PUBLISHED ON : ஏப் 21, 2013

ஐதராபாத் நோக்கி டிரெயின் சென்று கொண்டிருக்க, மனதில் பலவித குழப்பங்களுடன் அமர்ந்திருந்தாள் பத்மா. அருகில் அமர்ந்திருந்த கிருஷ்ணன், மனைவியைப் பார்த்தார்.
''என்ன பத்மா... என்ன யோசனை, நம்ப நிலைமை இப்படி ஆயிடுச்சேன்னு கவலைப்படறியா. கடைசி வரை ஒரு ராணியாக வலம் வரணும்ன்னு நினைச்சே... ஆனா, அந்தக் கடவுள் வேறு மாதிரியாக நினைச்சுட்டாரே. காசு, பணம் கொட்டிக் கிடக்கு. வியாபாரமும் நல்லவிதமாக நடக்குது. நிம்மதியா இருந்துடலாம்ன்னு முடிவு பண்ணினோம். ஆனா, வியாபாரத்தில் பலத்த நஷ்டம். எல்லாத்தையும் இழந்துட்டோம். இனி, நமக்கு இருக்கிற ஒரே ஆதரவு, நம் மகன்தானே.''
''மனசுக்கு கவலையாக இருக்குங்க. நம்ப சந்துரு நல்ல விதமாகத்தான் கூப்பிடறான்... 'அம்மா... எல்லாம் போயிடுச்சின்னு கவலைப்படாதே. நான் நல்லா சம்பாதிக்கிறேன். இனி, நீயும், அப்பாவும் தனியாக இருக்க வேண்டாம். எங்களோடு வந்து இருங்கம்மா. நாங்க உங்களை நல்லபடியாக பார்த்துக்கிறோம். அப்பாவுக்கு வயசாயிட்டு வருது. இனி, போனதைப்பத்தி கவலைப்பட்டு, என்ன ஆகப்போகுது. ஐதராபாத் புறப்பட்டு வாங்கம்மா...'ன்னு, பாசத்தோடு தான் கூப்பிடறான். இருந்தாலும், என் மனசுக்கு நெருடலாக இருக்குங்க.''
''மருமகளோடு ஒத்துப் போக முடியுமான்னு கவலைப்படற; அப்படித்தானே. பழைய ஞாபகங்கள் வருதுன்னு நினைக்கிறேன். எங்கம்மா ஒரு அப்பாவி. உன்கிட்டே வாய் திறக்காம அடங்கிப் போனாங்க. நான், அவங்களுக்கு ஆதரவாகப் பேசினாலும், என்கிட்டே சண்டை போட்டு, என் வாயை மூடிடுவே. இப்ப, ஒரு மாமியாராக உன் மருமகளை தேடிப் போகும்போது, உனக்குள் அந்த நெருடல் வருதுன்னு நினைக்கிறேன். காலச் சக்கரம் ஒரே இடத்தில் இருக்காது. சுத்திக்கிட்டுதான் இருக்கும் பத்மா. ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சுக்க. நமக்கு வேறு போக்கிடம் இல்லை. கஷ்ட நஷ்டம் வந்தாலும், சகிச்சுக்கிட்டு, வாய் திறக்காமல் இருக்கப் பழகிக்க. அதுதான் நமக்கு நல்லது.''
கணவன் சொல்வதன் அர்த்தம் புரிய, இத்தனை வயசுக்கு மேல், தன்னால் அடங்கிப் போக முடியுமா; மருமகளை அனுசரிச்சு நடந்து கொள்ள முடியுமா... பலவித குழப்பமான மனநிலையோடு கண்களை மூடிக் கொண்டாள் பத்மா.
”தா அடுப்படியில் வேலையாக இருக்க, குளித்து சாமி கும்பிட்ட பத்மா, உள்ளே நுழைந்தாள்.
''அத்தை... நீங்க எதுக்கு வந்தீங்க... போய் ஹாலில் உட்கார்ந்து, 'டிவி' பாருங்க. சமையல் வேலைகளை நான் சீக்கிரமாக முடிச்சிடுவேன். எனக்கு எந்த உதவியும் வேண்டாம்.''
''அதில்லை சுதா... நீ தனியா வேலை பார்க்கற. ஏதோ என்னால முடிஞ்சத, காய்கறி வெட்டித் தர்றது... இப்படி, ஏதாவது சின்னச் சின்ன வேலை செய்து தர்றேன்.''
''வேண்டாம் அத்தை... தவறுதலா கையில ஏதும் காயம்பட்டா கஷ்டம். ஏற்கனவே, உங்களுக்கு சுகர் இருக்கு. நீங்க போங்க அத்தை,'' சுதா சொல்ல...
'இங்கே பாருங்க. இப்படி பொழுதுக்கும் சும்மா உட்கார்ந்திருந்தா எப்படி. நான் ஒருத்தி இந்தக் குடும்பத்துக்காக மாடாக உழைக்கிறேன். வயசானா வேலை செய்யக்கூடாதுன்னு இருக்கா. இனி, சமையலுக்கு வேண்டிய காய்கறிகள், வெங்காயம் எல்லாம் நீங்கதான் நறுக்கித் தரணும் புரியுதா...' 
