தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உயிர் பலியை விரும்புகிறாரா?

உயிர் பலியை விரும்புகிறாரா?

உயிர் பலியை விரும்புகிறாரா?


PUBLISHED ON : மே 01, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 01, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பக்தர்களை ரட்சிக்கவும், துஷ்டர்களை சிட்சிக்கவும், பல உருவங்களில், பலவித ஆயுதங்களுடன் அவ்வப்போது அவதரிக்கிறாள் தேவி பராசக்தி. இப்படிப்பட்ட உருவங்களில், காளி உருவமும் ஒன்று. பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும், பக்தர்களிடம் மிகவும் கருணை உடையவள் காளி.

அன்புடன் அளிக்கும் அன்ன நிவேதனத்தையே ஏற்றுக் கொள்வாள் இந்த காளி. ஒரு சிலர், காளிக்கு, ஜீவன்களை பலியிடும் வழக்கத்தை வைத்து கொண்டிருக்கின்றனர். இதை, அவள் விரும்புகிறாளா? இதற்கு ஒரு சின்ன கதை உள்ளது.

ஹரிவியாசர் என்ற பக்தர் இருந்தார். ஒரு சமயம், இவர் காட்டினுள் செல்லும் போது, அங்கு காளி கோவிலை கண்டு, உள்ளே சென்றார்;

ஒரு குடியானவன், ஆடு ஒன்றை பலியிட்டு கொண்டிருப்பதை பார்த்தார்.

'சே... இது என்ன பேதமை... இந்த வாயில்லா ஜீவனையா இந்த காளி கேட்கிறாள். எல்லா ஜீவன்களும் அவளுடைய குழந்தைகளல்லவா? இந்த ஜீவன் அலறும் சப்தம், தாயின் காதுகளில் விழவில்லையா?' என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தார்.

காளிதேவிக்கு, இவர் சொல்வது கேட்டது. பரம பக்தர் ஒருவர், பசியோடு இங்கு வந்து, அருவருப்புடன் திரும்பி போகலாமா என்று யோசித்து, அவரை வழிமறித்து, 'நீர் இப்படி பசியோடு திரும்பி போகக் கூடாது. உச்சி காலம் வந்ததும், இங்கு அன்னம் நிவேதனம் செய்யப்படும். அதை வாங்கி, உண்டு, பசி தீர்ந்து செல்லலாம்...' என்றாள்.

அதற்கு, 'அம்மணி... நீங்கள் எனக்கு தரிசனம் கொடுத்தது என் பாக்யம். ஆனால், ஜீவபிராணிகள் வதை செய்யப்படுவதை தாங்கள் ஏற்று மகிழ்கிறீர்கள். ஆகவே, இந்த கொலை களத்தில் படைக்கப்படும் நிவேதனம், தங்களுக்கு உகந்ததாக இருக்கலாம்; ஆனால், என்னால் சகித்துக் கொள்ள முடிய வில்லை...' என்றார் ஹரிவியாசர்.

மிகவும் கருணை யுடன், 'பக்தரே... இவர்களது பலியை நான் ஏற்கிறேன் என்பது தவறு; நான் விரும்பவே இல்லை. இவர்கள், தங்களது நாவின் ஆசையை தீர்த்துக் கொள்வதற்காக, என் பெயரைச் சொல்லி, பலவித ஜீவன்களை பலியிட்டு, அதன் இறைச்சியை தின்று, மகிழ்ச்சியடைகின்றனர்...' என்றாள் தேவி.

'நீங்கள் விரும்பவில்லையென்றால், அதை ஏன் தடுக்கவில்லை? தடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பது கூட, நீங்கள் விரும்புவதாகத் தானே கொள்ள முடியும்?' என்றார் அவர்.

மீண்டும் புன்முறுவலுடன், 'மக்களுக்கு அறிவைக் கொடுத்து, நன்மை, தீமைகளை தெரிந்து நடக்க, வழி வகுத்து கொடுத்தோம். அவர்கள் தவறான வழியில் சென்றால், தண்டிப்பது என் கடமை; நல்லவர்களுக்கு அருள் செய்வது என் கடமை. நல்வழி செல்ல வேண்டும் என்று போதிப்பது உம் போன்றவர்களின் கடமை. உயிர் பலியிடுவதை தவிர்க்க, நீங்களே பல இடங்களுக்கு சென்று, போதனை செய்யுங்கள்...' என்றாள் தேவி.

அதற்கு, 'இது நாடு முழுவதும் நடைபெறும் பாவச் செயல். அதை தடுப்பதற்கு, தேவியாகிய தாங்கள் தான் முயல வேண்டும்...' என்றார் ஹரிவியாசர்.

அதற்கு சம்மதித்த தேவியும், அந்நாட்டு அரசனுடைய கனவில் தோன்றி, 'இனி, இம்மாதிரி என் சன்னிதியில் உயிர் பலியிட வேண்டாம்; இதை நான் ஏற்கவில்லை. உன் நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லி, உயிர் பலியை நிறுத்து...' என்றாள்.

விழித்தெழுந்த அரசனும், தேவியின் கருணையைப் புகழ்ந்து பாடி, நாட்டில் உயிர் பலியிடுவதை நிறுத்தினான்.

ஹரிவியாசரும், இது கண்டு மகிழ்ந்து, தேவியை வணங்கி, உயிர் பலியிட வேண்டாமென்று எல்லா இடங்களிலும் போதனை செய்தார்; உயிர் பலியிடுவது நாட்டில் நின்றது. கால்நடைகள் பெருகின; கழனிகளுக்கு ஏராளமான உரம் கிடைத்தது. பயிர் பச்சைகள் செழித்து வளர்ந்து, தானியங்களும், காய்கறிகளும் ஏராளமாக கிடைத்தன.

மக்கள் மகிழ்ச்சியுடன் வேளாண்மையில் ஈடுபட்டனர். நியாயமான வரிப் பணத்தை, ஒழுங்காக செலுத்தி வந்தனர். அரசு கஜானா நிரம்பி வழிந்தது; எங்கும் சுபிட்சம் நிறைந்தது.

இப்படியாக உயிர் பலியிடுவதை நிறுத்தினர் என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம். யோசித்துப் பார்க்க வேண்டும். பிற ஜீவன்களை கொன்று சாப்பிடத்தான் வேண்டுமா?

***

ஆன்மீக வினா-விடை!

குடும்பத்தில் சாந்தி நிலவ, எந்த கடவுளைப் பூஜிக்க வேண்டும்? ஏதாவது ஸ்தோத்திரம் இருந்தால், தயவு செய்து சொல்வீர்களா?

விநாயகரை வழிபட்டால், எல்லா தீமைகளும் அகன்று, சாந்தி கிடைக்கும்.

***

-வைரம் ராஜகோபால்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us