sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கட்டாயம்!

/

கட்டாயம்!

கட்டாயம்!

கட்டாயம்!


PUBLISHED ON : ஏப் 12, 2020

Google News

PUBLISHED ON : ஏப் 12, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லெமன் சாதத்தையும், உருளைக்கிழங்கு மசாலாவையும், இரண்டு டிபன் பாக்சில் எடுத்து வைத்தாள், வைதேகி.

ஒன்று மகள், சுஜாவுக்கு; இன்னொன்று, நான்காவது படிக்கும் பேத்திக்கு. மாப்பிள்ளை, 'கம்பெனி கேன்டீனில்' சாப்பிடுவதால், அவருக்கு மதிய சாப்பாடு இல்லை.

'வாஷிங்மிஷினில்' துவைத்த துணிகளை காயப்போட எடுத்து வந்த, சண்முகம், சமையலறையில் இருந்த வைதேகியிடம், ''எனக்கு காபி கலந்துட்டியா?'' என்றார்.

''பார்க்கலையா, டைனிங் டேபிளில் வச்சு, சொல்லிட்டு தானே வந்தேன்.''

''கவனிக்கலை. சரி, துணியை காயப் போட்டுட்டு எடுத்துக்கிறேன்.''

''இத்தனை நேரம் ஆறிப் போயிருக்கும். சூடு பண்ணி தரேன்.''

''வேண்டாம். உன் வேலைகளை கவனி.''

அதற்குள், 2 வயது மகனை துாக்கியபடி கிச்சனுக்குள் வந்த, மகள் சுஜா, ''என்னம்மா டிபன் ரெடியா... 'லஞ்ச்' எடுத்து வச்சுட்டியா?'' என்றாள்.

''எல்லாம் முடிஞ்சுது.''

அதற்குள் பாட்டியை பார்த்த பேரன், அவளிடம் தாவ, ''இந்தா, உன் பேரனை பிடி. எனக்கு நேரமாச்சு. இனிமேல் தான், 'டிரஸ்' மாத்தி கிளம்பணும்,'' என்றாள், சுஜா.

''வா கண்ணா, உனக்கு என்ன வேணும், இட்லி சாப்பிடலாமா?'' என்றாள், வைதேகி.

மகளும், மருமகனும், 'பைக்'கில் கிளம்ப, பேத்திக்கு ஷூ போட்டு, ஆட்டோவில் ஏற்றிவிட்ட, சண்முகம், கதவை தாழிட்டு உள்ளே வந்தார்.

பேரனை இடுப்பில் வைத்தபடி இட்லி ஊட்டிக் கொண்டிருந்த வைதேகியிடம், ''அப்பாடா... எல்லாரும் கிளம்பியாச்சு. காலையில் பம்பரமாக சுழல வேண்டியிருக்கு இல்லையா, வைதேகி,'' என்றபடியே கொல்லை படியில் அமர்ந்தார்.

''என்னங்க பண்றது, இரண்டு பேரும் வேலைக்கு போறவங்க... பேத்தியை பள்ளிக்கு கிளப்பணும், காலை டிபன், சமையல்ன்னு சரியா இருக்கு. இனி ஓய்வு தான்.''

''யாரு சொன்னா... பேரன் உன்னை ஓய்வு எடுக்க விடுவானா. சாப்பாடு ஊட்டினதும், அவன் பின்னாடி ஓடணும். வேலைக்காரி வருவான்னு தான் பேரு, பாத்திரம் தேச்சு, வீட்டைப் பெருக்கிட்டு போயிடுவா... மத்தபடி எல்லா வேலைகளையும் நீ தானே பார்க்கணும்.''

வைதேகி - சண்முகத்தின் ஒரே மகள், சுஜாதா. அவள் திருமணம் முடிந்ததும், சண்முகம் வேலையிலிருந்து, ஓய்வுப்பெற்று, கிராமத்திற்கு வந்து விட்டனர்.

பேத்தி பிறக்கும்போது, சுஜாதா வேலைக்கு போகவில்லை. பேரன் பிறந்த பின், ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர, குழந்தைகளை பார்க்க, வீட்டைப் பொறுப்பாக கவனிக்க, ஆள் தேவைப்பட்டது.

'நீயும், அப்பாவும் என்னோடு வந்துடுங்க. எங்களுக்கும் உதவியா இருக்கும்; உன் பேரனை வளர்த்த மாதிரியும் இருக்கும். வந்துடும்மா...' என்றாள், சுஜா.

