தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/முழங்காலை கட்டி உட்காராதீர்!

முழங்காலை கட்டி உட்காராதீர்!

முழங்காலை கட்டி உட்காராதீர்!


PUBLISHED ON : செப் 10, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யாராவது முழங்காலை கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், அவர்களிடம், 'மூட்டைக் (மூட்டு)கட்டிக் கொண்டு உட்காராதே...' என்பர், பெரியவர்கள். இவ்வாறு சொல்ல ஒரு புராண காரணம் உள்ளது.

மூட்டைக் கட்டி, முகத்தை குப்புற புதைத்து அமர்வது, தவறான வழக்கம். வரகுண பாண்டியன் என்ற மன்னர், இந்தப் பழக்கத்தைக் கைவிட காரணமாக இருந்தார். அவர், தீவிர சிவ பக்தர்.

ஒருமுறை மன்னர், இரவில் நகர்வலம் வந்த போது, ஒரு கிணற்றில் கிடந்த தவளைகள், 'டொர டொர' என, சத்தம் போட்டுக் கொண்டிருந்தன. அந்த சத்தம் அவரது காதுகளில், 'ஹர ஹர' என விழுந்தது. உடனே, தன் கையிலிருந்த பொற்காசுகளை எல்லாம் கிணற்றுக்குள் போட்டு விட்டார், மன்னர்.

இன்னொரு முறை, ஒரு திருடனை காவலர்கள் பிடித்து வந்து, விசாரணைக்காக மன்னர் முன் நிறுத்தினர்.

'என்ன தவறு செய்தாய்?' என கேட்டார், மன்னர்.

'மன்னா... பசி தாங்கவில்லை, ஒரு வீட்டு வாசலில் எள் காயப் போட்டிருந்தனர். அதை எடுத்து சாப்பிட்டு விட்டேன்...' என்றான், திருடன்.

'அடுத்தவர் வீட்டு எள்ளையா தின்றாய்... திருடுவது பாவமில்லையா?' என்றார், மன்னர்.

'மன்னா, பசுவாய் பிறந்திருந்தால், நம் ஊர், சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு பாலாவது கொடுத்திருப்பேன். பூச்சியாய் பிறந்திருந்தால், நடை அடைத்த பிறகும் கூட, பெருமானின் மேனியில் ஓடி விளையாடி மகிழ்ந்திருப்பேன். செக்கு மாடாய் பிறந்திருந்தால், பெருமானின் கோவிலில் தீபம் எரிய, எண்ணெய் அரைத்துக் கொடுத்திருப்பேன்.

'இது ஏதுவுமே இல்லாததால், இப்பிறப்பில் திருட்டு பாவம் செய்து விட்டேன். அடுத்த பிறப்பிலாவது மாடாய் பிறந்து, பெருமானுக்காக ஓடாய் தேய்ந்து, செக்கு இழுப்பேன்...' என்றான்.

திடீரென, திருடன் மீது பாய்ந்த மன்னர், அவனது வாயின் ஓரத்தில் ஒட்டியிருந்த எள்ளை எடுத்து, தன் வாயில் போட்டுக் கொண்டார். திருடனும், மற்றவர்களும் அதிர்ந்தனர்.

'மன்னா, என் வாயில் ஒட்டியிருந்த எச்சில் எள்ளை எடுத்து, உங்கள் வாயில் ஏன் போட்டீர்கள்?' என்றான், திருடன்.

'திருடனே... அடுத்த பிறப்பில், நீ செக்கு மாடாய் பிறக்கும் போது, துணைக்கு நானும் இன்னொரு மாடாய் வருவேன். செக்கிழுக்க இரண்டு மாடு வேண்டுமல்லவா?' என்றார்.

ஒரு பிராமணனை அறியாமல் கொன்ற பாவத்திற்காக, இந்த மன்னரை, பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. இதற்கு பரிகாரமாக, தஞ்சாவூரிலுள்ள திருவிடைமருதுார் மகாலிங்கேஸ்வரர் கோவிலுக்குச் சென்றால், பாவம் தீரும் என்பதை அறிந்தார்.

கோவிலின் கிழக்கு வாசல் வழியே நுழைந்தார், மன்னார். அவரைப் பிடித்த பிரம்மஹத்தி, கோர வடிவம் எடுத்து, கோபுரம் அருகில் முழங்காலைக் கட்டி, முகத்தை அதில் புதைத்து உட்கார்ந்து விட்டது.

சிவனின் ஆணைப்படி, வரகுண ராஜா, இன்னொரு வாசல் வழியே ஊருக்கு போய் விட்டார். பிரம்மஹத்தியால் அங்கிருந்து அசைய முடியவில்லை. அந்த தோஷம் இப்போதும் சிலை வடிவில் இருக்கிறது.

பக்தர்களும், இக்கோவிலின் ஒரு வாசல் வழியாகச் சென்று, மற்றொரு வாசல் வழியாக வெளியேறுகின்றனர். இதனால் தான், மூட்டைக் கட்டி உட்காரும் வழக்கம் கூடாது என்பர்.

- தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us