
என்றுமே வாழும்போது
எவரிடமும், குறிப்பாக,
மனைவி, மக்களிடத்திலும் கூட
எதிர்பார்ப்பு இல்லாததால்
ஏமாற்றம் இல்லை...
இறக்கும் தருவாயில்
எவரிடம் -
என்ன எதிர்பார்ப்பு?
துடித்துக் கொண்டிருக்கிறதே
உயிர்!
- என்று, 20 ஆண்டுகளுக்கு முன், அப்பா எழுதிய கவிதை, இப்போது, அவருக்கே பொருத்தமாகி விட்டது போல ஆகிவிட்டதே.
உள்ளூர் சொந்தங்களும், வெளியூரிலிருந்து வந்த உறவினர்களும், மரண பால் ஊற்றியும், உயிர் பிரியாமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறதே... அப்பாவின் மங்கிய கண்கள், வாசல் பக்கம் பார்த்தபடி இருக்கின்றன.
நானும், மனைவியும், மகளும், அண்ணனும், மதனியும், அண்ணனின் மகனும் என, எல்லாரும் சேர்ந்து, இரவு - பகலாக பக்கத்திலேயே இருக்கிறோம். எங்களுக்கு தெரிந்து அப்பாவுக்கு, அம்மா மீது எதிர்பார்ப்பு இருக்க வாய்ப்பே இல்லை. காரணம், சம்பாதிக்கிறேன் என்ற திமிரில் அப்பாவை மதித்ததே இல்லை.
சண்டை போட்டால், அழுது, புலம்பி, ஆர்ப்பாட்டம் செய்து, ஊரே வேடிக்கை பார்க்கும்படி நடந்து கொள்வார், அம்மா. அக்கம்பக்கத்தில் உள்ளவர் முன், தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்று, மானம், மரியாதைக்கு பயந்து, குடும்ப கவுரவத்துக்காக ஒதுங்கிக் கொண்டார், அப்பா.
பொம்பள ராட்சசி என்றே சொல்லும் அளவுக்கு திமிர் பிடித்தவர், அம்மா. அப்பா போல, ஒரு மனித நேயமுடைய புனிதமானவர், அம்மாவுக்கு எத்தனை பிறவி எடுத்தாலும் ஒருவரும் கிடைக்க மாட்டார்; எனக்கும், என் அண்ணனுக்கும் கூட, எத்தனை பிறவி எடுத்தாலும், இப்படி ஒரு அப்பா கிடைக்க மாட்டார்.
நானும், அண்ணனும் கூட, அம்மாவை கண்டித்து பேசவில்லை. அப்பாவுக்கு ஆதரவாய் பேசினால், பெற்ற பிள்ளைகள் என்றும் பார்க்காமல், லட்சக்கணக்கில் பணமிருந்தாலும் ஒரு ரூபாய் தரமாட்டார். எங்கம்மா வைத்தது தான் சட்டம். நான் சின்னவனாக இருக்கும்போது, விவாகரத்து வாங்காமலே பிரிந்தே வாழ்ந்த அம்மா, செத்தும் போயிட்டாங்க.
இப்ப யாருக்காக, அப்பா உயிர் பிரியாம துடிச்சிட்டு இருக்கிறது என்று புரியவில்லை.
அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்ற ஒரு மிகப்பெரிய கவிஞர், கட்டுரையாளர், சிறுகதை மற்றும் நாவல் எழுத்தாளர், அப்பா. அவர், இரவு - பகலாக எழுதுவது, படிப்பது என்று இருப்பார்.
யாருக்கும், எந்த தொந்தரவும் கொடுத்ததில்லை. அனைவரையும் சுதந்திரமாக, அவ்வப்போது ஆலோசனை வழங்கியதோடு, யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதி, சம்பாதித்து, அவரின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்.
இலக்கிய உலகில், எத்தனையோ பேரை வளர்த்து விட்டிருக்கிறார். இதில், யார் மீதோ அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவர் யார், எப்படி, எங்கே தேடுவது என்று புரியாமல் நானும், மனைவியும் தவித்தோம்.
எனக்கு திருமணம் ஆனதிலிருந்து இன்று வரை, என்னுடன் தான் இருக்கிறார், அப்பா. ஆனால், எதை பற்றியும் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டோம். இப்போது ஒன்றும் புரியாமல், உயிருக்காக அப்பா போராடும்போது, துக்கம் தாங்க முடியாமல் நானும், மனைவியும் தவிக்கிறோம்.
''ஏங்க... மாமாவின் அலமாரி, பெட்டி, புத்தகம் எல்லாத்தையும் அலசி ஆராய்ந்து, ஏதாவது எழுதி வச்சிருக்காரான்னு பார்ப்போமா,'' என்று, மனைவி பிரீத்தி சொன்ன பிறகு தான், எனக்கும் சரியென தோன்றியது. அப்பாவின் அறையை, ஒன்று விடாமல் தேடினோம்.
