PUBLISHED ON : நவ 05, 2023

மாலாடு!
தேவையான பொருட்கள்: பொடித்த சர்க்கரை, பொடித்து சலித்த பொட்டுக்கடலை மாவு - தலா ஒரு கப், நெய் - 150 கிராம், ஏலக்காய் துாள் - சிறிதளவு, வறுத்த முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்.
செய்முறை: மேற்கண்ட பொருட்களில் நெய் தவிர, மற்ற அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். பின், நெய்யை உருக்கி ஊற்றி, நன்றாக பிசைந்து லட்டுகளாக பிடிக்கவும்.
ஜிலேபி!
தேவையான பொருட்கள்: மைதா மாவு - கால் கிலோ, தயிர் - ஒரு கப், ஆப்ப சோடா - அரை தேக்கரண்டி, கேசரி பவுடர் - சிறிதளவு, சர்க்கரை - அரை கிலோ, எண்ணெய் - அரை லிட்டர், ரோஸ் எசன்ஸ் - சிறிதளவு, எலுமிச்சை சாறு - அரை மூடி, ஏலக்காய் - ஒரு சிட்டிகை.
செய்முறை: மைதா மாவு, தயிர், ஆப்ப சோடா, கேசரி பவுடர் ஆகியவற்றை சேர்த்து, இட்லி மாவு பதத்தில் கரைத்து, அரை மணி நேரம் ஊற விடவும்.
சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து, பிசுக்கு பதத்தில், பாகு காய்ச்சவும், ஏலக்காய் துாள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.
அகலமான வாணலியில் எண்ணெயை சூடாக்கவும். பிளாஸ்டிக் கவரில், 'கோன்' செய்து, கலந்து வைத்துள்ள மாவை நிரப்பி, முனையில் துளையிட்டு, காய்ந்த எண்ணெயில் ஜிலேபிகளாக பிழிந்து வேக வைத்து எடுக்கவும்.
பின்னர், அவற்றை சர்க்கரை பாகில் போட்டு, இரண்டு நிமிடம் ஊற வைத்து எடுக்கவும்.
மில்க் கேக்!
தேவையான பொருட்கள்: பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 100 கிராம், எலுமிச்சை சாறு, தண்ணீர், நெய் - தலா ஒரு தேக்கரண்டி.
செய்முறை: எலுமிச்சை சாறுடன் தண்ணீர் சேர்த்து கலக்கவும். அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து சுண்டக் காய்ச்சவும்.
பால் நன்றாக வற்றி, கால் பாகமாக சுண்டியதும், எலுமிச்சை சாறு சேர்க்கவும். பிறகு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் தடவி, பால் கலவையை கொட்டி மூடி வைக்கவும். மறுநாள், பால் கலவை பாத்திரத்தை லேசாக சூடு செய்து, அகலமான தட்டில் கொட்டி, துண்டுகளாக்கி பரிமாறவும்.
கராச்சி அல்வா!
தேவையான பொருட்கள்: கார்ன் ப்ளார் - அரை கப், தண்ணீர் - 3 கப், சிவப்பு நிற புட் கலர் - சிறிதளவு, சர்க்கரை - ஒரு கப், முந்திரி - 10, நெய் - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் நெய் விட்டு, முந்திரி சேர்த்து வறுத்து எடுக்கவும். கார்ன் ப்ளாரில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில், சர்க்கரையுடன் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பிறகு, கார்ன் ப்ளார் கரைசலை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து கை விடாமல் கிளறவும். நடு நடுவே தேவையான அளவு நெய் விட்டு கிளறவும்.
கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது, அடுப்பிலிருந்து இறக்கவும். மேலே முந்திரியை அலங்கரித்து பரிமாறவும்.
ரிப்பன் பக்கோடா!
செய்முறை: அரை கிலோ புழுங்கல் அரிசியை, அரை மணி நேரம் ஊற வைத்து, நீரை வடிக்கவும். இதோடு, காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயம் - கால் தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து, வெண்ணெய் போல நன்றாக அரைத்து எடுக்கவும்.
பின், இதோடு நன்கு சலித்த ஒரு கப் கடலை மாவு, ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து, நன்றாக பிசைந்து, ரிப்பன் அச்சு நாழியில் நிரப்பி, காய்ந்த எண்ணெயில் பிழிந்து, வெந்ததும் எடுக்கவும்.
கார கடலை பருப்பு!
செய்முறை: கடலை பருப்பு, 300 கிராம், தண்ணீரில் ஊற விடவும். பின், நீரை வடித்து, அகலமான துணியில் பருப்பை கொட்டி நிழலில் உலர்த்தவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உலர்ந்த பருப்பை சிறிது சிறிதாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதனுடன், மிளகு துாள் - 3 தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு கலந்து பரிமாறவும்.
அவல் மிக்சர்!
செய்முறை: அரிசி அவல் - 2 கப் எடுத்து, தண்ணீரில் இரண்டு நிமிடம் ஊற வைத்து, நீரை ஒட்ட பிழியவும். பின், அதை மிதமாக காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
முந்திரி, திராட்சை - தலா 20 மற்றும் கறிவேப்பிலையையும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
எண்ணெயில் பொரித்த பொருட்களுடன், மிளகாய் துாள் - அரை தேக்கரண்டி, சர்க்கரை - ஒரு தேக்கரண்டி, ஓமப்பொடி - சிறிதளவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
பாதுஷா!
