sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

குற்றம் குற்றமே! (2)

/

குற்றம் குற்றமே! (2)

குற்றம் குற்றமே! (2)

குற்றம் குற்றமே! (2)


PUBLISHED ON : டிச 10, 2023

Google News

PUBLISHED ON : டிச 10, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை சுருக்கம்: 'கார்த்திகா இண்டஸ்டிரீஸ்' நிறுவனத்துக்கு, 'இன்டர்வியூ' சென்றான், மனோதத்துவ படிப்பில் பட்டம் பெற்ற, தனஞ்ஜெயன். 'இந்த வேலை, 'ரிஸ்க்' ஆனது. பங்குதாரரால் உயிருக்கு ஆபத்து வரலாம்...' என்று கூறி, வேலைக்கு சேர சம்மதமா என்று கேட்கின்றனர்.

தனஞ்ஜெயன் சம்மதிக்க, குடியிருக்க, அபார்ட்மென்ட், டிரைவருடன் ஒரு கார் மற்றும் மூன்று லட்ச ரூபாய் சம்பளம் என, நிறுவனர் கிருஷ்ணராஜின் மகள் கார்த்திகா கூற, இன்ப அதிர்ச்சியடைந்தான்-

இன்ப அதிர்ச்சியிலிருந்து மெல்ல விடுபட்ட, தனஞ்ஜெயன், தனக்கு, மூன்று லட்ச ரூபாய் சம்பளம் என்பதை நம்ப முடியாதவனாக, கார்த்திகாவையும், கிருஷ்ணராஜையும் பார்த்தான்.

''என்ன தனஞ்ஜெயன், எதுக்கு அப்படி பார்க்கறே?'' என்றார், கிருஷ்ணராஜ்.

''மூன்று லட்சம் சம்பளம், அது போக குடியிருக்க, 'அப்பார்ட்மென்ட்' மற்றும் டிரைவரோட கார். என்னால நம்ப முடியல சார்... ஏதோ, 30 ஆயிரம் ரூபாய் சம்பளம், சில, 'அலவன்ஸ்'ன்னு சொற்ப தொகை கிடைக்கும்ன்னு தான், நான் நினைச்சேன்.''

''அப்ப, உன்னால நம்ப முடியலை தானே?''

''கொஞ்சம் அப்படி தான் சார்!''

''நம்புப்பா... நாங்க கொடுக்கற, 'அசைன்மென்ட்'டை நீ முடிக்க முடிக்க, உனக்கு இன்னும் கூட சலுகைகள் கிடைக்கும்.''

''தேங்க்யூ சார்... உங்க முதல், 'அசைன்மென்ட்' இந்த ஒரு கோடி ரூபாயை திருப்பதி உண்டியல்ல போடணும்கிறது... இது என்ன பெரிய, 'அசைன்மென்ட்?' உங்களால இதை செய்ய முடியாதா?'' என கேட்டான், தனஞ்ஜெயன்.

மகள் கார்த்திகாவை பார்த்தார், கிருஷ்ணராஜ்.

''நீங்க புறப்படுங்கப்பா... நான் பதில் சொல்லிக்கிறேன்,'' என்றாள், கார்த்திகா.

அடுத்த சில நொடிகளில் மருத்துவ உதவியாளர் வந்து அவரது, 'வீல் சேரை' தள்ளிக் கொண்டு அங்கிருந்து விலகவும், சுடச்சுட இரு கப்களில் டீ வந்தது.

''எடுத்துக்குங்க தனா...'' என்றாள், கார்த்திகா.

அவன் நண்பர்கள் அழைப்பது போல் அழைத்தாள். அவனுக்கும் அது மிக பிடித்திருந்தது. அவள் டீயை பருகவும், அவனும் பருகினான். அவள் பேசத் துவங்கினாள்.

''மிஸ்டர் தனா... 'கார்த்திகா இண்டஸ்டிரீஸ்' பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்?'' என்றாள்.

''கூகுள்ல போய் பார்த்தேன், மேடம். மாதம், 100 கோடி ரூபாய்க்கும் மேல வியாபாரம். வருஷத்துக்கு, 1,500 கோடி ரூபாய்க்கும் மேல. பலமுறை, 'பெஸ்ட் பிசினஸ்மேன் அவார்ட்ஸ்'ல இருந்து, 'ஆன்ட்ரப்ரனுார் அவார்ட்' வரை, பல விருதுகளை, உங்க அப்பா கிருஷ்ணராஜ் வாங்கியிருக்கார்.

