/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நகைச்சுவை மன்னன் எஸ்.வி.சேகரின் டிராமாயணம்! (7)
/
நகைச்சுவை மன்னன் எஸ்.வி.சேகரின் டிராமாயணம்! (7)
PUBLISHED ON : ஜூன் 20, 2021

கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் நாடகத்தின், 25 காட்சிகளுக்கு பிறகு, வாய்ப்பில்லை. இந்த சூழ்நிலையில் தான், 'குமுதம்' வார இதழ் அலுவலகத்தில் இருந்து, ஓர் அழைப்பு வந்தது.
'ஊழியர்களுக்கான சின்ன விழா. ஒரு மணி நேரம் எங்களை மகிழ்ச்சிப்படுத்த, ஒரு நாடகம் நடத்த முடியுமா...' என, கேட்டுள்ளனர்.
நாடகம் போட கிளம்பும் போது, 'குமுதம் பத்திரிகை அலுவலகத்தில், பெண்களுக்கு அனுமதி கிடையாது பார்த்துக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி விட்டார், நிருபர் பால்யூ.
மேடையில், நடிகை வடிவுக்கரசியை, எஸ்.வி.சேகர் தான், அறிமுகம் செய்து வைத்தார். அன்று, அவர் வருவதாக இருந்தது. ஆனால், அவருக்கு அனுமதி கிடைக்காது என்று தெரிந்தவுடன், அவரது வீட்டிற்கு போய், 'அம்மா தாயே இதுதான் விஷயம். இப்போதைக்கு உன், 'மேக்சி டிரஸ்'சை மட்டும் கொடும்மா...' என்று, கேட்டார்.
'நானே நடிக்கவில்லை என் உடை எப்படி நடிக்கும்...' என்றார்.
'நடிக்க வைக்கிறேன்...' என்று
சொல்லி, அந்த உடையை,
அவர்கள் குழு நடிகர், உதயசங்கருக்கு(ராமாயி வயசுக்கு வந்துட்டா பட நாயகன்) மாட்டி விட்டு, நாடகம் போட்டார்.
தரையில் விரித்திருந்த ஜமுக்காளத்தில் உட்கார்ந்து பார்த்து, கை தட்டி, ரசித்தார்; மனம் விட்டு பாராட்டினார், ஆசிரியர் எஸ்.ஏ.பி.,
'என்ன வேண்டும்...' என்று கேட்டார்.
'உங்கள் ஆசீர்வாதம் போதும்...' என்றார், எஸ்.வி.சேகர்.
அடுத்த சில நாட்களில், 'குமுதம்' அலுவலகத்திலிருந்து, நாடகத்தின், 'ஸ்கிரிப்ட்' கேட்டு வாங்கிச்
சென்றனர். தொடர்ந்து, 10 வாரத்திற்கு நாடகம் வெளியானது; நல்ல
விளம்பரம்.
சென்னையில் மட்டும் வாய்ப்பை எதிர்பார்த்த, எஸ்.வி.சேகருக்கு, தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் வந்து நாடகம் போடச் சொல்லிக் கேட்டனர்.
அவரை அவமானப்படுத்திய சபா செயலரே, தேடி வந்து, 'ஏம்பா... உன் நாடகத்தை, நம் சபாவில் போடேம்பா...' என்று, கெஞ்சாத குறையாகக் கேட்டார்.
மமதையுடன் அல்ல, நம்மை அவமானப்படுத்தியவரே மதிக்கும்போது, அதுவே நம் வெற்றி என்ற பெருமையுடன், நாடகம் போட்டார்.
வெளியூரில் நாடகம் நடத்துவது என்பது, ஒரு பெருமை மற்றும் கவுரவம்.
எஸ்.வி.சேகரின், முதல் வெளியூர் நாடகத்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்தது, நண்பரும், நடிகரும், இயக்குனருமான, விசு.
வெளியூர் நாடகத்திற்கு போவது என்று முடிவு செய்து, முதல் முறையாக, பெங்களூரு கிருஷ்ணன் அழைப்பை ஏற்று, நாடகம் போடச் சென்றார்.
நாடகம் போட, 2,000 ரூபாய் பேசப்பட்டு, 500 ரூபாய் முன்பணம் பெறப்பட்டது. 35 கலைஞர்களும் போக வர, தனி பஸ் என்று, அமர்க்களமாக திட்டமிடப்பட்டது.
முதல் வெளியூர் நாடகம் என்பதால், 'எல்லாரும் பார்த்துக்குங்க, நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன்...' என்று, நடிகர் வடிவேலு பாணியில், எல்லாரிடமும் சொல்லி, உற்சாகமாக பஸ்சில் ஏற,
எஸ்.வி.சேகர் உட்பட நாடக குழுவினர் அனைவரும் ஓரிடத்தில் கூடினர். இரவு,
9:00 மணிக்கு வரவேண்டிய பஸ், நள்ளிரவைத் தாண்டியும் வரவில்லை.
— தொடரும்
இவரைப் பற்றி அவர்
மூன்று முடிச்சு படத்தின் விசேஷ ரேடியோ நிகழ்ச்சிக்காக, உங்களை முதன் முதலில் சந்தித்தேன். அப்போதே நான் நன்றாக வருவேன் என்று, மனதார வாழ்த்தினீர்கள். அப்போதே, நீங்கள் ஒரு வித்தியாசமான மனிதர் என்பதை உணர்ந்தேன். 5,000 நாடகம் (இப்போது, 6,500.) நடத்தி, யாருமே செய்யாத சாதனையை செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். எதைச் செய்தாலும் வித்தியாசமாக செய்யும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
— நடிகர் ரஜினிகாந்த்
எல். முருகராஜ்