PUBLISHED ON : ஏப் 05, 2020

பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு சென்றால், ஏக கூட்டம். எதையும் ஒழுங்காக ரசிக்க முடிவதில்லை. உலகம் முழுவதும், சுற்றுலா தலங்களில் இதே நிலைதான் உள்ளது. எனவே, இவற்றை தவிர்த்து வேறு இடங்களுக்கு சென்று புதிய அனுபவங்களையும் ரசிக்கலாமே...
* மங்கோலியா: ஆசிய நாடான இது, செங்கிஸ்கான் வாழ்ந்த பூமி. இங்கு, அவன் சிறந்து விளங்கிய வில் வித்தை பயிற்சி பெறலாம். குத்துச்சண்டையும் கற்றுத் தரப்படும். குதிரை மீது அமர்ந்தபடி அல்லது தரையில் நின்றபடி அம்பு விட பழகலாம். ஒரே சமயத்தில், பல இடங்களில் நெருப்பு மூட்டி தப்பும் மங்கோலியர்களின் திறமையை கற்கலாம். இதன் மூலம் எதிராளியை திகைக்க வைக்கலாம். பலவித ஆயுதங்கள் செய்ய பழகலாம். மங்கோலியராகவே மாறலாம்
* அமெரிக்க பழங்குடியினர் பற்றி, ஒரு ஜெர்மனியர், 19ம் நுாற்றாண்டில் புத்தகம் எழுதி, அது மிகப்பிரபலமாக விற்பனையானது. இதை பின்பற்றி, ஜெர்மனியில், அமெரிக்க பழங்குடியினராக வாழ, ஒரு வாரம், இரண்டு வாரம் என, 'சம்மர் கேம்ப்' நடத்தி பயிற்சி அளிக்கின்றனர். அச்சமயம், அமெரிக்க பழங்குடியினர் ஆடையுடனும், ஆயுதங்களுடனும், கலாசாரத்தையும் அறியலாம்; அவர்கள் உணவையும் ருசிக்கலாம்
* கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரேனில், 1984ல், செர்னோபில் அணு உலை நான்காவதில் கசிவு ஏற்பட்டு, பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனால், இப்பகுதியில் வசித்தவர்கள் காலி செய்து விட்டனர். இந்த அணு உலை கசிவு மேலும் பாதிக்காமல் இருக்க, அதை மறைத்து, 'கான்கிரீட்'டில், 'ஆர்ச்'சை வடிவமைத்துள்ளனர்.
இன்று, அணு உலை கசிவு கிடையாது. இருப்பினும், ஊரும், சுற்றுப் பகுதியும் முற்றிலுமாக கைவிடப்பட்டாலும், இந்த இடத்தை சுற்றிப் பார்க்க ஒருநாள், ஒருவாரம் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதை ஏற்பாடு செய்வோர், விஞ்ஞானிகள் தான்.
