PUBLISHED ON : பிப் 23, 2025

அறிவியல் வளர்ச்சியில் மகத்தான சாதனைகளை படைத்து வருகிறது, மனித சமுதாயம். சில கி.மீ., சுற்றளவுக்குள் இருக்கும் மனித நடமாட்டம் குறித்து அறிதல் இல்லாமல், தனித்தனி தீவுகளாக மனித சமுதாயம் வாழ்ந்த காலமும் உண்டு. தற்போது, பல லட்சம் கி.மீ., துாரத்தில் உள்ள விண்வெளியில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் நிலைக்கு, முன்னேறி இருக்கிறோம்.
இந்த அறிவியல் வளர்ச்சியில், செயற்கைக்கோள்களின் பங்களிப்பு அளப்பரியது. எல்லா வினைக்கும் எதிர்வினை இருப்பது போல, செயற்கைக்கோள் ஏவுதல் உள்ளிட்ட விண்வெளி நிகழ்வுகளுக்கும், எதிர்வினை இருக்கிறது. அதுதான், 'விண்வெளி குப்பைகள்' எனும் பேராபத்து.
விண்வெளியில் தன்னுடைய பயன்பாட்டை முடித்த பின்னும், அங்கு சுற்றித் திரியும் செயற்கைக்கோள்களின் பாகங்களும், வெடித்துச் சிதறும் பொருட்களும் தான், விண்வெளி குப்பைகள். கடந்த, ஐந்து ஆண்டுகளில் விண்வெளியின் குப்பையானது, 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கின்றனர்.
'கெஸ்லர் சிண்ட்ரோம்' என்பது, 1978ல், 'நாசா' விஞ்ஞானி டொனால்ட் ஜே.கெஸ்லரால் கணிக்கப்பட்ட, ஒரு கோட்பாடு. இது, பூமியின் சுற்றுப்பாதையில், விண்வெளி குப்பைகளுக்கு இடையேயான மோதல்களால் ஏற்படும் விளைவை குறிக்கிறது.
செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி பயணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, செயலிழந்த செயற்கைக்கோள்கள், ராக்கெட் உதிரி பாகங்கள் மற்றும் பிற பொருட்கள் என, விண்வெளி குப்பைகளின் அளவானது, நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
அதில், இரண்டு குப்பைத் துண்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது, அவை இன்னும் அதிகமான குப்பைகளை உருவாக்கி, சிக்கலை உருவாக்கும்.
இதன் விளைவாக, புதிய செயற்கைக்கோள்களை ஏவுவதும் அல்லது விண்வெளிப் பயணங்களை மேற்கொள்வதும், சாத்தியமற்றதாக ஆக்கிவிடும் என கூறப்படுகிறது.
சர்வதேச நாடுகளுடன், 'நாசா' இணைந்து, 'கிளீன் ஸ்பேஸ்' அதாவது, விண்வெளி குப்பைகளைக் குறைக்கவும் அல்லது அங்கிருக்கும் குப்பைகளை அகற்றவும், புது உத்திகளை ஆராய்ந்து வருகிறது.
'கெஸ்லர் சிண்ட்ரோம்' நிகழ்வால், செயற்கைக்கோள் செயல்பாடுகள் மற்றும் பூமியில் அன்றாட வாழ்வின் பயன்படுத்தப்படும் இன்டர்நெட், தொலைத்தொடர்பு போன்றவை பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது.
* தொலைத்தொடர்பு மற்றும் வானிலை முன்னறிவிப்பு உட்பட, பல்வேறு சேவைகளை பாதிக்கலாம்
* குப்பைகளை அகற்றுவதற்காக விண்வெளி பயணம் மேற்கொள்ள வேண்டி இருப்பதால், இதன் செலவுகள் அதிகரிக்கும்
* சில குப்பைகள், பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையலாம். இதனால், மக்களுக்கும், சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படலாம்
* செயற்கைக்கோள்களின் செயலிழப்பு காரணமாக, ஜி.பி.எஸ்., மாற்றம், முக்கியமான சேவைகளை சீர்குலைக்கலாம். குறிப்பாக, போக்குவரத்து தளவாடங்கள் மற்றும் அவசர சேவைகளைப் பாதிக்கலாம்.
பூமியின் கண்காணிப்பு, விண்வெளி ஆய்வு மற்றும் வானியல் உள்ளிட்ட அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு இடையூறாக இருக்கலாம்.
தற்போது, பூமியின் சுற்றுப்பாதையில், சுமார் 6,000 டன், விண்வெளி குப்பைகள் உள்ளன. இதற்கு தீர்வு காண, உலகளாவிய அளவில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலை தொடர்ந்தால், பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கின்றனர், விஞ்ஞானிகள்.
- எம். முகுந்த்