sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மரு(று)மகள்!

/

மரு(று)மகள்!

மரு(று)மகள்!

மரு(று)மகள்!


PUBLISHED ON : நவ 22, 2015

Google News

PUBLISHED ON : நவ 22, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''வா கோமதி... நீ வருவேன்னு தான் நானும், சாப்பிடாம உட்காந்து இருக்கேன்; தட்டு போடட்டுமா...'' வாஞ்சையுடன் கேட்ட அண்ணி வசந்தாவை, அன்பு மேவ பார்த்தாள் கோமதி.

வசந்தா சமையல் அறைக்குள் சென்று, தட்டை எடுத்து வந்து பரிமாறுவதற்குள், கோமதியின் கண்கள், வீட்டை அலசின.

கொஞ்சம் உள்ளடங்கி இருந்தாலும், விசாலமான, காற்றோட்டமான அழகான வீடு. இரண்டு படுக்கையறை, ஹால் வசதியுடன் அக்காலத்திலேயே சவுகரியமாக வீட்டை கட்டியிருந்தார் வசந்தாவின் கணவன். அதை, மகன்கள் இருவரும் எடுத்துக் கட்டி, மேல்தளத்தில் பெரியவனும், கீழ் தளத்தில் சின்னவனும் குடியிருந்தனர்.

கணவன் இறந்த பின், இரு மகன்கள் வீட்டிலும், மாறி மாறி வசிக்கிறாள் வசந்தா.

'விளங்காத தேளுக்கு கொடுக்கு கூட மொன்னையாகத் தான் இருக்கும்' என்பது போல், கோமதி வாழ்க்கைப்பட்டதோ ஏழ்மையான வீடு! அவள் புருஷன், மில் தொழிலாளி; ஒருநாள், மில்லில் ஏற்பட்ட விபத்தில் இறந்து போனான். ஆதரவாய் இருந்தது அவளுடைய ஒரே மகன் சத்தியமூர்த்தி மட்டும் தான்!

அவன் தலையெடுத்த பின், கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள். ஆனால், அதுவும் கொஞ்ச காலம் தான். உடன் வேலை செய்த கிறிஸ்தவ மத பெண்ணை, திருமணம் செய்து கொண்டதால், மகனையும், மருமகளையும் ஒதுக்கி வைத்து விட்டாள். பின், இருக்கும் ஒரே ஆதரவையும் இழந்து விட்டால், கடைசி காலத்தில் எங்கு போய் நிற்பது என்ற நிதர்சனம் உரைக்க, சத்தமில்லாமல் அவர்களை சேர்த்துக் கொண்டாள்.

காலம் ஓடியது. பேரன் பிறந்து விட்டான். ஆனாலும், இந்த, 11 வருஷத்தில், மருமகள் பிரியாமேரியிடம் அத்யாவசியத்திற்கு கூட பேசியதில்லை கோமதி. எது வேண்டுமானாலும், மகன் மற்றும் பேரன் மூலமாகவே பேசிக் கொள்வாள்.

அப்பாவை போலவே, 35 வயசுலேயே சத்தியமூர்த்தியும், ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனான். மகன் இறந்ததும், கோமதிக்கு உலகமே கிடுகிடுத்துப் போனது. காலை இழந்த மனுஷன், கையையும் இழந்த கதையாய், அவளுடைய உலகமே, இந்த ஆறுமாதமாய் நிர்மூலமானது.

''அப்புறம் சொல்லு கோமதி... என்ன சொல்றா உன் மருமக,'' என்று வசந்தா கேட்ட போது தான், உலகத்திற்கே திரும்பி வந்தாள்.

'இதையே இந்த அண்ணி எத்தனை தடவை கேட்பா. மறுபடியும் இங்க ஏன் தான் சாப்பிட வந்தோமோ..' என எண்ணி, பெருமூச்சு விட்டவள், ''அண்ணி... நீங்க தினமும் எனக்கு சோறு போடறத விட, கொஞ்சம் விஷத்த கொடுங்க; நிம்மதியா போய் சேர்ந்துடுறேன். நான் என்ன ஜென்மம் அண்ணி... பெத்தவங்களையும், கூட பிறந்தவனையும், கட்டினவனையும், கடைசியா பெத்த மகனையும் வாரி குடுத்துட்டு, இன்னும் கூட அசராம நிக்கறேனே...'' என்றவள், முந்திச் சேலையில் முகம் மூடி அழுதாள்.

''ஏன் கோமதி... இனி, நீ என்ன தான் செய்யப் போற...'' என்றாள் வசந்தா. அக்கறையாய் விசாரிக்கிறாளா இல்லை தூண்டில் போடுகிறாளா என்று தெரியவில்லை.