வயோதிகத்தால் கைகள் நடுங்க, காய்கறி வெட்டி தந்த மாமியார், பத்மாவின் நினைவில் வந்து போனான்.
''பத்மா... நீ ரொம்ப கொடுத்து வச்சவ. நீ பயந்ததுக்கு மாறாக, உன் மருமகள் உன்னை நல்லவிதமாக கவனிச்சு, ராஜ உபசாரம் பண்றா. சுதாவுக்கு நல்ல மனசு. அந்த விதத்தில், நீ அதிர்ஷ்டசாலி...'' கிருஷ்ணன் மனைவியிடம் சொல்ல... 
''வந்ததிலிருந்து சுதாவின் நடவடிக்கைகள் மனசுக்கு இதமாக இருந்தாலும், இந்த கவனிப்பு கடைசி வரை இருக்குமா... இல்லை, மனசு மாறிடுவாளா... தேவையில்லாத பிரச்னைகள் வந்துடுமோன்னு பயமா இருக்குங்க.''
''வா வசந்தி. ரொம்ப நாளா ஆளைக் காணோம். ஊருக்கு போயிருந்தியா?''
தன்னைத் தேடி வந்த சிநேகிதியை வரவேற்றாள் சுதா. ''ஆமாம் சுதா. ஊரில் என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை. பார்க்கப் போனேன். அப்படியே அம்மா வீட்டுக்குப் போய், ஒரு மாசம் இருந்துட்டு வந்தேன்,'' சொன்னவள், உள் அறையிலிருந்த பத்மாவை பார்த்தாள்.
''சுதா, உன் வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்களா?''
''இல்லை வசந்தி. என் மாமனார், மாமியார் ஊரிலிருந்து வந்திருக்காங்க,'' என்றவள்,
அவளை அழைத்து சென்று, பத்மாவிடம் அறிமுகப்படுத்தினாள்.
சிறிது நேரம், அவளிடம் பேசிக் கொண்டு இருந்தவர்கள், ''சரி அத்தை... நீங்க ரெஸ்ட் எடுங்க. நாங்க ஹாலில் உட்கார்ந்திருக்கோம்,'' என்று, சிநேகிதியை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
''அப்புறம் சொல்லு வசந்தி. உன் மாமியாருக்கு என்ன உடம்புக்கு... இப்ப பரவாயில்லையா?''
''அதை ஏன் கேட்கற... முழங்கால் வலி அதிகமாயிடுச்சி. இந்த வயசில் ஆபரேஷன் அது, இதுன்னு களேபரம் செய்றாங்க. வலிக்கு மருந்தை தடவிக்கிட்டு ஓட்ட வேண்டியதுதானே. எப்படியோ போகட்டும்ன்னு இரண்டு நாள் இருந்துட்டு கிளம்பிட்டேன். அது சரி. உன் மாமியார் வந்து நாளாச்சா... எப்ப கிளம்பறாங்க?''
''இல்லை வசந்தி, என் மாமியார், மாமனார் என்னோடு தான் இருப்பாங்க. இனி, அவங்களை கவனிச்சுக்க வேண்டிய பொறுப்பு என்னைச் சார்ந்தது. அதை நான் சந்தோஷமாக ஏத்துக்கிட்டு மனநிறைவோடு செய்திட்டிருக்கேன்.''
''ஏய்... உனக்கென்ன பைத்தியமா, வயசானவங்களை வச்சு பராமரிக்கிறது சாதாரண விஷயம்ன்னு நினைச்சியா... போக போக பிரச்னை தான் அதிகமாகும். பேசாம, அவங்களை ஊருக்கு அனுப்பி வைக்கற வழியைப் பாரு. நாளைக்கு அவங்களாலே, உன் நிம்மதி பறிபோனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.''
''என்ன வசந்தி... கொஞ்சம் கூட மனசுல ஈரமில்லாம பேசற. நீ, இப்படி பேசறது தப்பு. அவங்க யாரு... என் கணவனை பெத்தவங்க. அவரைப் பெற்று, வளர்த்து, படிக்க வச்சு, ஆளாக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பாங்க. வயசான காலத்தில், நம்மை அண்டி வந்தவங்களை, நாம் தொந்தரவாக நினைக்கலாமா... இப்ப நம் கணவரோடு, நாம் அனுபவிக்கிற சந்தோஷத்துக்கும், மகிழ்ச்சிக்கும் காரணம், அவங்களை பெத்தவங்கதான்கிற எண்ணம், ஒவ்வொரு மருமகள் மனசிலும் இருந்தா, அவங்களை வெறுக்கத் தோணாது. கையெடுத்து கும்பிடத்தான் தோணும். நீ என்ன சொன்னாலும், என் மனசு மாறாது. கடைசி வரை என் அத்தை மாமாவை, நான் நல்லவிதமாக பாதுகாப்பேன்,'' என்றாள் சுதா.
உள் அறையிலிருந்து அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பத்மா, இறந்து போன தன் மாமியாரிடம், மானசீகமாக மன்னிப்புக் கேட்டாள்.
***
கோதை ஜெயபிரகாஷ்

