தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தாண்டி வா பெண்ணே!

தாண்டி வா பெண்ணே!

தாண்டி வா பெண்ணே!


PUBLISHED ON : ஜூலை 01, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேலை முடிந்து விட்டது. ஆனால், நிமிர்ந்து பார்ப்பதற்கே அச்சமாக இருந்தது. எங்கே வாசு வந்து நிற்பானோ என்று இருந்தது. ஆனால், விழிகள் தன்னிச்சையாக இயங்கின. இரண்டு பக்கமும் அடிப்பார்வையாக அவனைத் தேடின.

''வேலை முடிஞ்சுதா கல்பனா?''

அவன்... அவன்... அவனே தான்... வந்து விட்டான்.

''இல்லே... ஆமா... முடியலே,'' என்று குழறினாள்.

''ரிலாக்ஸ் கல்பனா... நோ டென்ஷன் ப்ளீஸ்... நான் வெயிட் பண்றேன்.''

''ஏன்... ஏன் வெயிட் பண்ணணும்?'' என்றாள் மெல்ல.

''சரி... அப்ப கெளம்பட்டுமா?''

''தாராளமா.''

''உன் மனசு சொல்லட்டும்... அப்ப கெளம்பிடறேன்.''

''என்ன சொல்லணும்?''

''வாசு... நீ போ, வேண்டாம் எனக்குன்னு!''

எப்படி சொல்வது? அய்யோ... ஏன் இந்த பாழும் மனசு பாடாய் படுத்துகிறது? குழப்பமும் தயக்கமுமாகவே ஓடி விடுமா வாழ்க்கை... இவற்றிலிருந்து விடுபட்டு, தன்னுணர்வுடன் செயல்படவே முடியாதா?

கண்ணியமான இடைவெளியில், பக்கவாட்டில் வந்து நின்றான் வாசு.

''ப்ரீயா இரு கல்பனா. எப்ப உனக்கு வீட்டுல சொல்லணும்ன்னு தோணுதோ அப்ப சொல்லலாம். அப்பா, அம்மா சம்மதிச்ச பிறகு உனக்கு ஒண்ணும் தயக்கம் இருக்காது தானே, என்னை சரியா நிமிர்ந்து பார்க்க?'' என்றான் முறுவலுடன்.

''வரேன் கல்பனா... இன்னிக்கு, 'ரோட் ஷோ' இருக்கு... சாலையோர துாரிகைகள்... புதுசா வரைஞ்ச பத்து ஓவியங்களை வைக்கிறேன் கண்காட்சியில... முடிஞ்சா வா... நோ கம்பல்ஷன்... வரேன்.''

கிளம்பி விட்டான். கடைசி படியில் இறங்கியபோது, திரும்பிப் பார்த்தான். அவளும் பார்த்தாள். மெல்லிய இதமான மற்றுமொரு புன்னகையுடன், அவன் உருவம் மறைந்தது.

பெருமூச்சுடன் அவள் கணினியை மூடினாள்.

எப்போதும் போல வீடு அமைதியாக இருந்தது. சாய்வு நாற்காலியில் இருந்தபடி, அப்பா, திருவருட்பா வாசித்துக் கொண்டிருந்தார். துளசிக்கு நீர் வார்த்துவிட்டு, வானத்தில் கருடன் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. அலமாரியில் எல்லா பொருட்களும் அதனதன் இடத்தில் இருந்தன. புத்தகங்கள் வரிசை, ராணுவ ஒழுங்குடன் இருந்தன. நேற்று வாசித்த தினசரியின் ஓரம் கூட மடியாமல் அயர்ன் செய்து வைத்த மாதிரி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. எப்போதும் வரும் இரண்டு காக்கைகள் கூட வீட்டின் கறார் தன்மையை புரிந்து கொண்டவை போல நேரத்திற்கு வந்து ஒரு பருக்கை கூட சிந்தாமல் சாப்பிட்டுச் சென்றன.

அப்பா, ''ஜானகி,'' என்றார்.

''இதோ ரெடி,'' என்று இரண்டாவது காபி கோப்பையுடன் வந்து நின்றாள் அம்மா.

''வந்தானா அந்த பையன்?'' என்றார் அப்பா, காபியை அருந்திவிட்டு.

''இல்லே... வந்துடுவான் வந்துடுவான்,'' அம்மா வாசல் பக்கத்தில் கண் வைத்தபடியே வேகமாக சொன்னாள்.

''டயம் என்ன?''

''பத்தாகலே இன்னும்.''

''எட்டு மணிக்கு சாப்பிட்டே... ஒன்றரை மணி நேரம் கழிச்சு, ப்ளட் கொடுக்கணும்... இப்படி ரெண்டு மணிக்கு மேல ஆச்சுன்னா வால்யூ எப்படி சரியா காட்டும்? வேண்டாம் அந்த லேப்... போன் பண்ணி வரவேண்டாம்ன்னு சொல்லிடு.''