''இந்த ஆண்டு, 2,000 கோடி ரூபாய், 'டார்கெட்' வெச்சிருக்கீங்க. மொத்தமா, 1,600 பேர் வேலை பார்க்கறாங்க. சென்னை, கோவை, சேலம் மற்றும் திருநெல்வேலின்னு நான்கு மாவட்டங்கள்ல கிளைகள் இருக்கு.''

''குட்... ஓரளவு எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு, அதே சமயம், தெரியாத பல விஷயங்களும் இருக்கு.''

''சொல்லுங்க மேடம், தெரிஞ்சிக்கறேன்.''

''அப்பாவுக்கு ஒரு, 'பிசினஸ் பார்ட்னர்' இருக்கார். அவர் பெயர், தாமோதரன்...'' சற்று இடைவெளி விட்டு, தனஞ்ஜெயனை கூர்ந்து பார்த்தாள்.

பின் மெல்ல, ''இந்த தாமோதரனுக்கு, விவேக்னு ஒரு மகன் இருக்கான். அவனுக்கு, என்னை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசை,'' என்றாள், கார்த்திகா.

நிமிர்ந்து அமர்ந்தான், தனஞ்ஜெயன்.

''இந்த விவேக் ஒரு ரோக். ஸ்டார் ஹோட்டல்கள்ல குடிச்சுட்டு, ரகளை பண்ணதா இவன் மேல பல வழக்குகள் பதிவாகி இருக்கு. அதுமட்டுமில்ல, குடிச்சுட்டு கார் ஓட்டி பிளாட்பாரத்துல படுத்திருந்த சிலர் மேல காரை ஏத்தி, அவங்க இறந்துட்டாங்க.''

''தெரியும் மேடம், நியூஸ்ல கூட வந்தது.''

''அப்படிப் பட்ட விவேக்குக்கு, என்னை பெண் கேட்டார், அந்த தாமோதரன். அப்பா முடியாதுன்னுட்டார். அதிலிருந்தே எங்களுக்கு நேரம் சரியில்லை.''

''புரியுது. அதுக்கும், நீங்க உண்டியல்ல பணம் போடறதை தடுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?''

''எங்க, 'பிசினஸ்' எல்லாத்துலயும், தாமோதரனுக்கு, 50 சதவீத பங்கு இருக்கு. அந்த உரிமையில எங்கப்பாவை மிரட்டும், தாமோதரன், எங்க, 'பர்சனல்' விஷயங்களிலும் தலையிடுகிறார்.''

''உண்டியல்ல பணம் போடறது, அவருக்கு தெரிஞ்சா தானே எதாவது செய்ய முடியும்?''

''அவருக்கு தெரியாம இதுவரை எங்களால எதையும் செய்ய முடியல. இந்த அலுவலகத்தில, தொழிற்சாலையில, ஏன், என் வீட்ல கூட, அவரோட ஆட்கள் உளவாளிகளா இருக்காங்க. இப்ப, நான் உங்க கூட இங்க பேசிக்கிட்டிருக்கிறது கூட, இந்நேரம் தாமோதரனுக்கு தெரிஞ்சிருக்கும்.''

''என்ன மேடம்... எனக்கு ஏதோ தெலுங்கு மசாலா சினிமா பார்க்கற மாதிரியே இருக்கு.''

''எங்க வாழ்க்கை அதைவிட மோசம், தனஞ்ஜெயன். உறவுன்னு யாருமில்லை. சட்டம், போலீஸ், வக்கீல்கிட்ட எல்லாம், எங்களால போக முடியாது. நண்பர்கள் சிலர், எங்களுக்கு உதவ முன் வந்து, அதன் பின் தாமோதரனால அவங்க பின் வாங்கிட்டாங்க.''

''ரொம்ப ஆச்சரியமா இருக்கு. கோடி கோடியா பணம் வெச்சிருக்கிற உங்களுக்கா, இந்த நிலைன்னு அதிர்ச்சியாவும் இருக்கு. ஆமா, சட்டம், போலீஸ், வக்கீல்கிட்ட எல்லாம் போக முடியாதுன்னீங்களே... எதனால அப்படி? அவங்களையும் அந்த தாமோதரன் தடுக்கறாரா?''

''வேண்டாம், இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க. கேட்டா என்னால எதையும் சொல்லவும் முடியாது. இப்ப சொல்லுங்க, இந்த வேலையில சேர உங்களுக்கு சம்மதமா?''

''என்ன மேடம் நீங்க... சம்பளம் சலுகைன்னுல்லாம் பேசிட்டு இப்ப திரும்ப சம்மதமான்னு கேட்கறீங்க?''

''அப்ப நான் பிரச்னைகளை சொல்லல, இப்ப சொல்லிட்டேன். இப்ப கேட்கறது தானே சரி?''

