார குணம் இவன் பின்னால், 'அசுரன்' என்ற பட்டத்தைக் கட்டி விட்டது.
இவன், இறைவனிடம் சாகாவரம் வேண்டுமென கேட்டான். பிறந்தவர்கள் இறந்தே ஆகவேண்டுமென்ற கட்டாயம் இருப்பதாக அவர் கூறவே, 'தன் தாயைத் தவிர, வேறு யாராலும் தன்னை கொல்ல முடியாது...' என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றான். பெற்றவள் தன்னைக் கொல்ல மாட்டாள் என்பது அவனது கணிப்பு.
தான் பெற்ற வரத்தின் காரணமாக ஆணவமடைந்த அவன், பூலோகம் மட்டுமின்றி தேவலோகத்தையும் கைப்பற்றினான். தேவர்களை, தன் பணியாட்களைப் போல் நடத்தினான். அவன் செய்யாத அராஜகமே இல்லை. அவனது கொடுமை பொறுக்க முடியாத தேவர்கள், திருமாலிடம் முறையிட்டனர். மாயக்கள்வனான பெருமாள், தான் பெற்ற பிள்ளையாயினும் தர்மம் தவறி நடந்த அவனைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என முடிவெடுத்தார். அந்தப் பிறவியில், பூமாதேவி சத்யபாமாவாக பிறந்து, திருமாலைத் திருமணம் செய்திருந்தாள். சத்யபாமா தேரோட்டுவதில் வல்லவள். அவளுக்கு, முந்தையப் பிறவியில் தான் பெற்ற மகனைப் பற்றிய தகவல் தெரியாது. நரகாசுரனுடன் போர் தொடுக்கப் போவதாகவும், அதற்கு தேரோட்டியாக சத்யபாமாவே வர வேண்டுமென்று, திருமால் சொன்னதும், மகிழ்ச்சியுடன் சம்மதித்தாள்; தேர் பறந்தது. நரகாசுரனுடன் யுத்தம் செய்தார் திருமால். அவரால், நிச்சயம் அவனை கொல்ல முடியாது. ஏனெனில், அவன் பெற்ற வரம் தடுத்தது. எனவே, அவனிடம் அடிபட்டு, மயங்கி விழுந்தது போல நடித்தார். தன் கணவரைக் காப்பாற்றும் ஆவேசத்தில், நரகாசுரனை நோக்கி பாணம் தொடுத்தாள் சத்யபாமா. நரகாசுரன் கீழே சாய்ந்தான். அப்போது தான் எதிரே நிற்பது தன் தாய் என்பது தெரிந்தது; சத்யபாமாவுக்கும் உண்மை புரிந்தது. தன் மகனுக்காக அவள் திருமாலிடம்,'என் மகன் இறந்ததற்காக நான் வருந்தினாலும், இந்த உலகமே மகிழ்கிறது. தங்கள் வாழ்வில் இருள் நீங்கி, வெளிச்சம் வந்தது போல் அவர்கள் உணர்கின்றனர். இவனது வாழ்வு உலக மக்களுக்கு பாடமாக அமையும் வகையில், அனைவரும் விளக்கேற்றி இந்நாளை தீபாவளியாகக் கொண்டாடட்டும்...' என்று, திருமாலிடம் வேண்டுகோள் வைத்தாள்; திருமாலும், அந்த வரத்தை அளித்தார். இளைஞர்களே... நரகாசுரன் சாகும் நேரத்தில் திருந்தியது போல் இல்லாமல், நீங்கள் உடனடியாகத் திருந்தி, பெற்றோரை மகிழ்விக்கவும், நல்ல பண்பெனும் தீபத்தை மனதில் ஏற்றவும் உறுதியெடுங்கள்.
***
