தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தம்பதி திருவிழா!

தம்பதி திருவிழா!

தம்பதி திருவிழா!


PUBLISHED ON : நவ 26, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 26, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமணமானதில் இருந்து, வாழ்வின் இறுதி வரை சண்டை போட்டுக் கொள்ளாத தம்பதியரை, விரல் விட்டு எண்ணி விடலாம்.

'வாழ்வின் இறுதி வரை நாங்கள் ஒற்றுமையாக இருக்க விரும்புகிறோம். என்ன செய்யலாம்?' என்ற, கேள்வி எழுமானால், அதற்கு நீங்கள், விளக்கொளி பெருமாளைத் தான் நம்பியாக வேண்டும்.

கார்த்திகை திருநாள் என்றாலே, விளக்கொளி தான். இந்த இனிய நாளில், துாப்புல் விளக்கொளி பெருமாளைப் பற்றி தெரிந்து கொள்வதுடன், வாழ்வில் ஒற்றுமையாக இருக்கவும் அவரை வேண்டிக் கொள்ளலாம். இவரைத் தரிசிக்க, காஞ்சிபுரம் செல்ல வேண்டும்.

ஒருமுறை, உலக நலன் கருதி, துாப்புல் எனும் தர்ப்பை நிறைந்த காட்டில், யாகம் நடத்தினார், படைப்புக் கடவுளான பிரம்மா. யாகத்தை, தம்பதி சமேதராக நடத்த வேண்டும் என்பது விதி. ஆனால், தன் மனைவி சரஸ்வதியை அழைக்கவில்லை, பிரம்மா. கோபமடைந்த சரஸ்வதி, அந்த யாகத்தை நடத்த விடாமல் தடை செய்தாள்.

உடனே, பெருமாளிடம், யாகம் நடக்க அருள் செய்ய வேண்டினார், பிரம்மா. ஜோதி வடிவில் தோன்றிய பெருமாள், சரஸ்வதியைச் சந்தித்து, தம்பதி ஒற்றுமையை வலியுறுத்தி, அவளை சமாதானம் செய்தார்.

பிறகு இருவரும் இணைந்து, யாகத்தை சிறப்பாக நடத்தி முடித்தனர். தாங்கள் யாகம் செய்த இடத்தில் எழுந்தருளும்படி, பெருமாளை வேண்டினார், பிரம்மா. அதன்படி, இத்தலத்தில் எழுந்தருளினார், பெருமாள்.

குடும்பம் சார்ந்தோ, உலகம் சார்ந்தோ எதைச் செய்வதாக இருந்தாலும், தம்பதியர் இணைந்து செய்தால் தான், அது வெற்றியடையும் என்பதை, இதன் மூலம் உலகுக்கு எடுத்துச் சொன்னார், பெருமாள்.

ஜோதி வடிவில் தோன்றியதால், இவரை, தீபப்பிரகாசர் என்றனர். அந்த வடிவம் காண்பவருக்கு இன்பம் தந்ததால், திவ்ய பிரகாசர் என்ற பெயரும் வந்தது. பிற்காலத்தில், விளக்கொளி பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்து தாயார், மரகதவல்லி.

தாயாரும், பெருமாளும் தம்பதியர் ஒற்றுமையாக வாழ, அருள்கின்றனர். கருத்து வேறுபாடு ஏற்படுவது இயற்கையே. அதை குடும்பத்திலுள்ள பெரியவர்கள் களைய முயற்சிக்க வேண்டும் என்பதையும், இந்த சம்பவம் உலகுக்கு எடுத்துக் காட்டுகிறது.

இந்த கோவில் பற்றி இன்னொரு விசேஷ தகவலும் உண்டு. வேதாந்த தேசிகன் என்ற மகான், இந்த தலத்தில் அவதரித்தவர்.

இவரது பெற்றோர், தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி, திருப்பதி ஏழுமலையானை வேண்டினர். அவர்களுக்கு, தன் மணியைக் கொடுத்து, 'இந்த மணியே உங்களுக்கு குழந்தையாகப் பிறக்கும்...' என்றார், பெருமாள். இதன் காரணமாக, திருப்பதியில் பூஜையின் போது மணி அடிப்பதில்லை.

சனாதன தர்மத்தில், சைவத்தில் தீபமாய் சுடர்விடும் திருவண்ணாமலை; வைணவத்தில் துாப்புல் பெருமாள்; சாக்தம் எனும் சக்தி வழிபாட்டில், கன்னியாகுமரி பகவதி அம்மனின் மூக்குத்தி ஒளி; கவுமாரம் எனும் முருகன் வழிபாட்டில், ஒளிப்பிழம்பாய் தோன்றிய முருகன்.

சவுரம் எனும் சூரிய வழிபாட்டில் பிரகாசமாய் ஒளிரும் சூரியன்; காணாபத்யம் எனும் விநாயகர் வழிபாட்டில், 365 நாளும் சூரிய ஒளியைக் கிரகிக்கும் ராமநாதபுரம் உப்பூர் வெயிலு கந்த விநாயகர் என, எந்த தெய்வமாக இருந்தாலும், ஒளி சாராமல் இல்லை.

கார்த்திகை தீப நன்னாளில், நாம் எல்லா தெய்வங்களையும் வழிபட்டு, ஒளிமிக்க வாழ்வு பெறுவோம்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us