''நீங்க சொல்றதும் சரிதான்... ஆமா, அந்த தாமோதரனால, என்னை என்ன செய்ய முடியும்?''

''இப்படிக் கேட்டு ஒரு கோடி ரூபாய் பணத்தோட ஒருத்தன் புறப்பட்டான். அவன் திரும்பவே இல்லை,'' என்றாள், கார்த்திகா.

''என்ன சொல்றீங்க மேடம்... பணத்தோட அவன் ஓடிட்டானா?''

''தெரியாது.''

''என்ன தெரியாதுன்னு சாதாரணமா சொல்றீங்க? போலீஸ்ல புகார் கொடுக்கலியா?''

''நான் தான் துவக்கத்திலயே சொன்னனே... நாங்க எதுக்குமே, போலீசுக்கோ, கோர்ட்டுக்கோ போக மாட்டோம்.''

''ஏன் அப்படி, அவங்கல்லாம் வேற எதுக்கு இருக்காங்க?''

''அவங்ககிட்ட போனா, பல கேள்விகள் கிளம்பும். அதுக்கு பதில் சொல்லக் கூடிய இடத்துல நாங்க இல்லை.''

''புரியுது... அந்த கோடி ரூபாய் கருப்பு பணமா?''

''எந்த பணக்காரன்கிட்ட இன்றைக்கு கருப்பு பணமில்ல? உண்மையில், அது நல்ல பணம். திருப்பதி பெருமாளுக்கு சொந்தமாக வேண்டிய பணம்.''

''சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. அந்த சாமிக்கு தான் எல்லாரும் கொண்டு போய் கொட்றாங்களே... நீங்களுமா? இந்த நாட்டுல எவ்வளவு ஏழைகள், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாம கஷ்டப்படறாங்க. அவங்களுக்கு கொடுத்து உதவலாமே?''

''நாங்க அப்படி உதவலைன்னு உங்களுக்கு தெரியுமா?''

''உதவிக்கிட்டிருந்தா சந்தோஷம் தான்... இருந்தாலும், கோடி ரூபாயை அந்த கோவில் உண்டியல்ல போடுறதை, என்னால ஜீரணிக்க முடியல. அந்த சாமிகிட்ட, ஏற்கனவே பல ஆயிரம் கோடிகள் கொட்டிக் கிடக்கு. இந்த பணம் போய் எதுவுமே ஆகப் போறதில்ல.''

''அது எங்களுக்கும் தெரியும். ஆனா, என் அப்பாவுக்கு இந்த பணம் அங்க போய் சேர்ந்தா தான் மனசுக்கு அமைதி கிடைக்கும்.''

''சரி... இதை எதுக்கு தாமோதரன் தடுக்கிறார். அதுல அவருக்கு என்ன கிடைக்கப் போகுது?''

''போதும் மிஸ்டர் தனஞ்ஜெயன். இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க. உங்களால இந்த 'அசைன்மென்ட்'டை முடிக்க முடியுமா... அதைப்பற்றி மட்டும் சொல்லுங்க?''

''நான் தயார் மேடம்... சக மனுஷனா, என் மனசுல பட்டதை கேட்டேன். பணியாளனா நீங்க சொல்றத கேட்கிறது தான், எனக்கு அழகு.''

''குட்... ஆனா, அது ஆபத்தான அழகு. அதை நீங்க புரிஞ்சிக்கணும்.''

''புரிஞ்சுக்கிட்டேன். சரி, அந்த தாமோதரன் அப்படி என்ன செய்வார்... முதல்ல அவருக்கு என்னை தெரியணுமே?''

''இந்த நிமிஷம், உங்க போட்டோவோட அவனுக்கு விஷயம் போயிருக்கும்ன்னா நம்புவீங்களா?''

''ஓ... இங்கயே, 'ஸ்பை' இருக்கறதா சொன்னீங்கல்ல... ஆமா, அந்த, 'ஸ்பை' யார்னு உங்களுக்கு தெரியலியா?''

''ஒரு, 'ஸ்பை'ன்னா தெரியும். எல்லாருமே, 'ஸ்பை'யா இருந்தா?''

''மை காட்... நீங்க, என்ன சொல்றீங்க?''

''ஒருவேளை உங்களையே கூட, அந்த தாமோதரனும், விவேக்கும், விலைக்கு வாங்க முயற்சிக்கலாம். நாங்க மூன்று லட்சம் ரூபாய் தானே சம்பளம் தர்றோம்ன்னு சொல்லியிருக்கோம். அவன், நான்கு லட்சம் ரூபாய் தரேன் சொன்னா, நீங்க என்ன வேண்டாம்ன்னா சொல்வீங்க?'' நாற்காலியை விட்டு எழுந்து, அவனைப் பார்த்து கேட்டாள், கார்த்திகா.