அம்மாவுக்கு அடித்துக் கொண்டது. 'நடராஜா எங்கே இருக்கிறாய்... இந்த கறார் மனிதன் பற்றி தெரியும் தானே உனக்கு? ஒரு நிமிட தாமதம் கூட ஆகாது. பால் ஆறு மணிக்கு, பேப்பர் ஆறரை மணிக்கு என்று வாழ்க்கையையே கடிகாரத்துக்கு ஒப்புக்கொடுத்த மிலிட்டரி மனிதர். படித்து படித்து சொன்னேனே பாவிப் பயலே...'

கல்பனா கிளம்பினாள்...

''இன்னிக்கு என்னம்மா பத்து நிமிஷம் முன்னாடி கிளம்பறே?'' என்று எதிரில் வந்தார் அப்பா.

''சாலையோர துாரிகைகள்னு ஒரு கண்காட்சி தேரடில... பாத்துட்டு போகலாம்ன்னு.''

''சின்ன வயசுல நீ ரொம்ப அழகா வரைவே கல்பனா... அதுவும் யானை யானையா நுாத்துக் கணக்குல வரஞ்சு தள்ளுவே... அதுக்காகவே உன்னை அடிக்கடி பார்த்தசாரதி கோவில், வடக்கு பெருமாள் கோவில்ன்னு கூட்டிகிட்டு போய் யானைகிட்ட விடுவேன்... தந்தம், தும்பிக்கைன்னு அப்படி ஆசையா தொட்டுப் பாப்பே நீ,'' அப்பா கனிவுடன் அவள் முகம் பார்த்து சிரித்தார்.

அப்படியே ஏன் இருக்க முடியவில்லை... விவரிக்க முடியாத உணர்வுகள் மன ஆழத்திலிருந்து பொங்கி சிலிர்த்தன அவளுக்குள். வாழ்வின் ஆனந்தங்கள் அந்த சிறுமியுடன் முடிந்து விட்டனவா? யானை மேல் உக்கார வையேன் அப்பா என்று சொல்ல முடிந்த சிறுமியால், இன்று மனதில் துளிர் விட்டிருக்கிற காதலை ஏன் வெளிப்படுத்த முடியவில்லை? வீழ்த்தப்பட்ட பறவை போல தனிமை தேடியே ஓடுகிறதே மனது...

''சரிம்மா... கிளம்பு... பத்திரமா போய்ட்டு வா.''

''சரிப்பா.''

''ஒரு நிமிஷம் கல்பனா.''

''என்னப்பா?''

''ஏதோ ஒண்ணு சொல்லணும்ன்னு நினைக்கிறியா... கொஞ்ச நாளாவே பேச்சு குறைஞ்சிருக்கும்மா உன்கிட்ட.''

''ம்... தெரியலப்பா... ஏதோ, 'டென்ஷனா' இருக்கு.''

''சரிம்மா... எப்ப தோணுதோ சொல்லு.''

''வரேன்ப்பா.''

பித்தோவன் கதை வாசித்தது நினைவில் இருந்தது. பித்தோவனை காதல் தான் மிக மிக சந்தோஷத்திலும், மிக மிக துக்கத்திலும் ஆழ்த்தியதாம். அவளுக்கும் அதேதானா... வாசுவின் பண்பு, கண்ணியம், ஆகாயம் போல பரந்த உள்ளம்... மெல்ல மெல்ல அது எப்படி காதலாக பரிமாணம் பெற்றது... அவளைப் போன்ற ஒரு வாயில்லாத புழுவுக்கு, சிம்மாசன ஆசைகள் ஏன் வந்தன?

'அய்யோ... வாசு ஏன், என்னை தேடி வந்தாய்... உணர்வுகளில் ஏன் நாதஸ்வரம் ஒலிக்க விட்டாய்... வாழைத் தோரணங்களை ஏன் கட்டினாய்... தாலி மணிகள் கோர்த்த பொன்சரடு கையில் பளபளக்க, ஏன் என்னை நெருங்கி வந்தாய் வாசு!'

அடுத்த நாள் அவள் முடிவு செய்து விட்டாள். போதும் இந்த மனச் சித்திரவதை. கோழையிலும் கோழை அவள். அப்பாவின் ராணுவ முகாமில் வாழ்பவள். அம்மாவின் பின் மறைபவள். கனவுலகில் மட்டுமே சஞ்சரிக்கும் தைரியம் கொண்டவள்.

'இல்லை வாசு... வெரி சாரி... விட்டு விடுங்கள்... உங்கள் அபாரமான குணத்திற்கு வன தேவதை போல ஒருத்தி கிடைப்பாள்... பை பை...' என்று சொல்லி விடலாம்.

சுவாசம் இப்போது சீராக வந்தது.

மாலை -

வீடு வெளிச்சமாக இருந்தது. வாசல் பக்கமும், பால்கனியிலும் இன்று விளக்குகள் எரிந்தன. அப்பாவின் குரல் சத்தமாகவும், உற்சாகமாகவும் கேட்டது தான் அவளுக்கு ஆச்சரியமாகவும், நம்ப முடியாததாகவும் இருந்தது.