தேவையான பொருட்கள்: மைதா மாவு - ஒன்றரை கப், சர்க்கரை - அரை தேக்கரண்டி, தயிர் - ஒன்றரை தேக்கரண்டி, வெண்ணெய் - கால் கப், எண்ணெய் - 2 தேக்கரண்டி, சமையல் சோடா - 2 சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.
சர்க்கரை பாகு செய்ய தேவையான பொருட்கள்: சர்க்கரை - அரை கப், ஏலக்காய் - 2 சிட்டிகை, எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி, குங்குமப் பூ சிறிதளவு, தண்ணீர் தேவையான அளவு.
செய்முறை: வெண்ணெயை உருக்கி, அதனுடன் எண்ணெய், சர்க்கரை, தயிர், சமையல் சோடா சேர்த்து நுரைக்க கலக்கவும். இதில், மைதா மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து, உருண்டைகளாக உருட்டவும். நடுவில் லேசாக அழுத்தி, பள்ளம் செய்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
சர்க்கரை பாகு செய்ய கொடுத்துள்ளவற்றில், கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, பொரித்த பாதுஷாக்களை போட்டு, சிறிது நேரம் கழித்து எடுத்து, தட்டில் வைக்கவும்.
தீபாவளி லேகியம்!
தேவையான பொருட்கள்: சுக்கு, சீரகம், மிளகு - தலா 15 கிராம், ஓமம் - 10 கிராம், கண்டந்திப்பிலி, சித்தரத்தை, நாட்டுச் சர்க்கரை - தலா 2 கிராம், கிராம்பு - 3, அரிசித் திப்பிலி - ஒரு துண்டு. இவை அனைத்தையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து, பொடித்து சலிக்கவும்.
இரண்டு பேரீச்சம் பழத்தை விதை நீக்கி, பொடியாக நறுக்கவும். உலர் திராட்சை, வெல்லம் - தலா 50 கிராம், நெய் - 100 மிலி.
செய்முறை: நெய்யை சூடாக்கி முதலில் பேரீச்சம்பழம், உலர் திராட்சை போட்டு வதக்கி, வறுத்து பொடித்த பொடியை சேர்க்கவும்.
வெல்லம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, பாகு வைத்து வடிகட்டி, பொடி கலவையில் சேர்த்தால், உடனே கெட்டியாகும். அதை காற்றுப்புகாத டப்பாவில் நிரப்பி உபயோகிக்கலாம்.
ஜீரணத்திற்கு அருமருந்து இந்த லேகியம். பொடி செய்ய முடியாதவர்கள், நாட்டு மருந்து கடைகளில் மருந்து பொடி மற்றும் நாட்டுச் சர்க்கரையும் கேட்டு வாங்கி, மேலே சொன்ன முறையில் லேகியம் செய்யலாம்.
கஸ்டர்ட் பவுடர் அல்வா!
தேவையான பொருட்கள்: கஸ்டர்ட் பவுடர் - அரை கப், சர்க்கரை - ஒன்றரை கப், தண்ணீர் - 2 கப், நெய் - இரண்டரை தேக்கரண்டி, முந்திரி - 6, ஏலக்காய் துாள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: ஒரு தட்டில் நெய் தடவி வைத்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் பேனில் சர்க்கரை, கஸ்டர்ட் பவுடர், தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ளவும். பின்னர், அதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் விடாமல் கிளறவும்.
ஒட்டாமல் அல்வா பதம் வந்தவுடன், ஏலக்காய் துாள், பொடித்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும். இந்த கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஒரு மணி நேரம் கழித்து தட்டை தலைகீழாக கவிழ்த்து, துண்டுகள் போடவும்.
பட்சணம் டிப்ஸ்!
* எந்த மிக்சராக இருந்தாலும், அதனுடன் அரிசி மிட்டாய் அல்லது சீரக மிட்டாய் சேர்த்தால், கலர்புல்லாகவும், சுவையாகவும் இருக்கும்.
* பலகாரம் செய்வதற்கு, வாணலியில் எண்ணெய் காய வைத்ததும், கொய்யா இலை அல்லது வாழை பட்டையை அம்மியில் நசுக்கிப் போட்டு பொரித்து எடுக்கவும். பிறகு, இந்த எண்ணெயை உபயோகித்தால், பலகாரமானது எண்ணெய் குடிக்காது.
* எந்த வகை கார பலகாரமானாலும், மாவு கலவையுடன் வெண்ணெய் சேர்த்து பிசைந்து செய்தால், சுவை நன்றாக இருக்கும்.
* தேன் குழல் செய்யும்போது, தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்து செய்தால், சுவை கூடுதலாக இருக்கும்.
* ரவா லட்டு செய்யும்போது, கால் பங்கு பால் பவுடர் கலந்து செய்தால், சுவையாக இருக்கும்.
* அதிரசத்திற்கான அரிசி மாவை, வெல்லத்தோடு கலந்ததும், பேரீச்சை துண்டுகளை சேர்த்து செய்தால், அதிரசத்தின் சுவை கூடும்.
* குலோப் ஜாமூன் செய்யும்போது சர்க்கரை பாகில் சிறிது தேன் விட்டால், நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
* பூந்தி தேய்க்கும் மாவில், ஒரு தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் சேர்த்து, பூந்தி செய்தால், முத்து முத்தாக வரும்.