அவளின் பின்னல், முன்பக்கம் விழுந்து, வெகு அழகாக அவன் கண்களுக்கு காட்சி தந்தது. அவளும் ஒரு தேவதை போலத்தான் அவன் கண்களுக்கு தெரிந்தாள். அவன், அவளை ரசிக்க முனைந்ததில் கேள்வியை மறந்து போனான்.

அவள் விரல்களை சொடுக்கி அவனைக் கலைத்தவளாக, ''என்ன மிஸ்டர் தனா... நான் அழகா இருக்கேனா?'' என்று, மிகச் சரியாக கேட்டாள்.

''ஆமாம்... நீங்க ரொம்பவே அழகு தான் மேடம். ஐ ஆம் சாரி... உங்க கேள்விக்கு தான் பதில் சொன்னேன்,'' என்றான், தனா.

''இது ரொம்ப ஆபத்தான அழகு, தனா. என்னை அடைய, அந்த விவேக் என்னவெல்லாமோ திட்டம் போட்டு வெச்சிருக்கான். நான் அழகு மட்டுமல்ல... பெரும் செல்வமும் கூட... 5,000ம் கோடி ரூபாய் சொத்துக்கு வாரிசுன்னா சும்மாவா?''

''திரும்பவும் சொல்றேன், மேடம்... மசாலா தெலுங்கு சினிமா மாதிரியே இருக்கு உங்க நிலை...''

''அப்ப நீங்க, 'ஹீரோ' ஆகி, எங்க கூட நில்லுங்க.''

''நிச்சயமா... இப்ப நான் இந்த பணத்தை திருப்பதி உண்டியல்ல சேர்க்கணும். அவ்வளவு தானே?''

புன்னகையோடு இமைகளை மூடித்திறந்தாள், கார்த்திகா.

''இது உங்க பணம், நீங்க தான் போடணும். உங்கள நான், உண்டியல் வரை கூட்டிகிட்டு போறேன். வருவீங்களா?''

''வேண்டாம், அது ரொம்ப ஆபத்து.''

''இதை எத்தனை முறை சொல்வீங்க... நான், ஆயிரம், ரெண்டாயிரத்துக்கு ஆலா பறக்குறவன். ஒரே நல்ல விஷயம், எம்.ஏ., டிகிரி. அதுவும், சைக்காலஜி சப்ஜெக்ட்.

''வேலை வாய்ப்புக்கு இடமில்லாத பாடம். யாரும் பெருசா படிக்கறதில்ல. ஆனா, நான் நம்பி படிச்சேன். இப்ப அது தான், உங்க முன்னாடி நான் நிக்க காரணம். அந்த படிப்பு எனக்கு இனி துணை இருக்கும். நாளைக்கே நாம உண்டியல்ல பணத்தை போடறோம். நீங்க தயாரா இருங்க.

''நான் திருப்பதி தேவஸ்தானத்தை தொடர்பு கொண்டு கோடி ரூபாயோட வரப்போறத சொல்லி, 'ஸ்பெஷல் பர்மிஷன்' வாங்கிடறேன். யாரைப் பிடிச்சா எல்லாம் அசையும்ன்னு எனக்கு நல்லா தெரியும்.

''நாம நாளைக்கு அதிகாலை, 2:00 மணிக்கு கிளம்பறோம். 6:00 மணிக்கு சன்னிதானத்துல இருப்போம். 6:15க்கு இந்த பணம் உண்டியல்ல விழுந்துரும். சரியா மேடம்?'' என்றான், தனஞ்ஜெயன்.

''ஆர் யூ ஷ்யூர்?'' என்றாள், கார்த்திகா.

''சத்தியம் பண்ணினா தான் நம்புவீங்களா... சத்தியம் கூட பண்றேன்,'' என்றான், தனஞ்ஜெயன்.

''திரும்பவும் சொல்றேன், இது அவ்வளவு சுலபமான விஷயமில்ல,'' என்றாள், கார்த்திகா.

''திரும்பவும் சொல்றேன், இதை நாம சாதிக்கிறோம். இப்ப நான் இந்த பெட்டியோட போகலை. உங்கள திட்டிக்கிட்டே தான் போகப் போறேன். முதல்ல, நம்பள நோட்டமிடுற, 'ஸ்பை'யை திசை திருப்பணும். அப்புறம், அதை போன்ல சொல்றேன். நான் புறப்படறேன்,'' என சொல்லி, கம்பீரத்துடன் வெளியேறினான், தனஞ்ஜெயன்.

முதல் முறையாக, அவனை நம்பிக்கையோடு பார்த்தாள், கார்த்திகா.



- தொடரும்.இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us