மாப்பிள்ளை நல்ல குணம் உள்ளவராக இருந்ததால், சண்முகமும், வைதேகியும் மகள் வீட்டிற்கு வந்தனர். இரண்டு ஆண்டுகளாக இங்குதான் இருக்கின்றனர். சுஜாதாவுக்கு விடுமுறை கிடைக்கும் போது, கோவில், குளம் என, இருவரும் போய் வருவர்.

வயதான காலத்தில் அவர்கள் பொழுது, பேரன், பேத்தியோடு போய் கொண்டிருக்கிறது.

இரவு டிபனுக்கு சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்த வைதேகியிடம் வந்தவள், ''அம்மா, நாளைக்கு வேலைக்காரி வரமாட்டாளாம், போனில் சொன்னா... பாத்திரத்தை போட்டு வை... சாயந்திரம் நான் வந்து தேய்க்கிறேன்,'' என்றாள்.

''பரவாயில்லம்மா... சரி, சப்பாத்திக்கு கிழங்கு செய்யட்டுமா, குருமா வைக்கட்டுமா?''

''குருமாவே செய்துடு. அதான் உன் மாப்பிள்ளைக்கு பிடிக்கும்,'' என்றாள்.

மறுநாள் பேரனை துாங்க வைத்தவள், குவிந்து கிடக்கும் பாத்திரங்களை தேய்க்க ஆரம்பித்தாள். அழைப்பு மணி ஒலிக்க, நாளிதழில் ஆழ்ந்திருந்த, சண்முகம், எழுந்து போய் கதவை திறந்தார்.

கிராமத்தில் இருக்கும் அவர்களின் துாரத்து உறவான, பர்வதம் நின்றிருந்தாள்.

''வாம்மா, பர்வதம்... நல்லாயிருக்கியா. எப்ப கிராமத்திலிருந்து வந்தே... மகள் வீட்டிற்கு வந்தியா...'' என கேட்டபடியே வரவேற்றார், சண்முகம்.

''ஆமாண்ணா நீங்க எப்படி இருக்கீங்க. வைதேகி என்ன செய்றா?''

குரல் கேட்டு புடவை தலைப்பில் கையைத் துடைத்தபடி வந்த வைதேகி, சிநேகிதியைப் பார்த்து முகம் மலர்ந்தாள்.

''பர்வதம் எப்ப வந்தே... உன் மகள், பேத்தி எல்லாம் நல்லா இருக்காங்களா... வா, உட்காரு,'' என்றாள், வைதேகி.

''அது சரி, நீ எப்படி இருக்கே... ஒரேயடியா, மகள் வீட்டில் தங்கி, கிராமத்தை மறந்துட்டே.''

''என்ன செய்றது, பர்வதம். சுஜா வேலைக்கு போறா, பேரனை பார்த்துக்க வேண்டியிருக்கு. வீட்டு வேலைக்கு ஆள் வச்சிருக்கா, அவங்க போனதும், பேரனை பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியது தான்.''

''இருந்தாலும், உன்னால நினைச்ச நேரம் ஓய்வு எடுத்து, துாங்கி எழுந்திருக்க முடியாது இல்லையா... அது மட்டும் இல்ல, தினமும் காலை வேலைகளை கட்டாயம் செய்ய வேண்டியிருக்கும்.''

''என்ன பர்வதம், இப்படி பேசற; யாருக்கு செய்றேன், பேரன் - பேத்திகளுக்கும், என் மகளுக்கும் தானே.''

''அதை உன் மனசு சொல்லலாம். இந்த வயசில், உன் உடம்பு சொல்லாது. வைதேகி, பேரன் - பேத்தி, மகள்ன்னு உதவ வேண்டியது தான், இல்லைன்னு சொல்லலை... இப்ப பாரு, நானும் மகள் வீட்டிற்கு வந்திருக்கேன்; என் பேத்தியை கொஞ்சிக்கிட்டு, அவளுக்குப் பிடித்த பலகாரங்கள் செய்து கொடுத்துட்டு தான் இருக்கேன்...

''ஆனால், எதுவும் எனக்கு கட்டாயம் இல்லை. வீட்டோடு ஆள் வச்சுருக்கா... அதனால, என் இஷ்டத்துக்கு இருக்க முடியுது; காலையில், வேலையாள் பார்த்துப்பா... முடிந்தால் உதவுவேன், என் பேத்தியோடு கொஞ்சி விளையாடுவேன்...

