தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஊனம் தடையல்ல!

ஊனம் தடையல்ல!

ஊனம் தடையல்ல!


PUBLISHED ON : மே 28, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 28, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை, குறுக்கும் நெடுக்குமாக பறக்கும் அந்த ஊழியர்களைப் பார்த்தாலே தெரியும்.

அதிலும், சென்னையில் அதிகாலை காபி முதல், நள்ளிரவு குல்பி வரை எல்லாமே, 'ஆன்லைனில் ஆர்டர்' செய்தால் போதும். அடுத்த பத்தாவது நிமிடம் வீடு தேடி வந்து விடுகிறது.

எவ்வளவு வேகமாகவும், அதிகமாகவும் டெலிவரி செய்கிறோமோ, அந்த அளவிற்கு இதில் வருமானம் அதிகம் என்பதால், தீயாய் பறக்கின்றனர், டெலிவரி ஊழியர்கள்.

இவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, சுப்பிரமணியன், 40 என்ற, மாற்றுத்திறனாளி ஒருவரும் உணவு டெலிவரி ஊழியராக வெற்றிகரமாக, சென்னையில் வலம் வருகிறார்.

உலகின் ஒன்பதாவது இடத்திலும், இந்தியாவில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது, 'ஜோமோட்டோ' உணவு டெலிவரி நிறுவனம். இந்நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்களில் ஒருவரான சுப்பிரமணியன், பிறந்தது வளர்ந்தது எல்லாம், சென்னை கோடம்பாக்கம் சாமியார் மடம் பகுதியில் தான்.

சிறு வயதில் போலியோவால், இவரது இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டது. எட்டாவது வரை படித்தவர், அதன் பிறகு குடும்ப சுமையை தாங்க, வேலைக்கு போக ஆரம்பித்தார். மாற்றுத்திறனாளியான இவருக்கு வேலை கொடுப்பதில் நிறுவனங்கள் தயங்கவே, சொந்தமாக சுண்டல் மற்றும் டீ விற்கும் தொழில்களை செய்து வந்தார். நண்பர் ஒருவர் மூலமாக உணவு டெலிவரி செய்யும் வேலை கிடைத்தது.

சுப்பிரமணியன் கூறும் போது...

'வேலைக்கு சேர்ந்த புதிதில், 'உன்னால் முடியுமா?' என்று பலரும் கேட்டனர் ஆனால், என்னால் முடியும் என்று நிருபித்ததை அடுத்து, இப்போது என்னைப் போலவே மேலும் சில மாற்றுத்திறனாளிகளுக்கு, வேலையை வழங்க முன் வந்துள்ளது, நிறுவனம்.

'சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள் உருவாக்கிய, 'நியோமோஷன்' மூன்று சக்கர மின்சார சைக்கிள் காரணமாக, எரிபொருள் செலவு இல்லை. இந்த வாகனத்திற்கு தேவையான பணத்தில், பத்தில் ஒரு பங்கை, நாம் கொடுத்தால் போதும். நன்கொடையாளர்கள் புண்ணியத்தில், நமக்கு ஒரு நவீன மின்சார சைக்கிள் வாகனம் கிடைத்துவிடும்.

'சென்னையைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல், யாராவது ஏதாவது கேட்டு வாங்கி சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். அதிலும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில், 'ஆர்டர்'கள் குவியும்.

'போட்டியான உலகம் தான். ஆனால், அன்பு மயமான உலகமும் கூட. சக ஊழியர்கள் முதல் வாடிக்கையாளர்கள் வரை அனைவரும், என் மீது அன்பு கொண்டு, ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

'இதில் வரும் வருமானம், எனக்கு போதுமானதாக இருக்கிறது. இந்த வருமானத்தில், மனைவி, குழந்தைகளுடன் மன நிறைவாக வாழ்கிறேன். என்ன செய்யலாம் என, சோர்ந்து போயுள்ள மாற்றுத்திறனாளிகள் கொஞ்சம் மாற்றி யோசித்தால், நல்ல வாழ்க்கை பெறலாம். ஆலோசனை கேட்டால் சொல்ல தயாராகவும் இருக்கிறேன்...' என்கிறார்.

நம்பிக்கை மனிதர், சுப்பிரமணியனின் மொபைல் போன் எண்: 93805 -15758.

எல். எம். ராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us