தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/நன்றி மறக்க வேண்டாம்!

நன்றி மறக்க வேண்டாம்!

நன்றி மறக்க வேண்டாம்!


PUBLISHED ON : டிச 30, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு. அதாவது, நன்றி மறந்தவர்களுக்கு விமோசனமே இல்லை என்பதே இக்குறளின் கருத்து.

கவுதமன் என்பவன், தீய குணங்களின் பிறப்பிடமாகவே இருந்தான். நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தும், அதற்கான பழக்க வழக்கங்கள் ஏதுமில்லாதிருந்த கவுதமன், தீய குணங்கள் அனைத்தையுமே குத்தகை எடுத்திருந்தான்.

மிருகங்களை வேட்டையாடி, மனம்போன போக்கில் போன அவன், ஒருசமயம், மத யானையிடம் தப்பி பிழைத்து, பெரும் ஆல மரம் ஒன்றின் அடியில் அமர்ந்தான்.

அந்த ஆல மரத்தில், ராஜதர்மன் எனும் கொக்கு, வசித்து வந்தது. கசியபரின் மகனான அக்கொக்கு, தினமும் அதிகாலையில் பிரம்மலோகம் போய், பிரம்மாவை வழிபடும். பின், பூமியில் உள்ள தன் நண்பனான, ராட்சச அரசர், விரூபாட்சன் என்பவரை சந்தித்து பேசி, தன் இருப்பிடமான ஆல மரத்திற்குத் திரும்பும்.

அன்று, தன் இருப்பிடத்திற்குத் திரும்பிய கொக்கு, அங்கு களைத்து போய் கிடந்த கவுதமனைப் பார்த்தது. உடனே, அவனை விருந்தினனாக கருதி, அவனுக்கு உணவிட்டு, மலர்களால் ஆன படுக்கையை விரித்து, அதில் படுக்க செய்து, தன் சிறகுகளால் நன்றாக விசிறியது.

களைப்பு தீர்ந்ததும் கவுதமன், 'நான் காசில்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். அதற்காகத்தான் படாதபாடு படுகிறேன்...' என்று, தரித்திரப் பாட்டு பாடினான்.

அவனுக்கு ஆறுதல் சொன்ன கொக்கு, 'கவலைப் படாதே... என் நண்பன், விரூபாட்சன் என்பவன் இருக்கிறான். அவனிடம் போய், நான் அனுப்பியதாக சொல், அள்ளிக் கொடுப்பான்...' என்று, வழியும் காட்டியது.

அதன்படியே மறுநாள் போய், விரூபாட்சனை சந்தித்து, நடந்ததைச் சொன்னான், கவுதமன்.

விரூபாட்சனும், தங்கத்தட்டில், ரத்தினங்களை வைத்து, கொடுத்தார். கவுதமன் மனம் குதுாகலிக்க, ஆல மரத்தை அடைந்து, தன்னை அனுப்பிய ராஜதர்மன் எனும் கொக்கிடம், நடந்ததைச் சொன்னான். அவனை நன்றாக உபசரித்து, படுக்க வைத்து, தானும் துாங்கியது, கொக்கு.

கவுதமனோ, 'செல்வம் ஏராளமாகக் கிடைத்து விட்டது. ஊர் போய் சேர வேண்டும். வழியில் உணவுக்கு என்ன செய்வது... பேசாமல், இந்த கொக்கை கொன்று, இதன் மாமிசத்தை எடுத்துப் போய்விட வேண்டியது தான்...' என, எண்ணி, அப்படியே செய்தான்.

ஆம்... பெரும் உதவி செய்த கொக்கை கொன்று, அதன் மாமிசத்தை எடுத்தபடி, அந்த நன்றி கெட்டவன் புறப்பட்டான்.

வழக்கப்படி தினமும் சந்திக்க வரும் நண்பனான, கொக்கை காணோம் என்ற எண்ணத்தில் வருந்திய மன்னர் விரூபாட்சன், தகவல் அறிந்து, கொதித்தார்.

'மா பாவியான அந்த கவுதமனை, உடனே இழுத்து வா...' என, மகனை ஏவினார்.

பிறகென்ன, கவுதமன் இழுத்து வந்து, கொல்லப் பட்டான்.

நன்றி மறந்த அவன் உடலை, மிருகங்கள் கூட தின்ன மறுத்தன. அழுத கண்களுடன் விரூபாட்சன், தன் நண்பன் சடலத்தைச் சிதையில் வைத்து, இறுதி காரியங்களைச் செய்யத் துவங்கினார்.

அப்போது, அந்த பக்கமாக வந்த காமதேனுவின் வாயில் இருந்த நுரை, சிதையிலிருந்த ராஜதர்மன் உடல் மீது விழ, அது உயிருடன் எழுந்தது; நண்பன் உயிர் பெற்றதைக் கண்டு, மகிழ்ச்சியில் குதித்தார், விரூபாட்சன்.

அந்த அதிசயத்தைக் கண்ட தேவேந்திரன் இறங்கி வர, இந்திரன் கால்களில் விழுந்து, 'தவறு செய்திருந்தாலும், கவுதமன், என் நண்பன். அவனை உயிர்ப்பிக்க வேண்டும்...' என, வேண்டியது, ராஜதர்மன் கொக்கு.

அதன் வேண்டுகோளுக்காக, தேவேந்திரன் அருளால், கவுதமன் உயிர் பெற்றான். ஆனால், நன்றி கொன்ற அவனுடன் பேச, யாருமே தயாராக இல்லை.

நன்றி மறப்பதை விட, வேறு பாவம் எதுவும் இல்லை.

பெற்றவர்களிடமும், நலம் விரும்பிகளிடத்தும், வேலை பார்க்கும் இடத்திலும், அனைத்தையும் தந்து நம்மை வாழ வைக்கும் இந்த பூமியிடமும், சிறிதளவாவது நாம் நன்றி மறவாமல் இருந்தால், நலமாகவே இருப்போம்.

பி.என்.பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us