தயங்கியபடி உள்ளே போனவள், கண்ட காட்சியை கண்டு திடுக்கிட்டு நின்றாள்.

அப்பாவின் எதிரில் அமர்ந்திருந்தான் வாசு. தெளிவான முகம். எப்போதும் போல தன்னம்பிக்கையான புன்னகை. அமைதியான கண்கள்.

அவளை கண்டதும், காத்திருந்தவனாய் மேலும் புன்னகைத்தான்.

அப்பா, ''வாம்மா கல்பனா...'' என்று சிரித்தார்.

''காபி போட்டிருக்கேன். முகம் அலம்பிக்கோ... முறுக்கும், பாதுஷாவும் கொடு அவருக்கு,'' என்று மலர்ச்சியோடு, கை பிடித்து அழைத்து போனாள் அம்மா.

என்ன நடக்கிறது... அவன் எப்படி இங்கே வந்தான்? ஒரு கணம் உடல் நடுங்கியது.

''கல்பனா... வாம்மா,'' என்று அழைத்தார் அப்பா.

''மன்னிச்சுக்கோம்மா அப்பாவை,'' என்றவர் சட்டென்று கண் கலங்கி விட்டார்.

''அய்யோ என்னப்பா இது... என்ன சொல்றீங்க?''

''வாசு மாதிரி ஒருத்தர் உனக்கு மறு வாழ்க்கை கொடுக்க தயாரா இருக்கார் என்கிறதை வந்து என்கிட்ட சொல்ல முடியாதபடி உன்னை பயத்துல வெச்சிருக்கேனே... அதுக்கு.''

உள்ளம் தவித்தது.

''நான் கண்டிப்பு தான்.... ரொம்ப கறார் தான்... ஆனால், ஈரம் இல்லாதவன் இல்லே... ஊர் உலகமெல்லாம் தேடித் தேடி ஒரு வரனை கொண்டு வந்து, என் செல்ல மகளுக்கு பண்ணி வெச்சேன்... ரெண்டே வருஷத்துல எல்லாம் முடிஞ்சு போச்சு... புற்றுநோய்க்கு அவன் பலியாய்ட்டான்... கேஸ் போடு, நஷ்டஈடு கேளுன்னு எல்லாரும் கோபப்பட்டாங்க... என்ன போட்டு என்ன... நாம ஏமாந்துட்டோம், பொண்ணு வாழ்க்கையை நாமளே அழிச்சுட்டோம்ன்னு உள்ளே அழுது அழுது இன்னும் முரடா, அழுத்தமா ஆயிட்டேன்... உன்கிட்ட இருந்தும், அம்மாகிட்ட இருந்தும் விலகிப் போயிட்டேன்... மன்னிச்சுடும்மா கல்பனா,'' மேலே பேச முடியாமல் அழுதார் அப்பா.

வாசு மெல்ல அவர் கைப்பற்றி சொன்னான், ''இல்லே சார்... நீங்க எந்த தப்பும் செய்யலே... நாம எல்லாரும் தான் சார் இதுக்கு பொறுப்பு... பெண், வாயைத் திறந்து ஆசையை சொல்லக் கூடாது, எந்த உணர்வையும் வெளிப்படுத்தக் கூடாது, சத்தமா சிரிக்கக் கூடாதுன்னு நிறைய மனத்தடைகளை போட்டுட்டோம் சார்... கங்கையம்மா, காவிரியம்மா, மாரியம்மான்னு புனிதத் தன்மையை கொடுத்து, அவளை இயல்பா இருக்க முடியாம ஆக்கிட்டோம்... படிச்சு நல்ல வேலைல உட்கார்ந்தாலும், அவள் ஆணுக்கு அடங்கினவள்தான்னு அவளையே நம்ப வெச்சுட்டோம்... இதை விட மோசடி இந்த உலகத்திலேயே இல்லே... பாவம் கல்பனா, அவளால மட்டும் எப்படி சார் மாத்தி யோசிக்க முடியும்?''

அப்பா, அவனை அன்புடன் பார்த்து, ''முடியும் சார்... உங்களை மாதிரி சிறப்பான இளைஞர்களால அந்த மாற்றத்தை கொண்டு வர முடியும்... ஜீவனுள்ள உயிர் தான் என்று உணர வைக்க முடியும்... இப்ப புரியுது வாசு சார்... தேவை எல்லாம் மனசு தான் சார்...''

கல்பனா பிரமித்துப் போய் நின்றாள்.

தனக்காக பேசும் இரு ஆண்கள். இரு உறவுகள். இதைவிட அற்புதம் வேறில்லை. புதிய கதவு திறந்ததைப் போல இருந்தது அவளுக்கு.

தெற்கிலிருந்து இதமான காற்று வந்து முகத்தை வருடி சிலிர்க்க வைத்ததை போலிருந்தது.

வி. உஷா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us