அப்போது, என் பெயர் எழுதி, அப்பா வைத்திருந்த நீண்ட உறை கிடைத்தது. அதை பிரித்ததும், எனக்கும், மனைவிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதில், ஒரு நடுத்தர வயது பெண்ணின் படம் இருந்தது. கடிதத்தில்:
என் பாசத்துக்கும், அன்புக்கும் உரிய, மகன் கவினுக்கும், மருமகளாய் வந்து, மகளாய் என்னை பார்த்துக் கொண்ட, பிரீத்திக்கும் எழுதுவது...
என்னை முதியோர் இல்லத்தில் விடாமல், கடைசி வரை வைத்து, எனக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டீர்கள். இந்த கடனை அடைக்க, அடுத்த பிறவியில், உங்களுக்கு மகனாக பிறக்க, கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். இதேபோல, இந்த பிறவியில் வாழாத வாழ்க்கையை, அடுத்த பிறவியில் வாழ ஆசைப்படுகிறேன்.
ஆம் மகனே... உன் அம்மாவும், நானும் காதலித்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தான், திருமணமே செய்துகிட்டோம். உன் அம்மாவோடு வாழ்ந்தது, எட்டு வருஷம் தான். இந்த எட்டு வருஷத்தில், கம்பெனி விஷயமா வெளியூரில் இருந்தது, நாலு வருஷம். ஆக, நான் வாழ்ந்த வாழ்க்கையே நாலு வருஷம் தான்.
எந்த காரணத்தாலோ, 20 வருஷமா, என்னை ஒதுக்கிட்டாள், உன் அம்மா. நானும், தாம்பத்திய உறவுக்காக ஏங்காம, வேறொரு பெண்ணை நாடாமல், அந்த உணர்ச்சியை அடக்கவே, இரவு - பகலாக, இலக்கியத்தின் மீது கவனத்தை வைத்தேன்; நிறைய படித்தேன்; நிறைய எழுதினேன்.
உங்களுக்கே தெரியும், விருதுகள், பரிசுகள், பாராட்டுகள் என, குவித்தேன். உணர்ச்சி இல்லா கட்டையாக இருந்த உடம்பில், திடீரென என் ஆண்மை எட்டிப்பார்த்தது. எப்படி?
தொடர்ந்து என் கவிதைகளை பத்திரிகையில் படித்து, கவிதையில் மயங்கிய, கலைவாணி என்ற பெண், ஒருநாள், போனில் தொடர்பு கொண்டாள்.
'உங்க கவிதை என்னை வியக்க வைக்கிறது; நானும், உங்களை போல, மரபு கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதணும்; கற்றுத் தர முடியுமா...' என்று கேட்டாள்.
நானும் சரியென்று கற்றுத்தர முயன்றேன். மொபைல் போனில், 'வாட்ஸ் - ஆப்' மூலமாக, யாப்பு இலக்கணம் பாடம் நடத்தி, மரபு கவிதை எழுத பயிற்சி கொடுத்தேன்.
பல புத்தகங்களை வாங்கி, தபாலில் அனுப்பினேன். அவள், 32 வயதில், திருமணம் ஆகாமல் இருந்தாள். அவள், திருமணமாகாத பிரம்மச்சாரி என்றால், நான் திருமணம் ஆகியும் பிரம்மச்சாரி என்பது, உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.
அவளின் குடும்ப கஷ்டம்; அவளுக்கு, அம்மா இல்லாதது; அப்பா, அவளுக்கு திருமணம் செய்து வைக்காமல் இருப்பது; திருமண ஆசையில் தவிக்கும் தவிப்பு என்று, பல விஷயங்களை என்னிடம் சொன்னாள். அவளுக்கு, இனிமேல் திருமணம் நடந்தாலும், விவாகரத்து ஆனவனோ, மனைவி இறந்து போன ஒருவனோ தான் கிடைப்பான்.
ஆனால், நல்லவனாக இருப்பானா... ஏற்கனவே துன்பத்தில் துடிக்கும் அவள், இன்னொரு நரகத்தில் மாட்டாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமே... அப்படி என்றால், நானே திருமணம் செய்து கொண்டால் என்ன... அவளுக்கு நானும், எனக்கு அவளும் ஆதரவாய் இருக்குமே என்று, திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன்.
நான், அவளிடம், 'திருமணம் செய்து கொள்ளலாமா' என்று கேட்டது, முறை இல்லை தான்; இருந்தாலும் கேட்டேன்.
ஆனால், 'உங்க வயசென்ன... என் வயசென்ன, நான் உங்க மகள் வயசு. இனிமேல் என்னிடம் இப்படி பேச வேணாம். நீங்க, என் குரு; நான், உங்க மாணவி. ஒரு குருவாய் இலக்கியத்தில் சாதிக்க வழி காட்டுங்கள்; இல்லையேல், உங்க தொடர்பே வேண்டாம்...' என்று மறுத்து விட்டாள்.
நானும், மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன். பல பத்திரிகையில் எழுத, போட்டிகளில் வெற்றி பெற, சிறந்த இலக்கியவாதியாய் வலம் வர உதவினேன். பெரிய பெரிய இலக்கிய ஜாம்பவான்களின் நட்பை ஏற்படுத்தி கொடுத்தேன்.