''அது தான் அண்ணி எனக்கும் புரியல; இங்க யார் வீட்லயோ வேலை இருக்கிறதா சொன்னீங்களே, விசாரிச்சீங்களா...'' என்றவளுக்கு, சட்டென்று அந்த யோசனை தோன்றியது. ஆனால், அதை வசந்தாவிடம் கேட்டால் என்ன நினைப்பாளோ என்ற தயக்கம் உண்டானது. ஆனாலும், கேட்டுத் தானே ஆக வேண்டும்.

''அண்ணி... நான் வேலைக்கு போயி, அந்த காசை உங்ககிட்ட தந்துட்டு, உங்க கூடவே இருந்திடவா...'' என்று தயக்கமாய் கேட்டாள்.

அவள் சட்டென்று இப்படி கேட்பாள் என்று வசந்தா எதிர்பார்க்கவில்லை.

''என்ன கோமதி... திடீர்ன்னு இப்படி கேட்டுட்ட... நீ இப்படி பேசுனத உங்க அண்ணன் பாத்திருந்தா, அப்படியே கரைஞ்சு போயிருப்பாரு... ஆனா, என்னால என்ன செய்ய முடியும் சொல்லு... பெரியவன் கிட்ட, 10 நாளு, சின்னவன் கிட்ட, 10 நாளுன்னு நானே அல்லாடிக்கிட்டு இருக்கேன். ஏதோ நீ இருக்கிற நிலைமையை பாத்து, நான் குடிக்கிற கஞ்சியில, உனக்கும் ஊத்தறேன். இதுல நீ இப்படி கேட்டா நான் என்ன பதில் சொல்றது. உனக்கு எது வசதியோ அதப் பாத்துக்க... நான் முடியாதுன்னு சொல்றேன்னு மனசு வருத்தப்பட்டுக்காத,'' என்று பட்டும் படாமலும் கூறினாள் வசந்தா.

சிறிது நேரத்தில், அங்கிருந்து கிளம்பிய கோமதி, பஸ் பிடித்து வீட்டிற்கு வந்தாள். நடையில் தள்ளாட்டம் மிகுந்திருந்தது. வீட்டிற்கு செல்லவே, மனம் ஒப்பவில்லை. உரிமை இல்லாத இடத்தில், ஒரு வாய் உண்பது, அவமானமாய் தோன்றியது.

வாசலில் செருப்பை உதறி, அறைக்குள் சென்று முடங்கினாள் கோமதி.

''பாட்டி... நீ ஏன் வந்ததும் படுத்துக்கிட்ட... காபி கொண்டு வந்து தரட்டுமா,'' நெற்றியில் கை வைத்து, அன்பாய் கேட்ட பேரனை, கருணை மேவ பார்த்தாள்.

''வேணாம் ராசா... நீ போய் படி. எனக்கு ராத்திரி சாப்பாடு வேணாம்ன்னு உங்க அம்மாகிட்ட சொல்லிடு,'' இந்த வார்த்தையை சொல்லும் போதே, அடி வயிற்றில், பசி கிளறியது. ஆனாலும், வைராக்கியம் அதையும் மீறி தகித்தது.

ஐந்து நிமிஷம் கழித்து, திரும்ப வந்த பேரன், ''பாட்டி... நீ ஏன் தினமும் சாப்பாடு வேணாம்ன்னு சொல்றேன்னு அம்மா கேட்குறாங்க,'' என்று கேட்டான்.

''நான், மூணு மணிக்குத் தான் எங்க அண்ணி வீட்டுல சாப்பிட்டேன். அதான் பசிக்கல,'' என்றவள் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

இனியும், ஒருவேளை சாப்பாட்டில் காலம் தள்ள முடியாது என்ற உண்மை உரைக்க, காலையில் முதல் வேலையாய் அண்ணி சொன்ன இடத்திற்கு வேலைக்கு போவது என்று முடிவு செய்தாள்.

முதல் நாள் வேலை, கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது. மருமகள் பிரியாமேரி வந்ததில் இருந்து, கோமதியை எந்த வேலையையும் செய்ய விட்டதில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாய் சொகுசாய் இருந்த உடம்பு, சட்டென்று வேலை செய்ய வணங்கவில்லை.

பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தாள். வாசலில் செருப்பை உதறி, வழக்கம் போல் அறைக்குள் புகுந்து கொள்ள எத்தனித்தவளை, ''கொஞ்சம் நில்லுங்க... உங்க கிட்ட பேசணும்,'' என்ற பிரியாவின் குரல் தடுத்து நிறுத்தியது.

பத்து ஆண்டுகளாய் ஒரு வார்த்தை பேச எத்தனிக்காதவள், இன்று முதல் முறையாய் வாயை திறந்திருக்கிறாள்.