''படுக்கணும், ஓய்வு எடுக்கணும்னா... வேலையாள் பாத்துப்பா. நேரம், காலம், உடம்பு இதையெல்லாம் பார்க்காமல், வேலை செய்த காலம் முடிஞ்சுடுச்சு, வைதேகி. இது, நாம் ஓய்வு தேடும் வயசு. இந்த வயசில் நேரத்துக்கு எழுந்திருக்கணும். சமையல் வேலைகளை பார்க்கணும்... பேரன் - பேத்தியை கவனிக்கணும்ன்னு, நம் பொழுதுகளை கட்டாயமாக்க கூடாது...

''மனதில் சின்னதா சலிப்பு வரும். கொஞ்ச நேரம் தலை சாய்க்க மாட்டோமான்னு தேணும். அந்த நேரம், பேரன் அழுவான். அவனை சமாதானம் படுத்தணும்... பிள்ளைகளை வளர்க்கும்போது இருந்த தெம்பு, இப்ப, பேரன்களை வளர்க்கும்போது இல்லையே என்ன செய்யறது... சரி, நீ இப்ப என்ன செய்துட்டு இருந்தே,'' எனக் கேட்டாள், பர்வதம்.

''பேரன் துாங்கறான். வேலைக்காரி வரலை, பாத்திரம் தேய்ச்சு வைக்கணும்... சரி, இரு... போய் காபி எடுத்துட்டு வரேன்.''

''வேண்டாம் வைதேகி, நான் கிளம்பறேன். வீட்டோடு ஆள் இருப்பதால, பேத்தியை விட்டுட்டு வந்தேன்; மதியம் துாங்கிடுவா. போனா, கொஞ்ச நேரம் அவளோடு விளையாடலாம். ஒரு மாசம் இங்கே இருப்பேன். இன்னொரு நாள் வரேன்,'' என்று கிளம்பினாள்.

அப்போது அங்கு வந்த சுஜாதா, ''வாங்க ஆன்ட்டி... நல்லா இருக்கீங்களா?'' என்றாள்.

''நல்லா இருக்கேன்மா... நீ, வேலைக்கு போகலையா?''

''போனேன். கொஞ்சம் தலைவலி, அதான், 'லீவு' போட்டுட்டு வந்துட்டேன்.''

''சரிம்மா, நான் வந்து அரை மணி நேரமாச்சு. வைதேகியோடு பேசினேன், கிளம்பறேன். நீ போய் ஓய்வு எடு.''

''என்ன, சுஜா வந்துட்டே?'' என்றாள், வைதேகி.

''ஒண்ணுமில்லம்மா, லேசா தலைவலி. 'ரெஸ்ட்' எடுப்போம்ன்னு, 'லீவு' போட்டுட்டு வந்தேன்.''

''காபி போட்டு தரட்டுமா?''

''வேண்டாம்மா, பாத்திரம் கிடக்கும், தேய்ச்சுட்டு, நானே போட்டுக்கறேன்.''

''எதுக்கும்மா... தலைவலின்னு சொல்ற, நீ போய் ஓய்வு எடு. நான் பார்த்துக்கிறேன்,'' என்றாள், வைதேகி.

''அம்மா... சொல்ல மறந்துட்டேன். உனக்கு உதவிக்கு வீட்டோடு ஆள் சொல்லியிருக்கேன், அடுத்த வாரம் வந்துடுவாங்க. நீ கொஞ்சம், 'ரிலாக்சா' இருக்கலாம். உனக்கும் வயசாயிட்டு வருது... காலை நேரத்தில் சிரமப்படாதே,'' என்றாள்.

''எதுக்கும்மா, நானே பார்த்துக்கிறேனே... மேல் வேலைக்கு தான் ஆள் இருக்கே.''

''அப்படி யில்லம்மா... நீயும், அப்பாவும் என்னோடு இருக்கிறதே எனக்கு பெரிய கொடுப்பினை. அளவுக்கதிகமா உன்னையும், வேலை வாங்கக் கூடாது. வீட்டோடு ஆள் இருப்பாங்க; உன் கண்காணிப்பில் எல்லாம் நடக்கும். பேரனோடு நிம்மதியா, சந்தோஷமாக இருக்கலாம்...

''பர்வதம் ஆன்ட்டி சொன்னதை கேட்ட பிறகு தான், எனக்கும் புரிந்தது. வயசானவங்களுக்கு எதுவும் கட்டாயமாக இருக்கக் கூடாது. எத்தனை நாள் உடல் வலியை கூட பொருட்படுத்தாமல், காலையில் எழுந்து வேலை செய்திருக்கிற... சாரிம்மா... இனி, நீ சந்தோஷமாக இருக்கலாம்,'' என்ற சுஜாதாவின் மனம், பர்வதத்திற்கு நன்றி சொல்லியது.

பரிமளா ராஜேந்திரன்






      Dinamalar
      Follow us