பல்வேறு போட்டிகளில் எழுதும்படி வற்புறுத்தினேன். பரிசுகள் கிடைக்க, மறைமுகமாக உதவினேன்.
இரண்டு, மூன்று விழாக்களில் மட்டும் சந்தித்ததோடு சரி; அதன்பின் சந்திக்கவில்லை. சாவதற்குள் ஒருமுறை பார்த்து விட்டால், நிம்மதியாக கண்ணை மூடுவேன். உதவ முடியுமா?
அன்புடன் அப்பா...
என்று, கடிதத்தை முடித்திருந்தார்.
எனக்கும், மனைவி பிரீத்திக்கும், துக்கம் தாங்க முடியவில்லை. அப்பாவின் ஆசை, பாசம், எதிர்பார்ப்பு என்னவென்று தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டோமே என்று அழுதோம்.
அப்பாவின் ஆசையை நிறைவேற்ற, ஊர் ஊராக சுற்றி தேடினேன். அப்பாவின் டைரியில் இருந்த முகவரி, போன் நம்பர் வைத்து, இலக்கியவாதிகளிடம் விசாரித்தேன். கடைசியில், அரசு நடத்தும் ஒரு இலக்கிய விழாவில், அந்த அம்மையாரை சந்தித்து, விபரம் கூறினேன்.
''உங்களை எதிர்பார்த்து, அப்பாவின் உயிர், ஊசலாடிக் கொண்டிருக்கிறது. உங்கள் கணவரிடம் அனுமதி பெற்றே போகலாம். அவரும் கூட வந்தாலும் தேவலை,'' என்றேன்.
''எனக்கு, கணவர் இல்லை,'' என்றார்.
''எங்கே... தவறிட்டாரா,'' என்றேன்.
''இல்லை... திருமணமே செய்து கொள்ளவில்லை,'' என்றார்.
''ஏன்?'' என்று கேட்டேன்.
''உங்க அப்பாவை, குருவாக ஏற்றுக் கொண்டதாலும், அப்பாவுக்கும், எனக்கும், வயது வித்தியாசம் அதிகமாக இருந்ததாலும், திருமணம் செய்து கொள்ள மறுத்திட்டேன். ஆனா, உன் அப்பா, என் மனதில் ஆழமா பதிஞ்சிட்டார். அவரை மறக்கவும் முடியல; வேற திருமணம் செய்து கொள்ளவும் மனது ஏத்துக்கலை; உன் அப்பாவை, நெஞ்சிலும், உடம்பால இன்னொருத்தரையும் சுமக்க, என் மனசு இடம் கொடுக்கலை...
''ஒரு ஆணுக்கு பின், ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வாங்க... என்னை பொறுத்தவரை, என் வளர்ச்சிக்கு பின்னால், ஒரு ஆண் இருக்கிறார் என்று சொல்வேன். அந்த ஆண், உங்க அப்பா தான். அடுத்த ஜென்மம்ன்னு ஒண்ணு இருந்தா, உன் அப்பாவுக்கு மனைவியா இருந்து பணிவிடை செய்வேன்,'' என்றார்.
''உங்களை, சித்தின்னு கூப்பிடலாமா!''
''ம்... தாராளமா கூப்பிடலாம்!''
''சித்தி... நீங்க வரலைன்னா, அப்பா உயிர் துடிச்சிட்டே கிடக்கும்; நிராசையில சாக வேண்டி வரும். தயவுசெய்து வாங்க. எனக்கு தெரிஞ்ச வரை, அப்பா எதுக்காகவும் ஆசைப்பட்டதில்லை, யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் வைத்ததில்லை... அவர், முதன் முதலாகவும், கடைசியாகவும் ஆசைப்பட்டதும், அவரின் எதிர்பார்ப்பும், நீங்க மட்டும் தான்; வாங்க...''
''என் அப்பாவை பார்த்துகிட்ட மாதிரி, அப்பா ஸ்தானத்தில் வைத்து உங்களை நான் பார்த்துக்கறேன்... இனிமே, எங்களுக்கு, அப்பாவுக்கு பதிலா நீங்க எங்க கூட இருக்கணும். உங்களுக்கும் வயசாச்சு, நாங்க இருக்கோம் உங்களுக்கு. நடங்க போகலாம்,'' என்று சொல்லி அழைத்து புறப்பட்டேன்.
'அப்பாவின் ஆன்மா சாந்தி அடையும்' என்ற நிம்மதி, என் நெஞ்சில் ஊஞ்சலாடியது.
ராம இளங்கோவன்
பெங்களூரை சேர்ந்த இவர், சிறு வயது முதலே கதை, கட்டுரை, கவிதை மற்றும் நாடகங்கள் எழுதி வருகிறார். இவரது பல படைப்புகள் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளன. சின்னத்திரை தொடர்களுக்கும் கதை, வசனம், பாடல் எழுதியுள்ளார். இதுவரை, 20 புத்தகங்கள் எழுதி, வெளியிட்டுள்ளார்.
பட்டிமன்றம், கருத்தரங்கம் போன்றவற்றில் பேசியுள்ளார். எழுத்துப் பணியோடு, சமூக சேவையும் செய்து வருகிறார்.