''உங்களுக்கு என்னை பிடிக்காதுன்னு தெரியும். அது, உங்களோட தனிப்பட்ட விஷயம். ஆனா, நான், உங்க மகனோட மனைவி; உங்க பேரனோட தாய். இது தான் உண்மை,'' என்றவளை, 'இப்போ என்ன சொல்ல வர்றே...' என்பது போல் விட்டேத்தியாய் பார்த்தாள் கோமதி.

''உங்க மகன் இறந்த பின், தனி மனுஷியாய், நிறைய இழந்து நிற்கிறேன். எங்க வீட்டில எனக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சி செய்தாங்க; ஆனா, நான் சம்மதிக்கல. அவர் விட்டுப் போன கடமைய, மனப்பூர்வமாய் நிறைவேத்தணும்ன்னு நினைக்கிறேன்.

''என் அம்மா வீட்ல, எல்லா வசதிகள் இருந்தும், நான் அங்க போக விரும்பாம, இத்தனை கஷ்டப்பட்டு வேலைக்கு போறது, உங்களுக்காகவும், என் மகனுக்காகவும் தான். ஆனா, என் வலிகள் உங்களுக்கு புரியல. நீங்க மட்டுமில்ல, உங்கள மாதிரி இருக்கிற மாமியார்கள் எல்லாருமே சொந்தத்துக்கு தர்ற மரியாதைய, பந்தத்துக்கு தர்றது இல்ல.

''வழியில வசந்தா ஆன்ட்டிய பாத்தேன். அவங்க மூலமாகத் தான், நீங்க வீட்டு வேலைக்கு போற விஷயம் தெரிஞ்சது. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இளம் விதவையாய் என் கணவனை வளர்த்து ஆளாக்குன உங்களுக்கு, என் வேதனையும், தனிமையும், புரியாம போனது துரதிர்ஷ்டம். இனிமே, நீங்க எந்த வேலைக்கும் போக வேணாம்; இது என் ஆசை. என் மகனை வளர்க்க உதவணும்; அது விண்ணப்பம். இது ரெண்டையும் ஏத்துக்கறதும், நிராகரிக்கறதும் உங்க இஷ்டம்,'' என்று கூறி, அறைக்குள் சென்று விட்டாள்.

கோமதியின் அகங்காரம் பொடிப் பொடியாய் உதிர, ஸ்தம்பித்து நின்றாள்.

இத்தனை ஆண்டுகளாய் பேசாதவள், இன்று பேசியது மொத்தமும் உணர்வு குவியலாய் இருந்தது. மனிதனை மனிதன் விரும்பத் தானே, எல்லா மதமும் போதிக்கிறது. மனிதனை விரும்பாத மதத்தை படைத்தவன், நிச்சயம் இறைவனாக முடியாது.

எதற்காக அவளை வெறுத்தோம் என்ற வினாவுக்கு, இப்போது விடையில்லை. இரவு முழுக்க அழுதாள்; விடியும் போது தெளிந்தாள்.

காலையில் பரபரவென குளித்து வேலைக்கு கிளம்பியவளை, வேதனையோடு பார்த்தாள் பிரியாமேரி.

தன் பேரனை நோக்கி, ''பாட்டி வேலைக்கு போறேன்பா. உன் அம்மாவுடைய ஆசைய நிராசையாக்க இல்ல. உன்னை வளர்த்து ஆளாக்கணும்ங்கற அவளுடைய விண்ணப்பத்தை நிறைவேத்த! இது நம் குடும்பம்; இதுக்கு நானும் உழைக்கணும். கணவன் விட்டுப் போன கடமைய நிறைவேத்தணும்ன்னு உன் அம்மா யோசிக்கும் போது, என் மகன் விட்டுப் போன பாதுகாப்பை, இந்த குடும்பத்திற்கு நானும் தரணும்ங்கிறது புரிஞ்சது. உங்கள விட்டு இனி எங்கயும் போக மாட்டேன்,'' என்று கூறி, பேரனின் கன்னம் வழித்து முத்தமிட்டாள் கோமதி.

''அத்தை...'' கண்ணீர் வழிய பேச முயன்றவளை, தன் விரல்களால் அவள் வாய்மூடி தடுத்தாள்.

''அம்மாடி... முதன் முதலா என்கிட்ட பேசறே... நான் இது வரைக்கும் உனக்கு எதுவாகவும் இருந்தது இல்ல. இனிமேலாவது, உனக்கு அம்மாவா இருந்துட்டு போறனே... என்னை அம்மான்னே கூப்பிடு,'' என்றாள் விழிகள் நிறைய!

எஸ்.பர்வின் பானு






      Dinamalar
      Follow us