தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/கனவாகிப்போன கனவுகள்!

கனவாகிப்போன கனவுகள்!

கனவாகிப்போன கனவுகள்!


PUBLISHED ON : ஆக 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்த வெங்கடேசன், கால்களை தரையில் நன்றாக பதித்து, மெல்ல நடந்தார்.

'பார்வையும் குறைந்து விட்டது; கண்ணாடி போட்டால் கூட எல்லாம் மங்கலாக தெரிகிறது. 70 வயதுக்கு மேல் ஆகி விட்டது; இனிமேல் என்ன வைத்தியம் வேண்டிக் கிடக்கு...' என, விரக்தியுடன் நினைத்தார்.

ஒரு அறை மற்றும் அடுப்படி கொண்ட சிறிய வீடு அது. தனி மனிதனுக்கு போதுமானது.

பென்ஷன் பணத்தில் ஒரு பகுதியை ஆதரவற்றோர் இல்லத்திற்கும், மீதியை தன் செலவுக்கும் வைத்துக் கொள்வார்.

அவருக்கு இருக்கும் ஒரே துணை, பக்கத்து போர்ஷனில் குடியிருக்கும் சிவா.

வங்கியில் அட்டெண்டராக பணி புரியும் சிவா, வயதானவர் தனியாக இருக்கிறாரே என்று இரக்கப்பட்டு, முடிந்த உதவிகளை செய்வான்.

அருகில் உள்ள ஓட்டலிருந்து, காலையில் இரண்டு இட்லி, மதியம் அளவு சாப்பாடு, இரவு சப்பாத்தி என, மூன்று வேளையும் சாப்பாடு வந்து விடும். பால் மட்டும் வாங்கி, காபி போட்டு கொள்வார்.

''ஐயா... என்ன செய்றீங்க...'' என்று கேட்டவாறு வந்த சிவா, ''மீன் குழம்பு வச்சோம்; உங்களுக்கு கொஞ்சம் எடுத்து வந்தேன்,'' என்று கூறி, கையிலிருந்த பாத்திரத்தை அடுப்பு மேடையில் வைத்தான்.

''எதுக்குப்பா... இந்த கிழவனுக்கு இனிமேல் என்ன ருசி வேண்டிக் கிடக்கு... நானே போறதுக்கான நாளை எதிர்பாத்துட்டுருக்கேன்,'' என்றார் வெறுமையுடன்!

''ஏனுங்க ஐயா இப்படி பேசறீங்க... நீங்க இங்க வந்து, ஏழு வருஷமாச்சு. இதுவரை சொந்த பந்தம்ன்னு உங்கள யாரும் தேடி வரல; நானும் உங்ககிட்ட எத்தனையோ முறை கேட்டுப் பாத்துட்டேன்; உங்கள பத்தி எதுவுமே சொல்ல மாட்டேங்கிறீங்க. சரி விடுங்க... ஓட்டல்ல சாப்பாடு வந்ததும், மீன் குழம்பு போட்டு சாப்பிடுங்க, '' என்றான்.

''தம்பி... சாயந்திரம் பிள்ளையார் கோவில் வரைக்கும் வர முடியுமா...'' என்றார் வெங்கடேசன்.

''கட்டாயம் வர்றேன்.''

கையில் கவருடன், பிரகார மண்டபத்தில் உட்கார்ந்திருந்தவரை பார்த்து, ''இன்னைக்கு பிள்ளையாருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்; கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது...'' என்றவன், ''என்னங்கய்யா கையில கவர்...'' என்று கேட்டான், சிவா.

''சொல்றேன்பா... எல்லாத்தையும் சொல்லத்தானே உன்னை கோவிலுக்கு கூட்டிட்டு வந்தேன்,'' என்றவர், ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டு, ''வாழ்க்கையில நான் செல்வம்ன்னு நினைச்சது, கல்விய மட்டும் தான்; குடும்ப வறுமை காரணமா, நிறைய படிக்கணும்ன்னு ஆசை இருந்தும் முடியல. பத்தாம் வகுப்பு வரை படிச்சேன்; தெரிஞ்சவங்க சிபாரிசில பியூன் வேலை கிடைச்சது.

''என்னை கட்டிக்கிட்டவ ரொம்ப பொறுமைசாலி; என் வருமானத்துல சிக்கனமா குடும்பம் நடத்தினா. எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான்; அறிவழகன்னு பேரு வச்சோம். பெயருக்கு ஏத்த மாதிரி அறிவாளியா, பெரிய படிப்பாளியா வரணும்ன்னு கனவு கண்டேன்.

''எவ்வளவு கஷ்டம் வந்தாலும், என் மகன நல்லா படிக்க வைச்சு, டாக்டராகவோ, கலெக்டராகவோ ஆக்கணும்ன்னு நினைச்சேன். பெத்தவங்க கனவை பிள்ளைங்க மேலே திணிக்க கூடாதுன்னு சொல்வாங்க; ஆனா, என் நிறைவேறாத ஆசையை, என் மகன் மூலம் நிறைவேத்திக்கிறது தப்பில்லயே...

''என் மகன் வளர்ந்தான்; அவன் கேட்டதெல்லாம் கஷ்டப்பட்டாவது வாங்கி கொடுத்தேன். தம்பிங்கிற வார்த்தைக்கு அடுத்த வார்த்தை பேச மாட்டேன்; அவன் மேல் அவ்வளவு பிரியம். என் விரல் நுனி கூட அவன் மேல் பட்டதில்லை; அந்தளவு பாசம் காட்டி வளர்த்தேன்.

''என் ஒவ்வொரு நரம்பிலும், ஓடும் ரத்தத்திலும், கல்வி மட்டும் தான் நிறைஞ்சு இருந்துச்சு. ஆனா, என் கனவுகள் எதுவுமே நிறைவேறல. அவன் சரியா படிக்கல; படிக்கிறதில அவனுக்கு ஆர்வம் இல்ல. பிளஸ் 2வில், 'பார்டர்' மார்க் வாங்கினான். பெரிய மனுஷங்க கையைக் காலைப் புடிச்சு, காலேஜில சேர்த்தேன். ரெண்டு வருஷம் கூட ஒழுங்கா காலேஜ் போகாம, படிப்பை பாதியில் விட்டுட்டு வந்துட்டான்.

''கெஞ்சினேன்; புத்திமதி சொன்னேன்; எதையும் காதில வாங்கல. 'என்ன பெரிய படிப்பு... படி படின்னு தொந்தரவு செய்தீங்கன்னா, வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்'னு மிரட்ட ஆரம்பிச்சவன், ஒருநாள் சொன்னது மாதிரியே ஓடிப் போயிட்டான். புத்திரசோகம் தாங்க முடியாம, என் மனைவி போய் சேர்ந்தா. ஐஞ்சு வருஷம் கழிச்சு, பெரிய பணக்காரனா, பெரிய காரில் வந்து இறங்கினான், என் மகன்.

''அரசியல்ல பெரும் புள்ளி ஒருத்தருக்கு கைத்தடியா இருக்கானாம். இவனை பினாமியாக உபயோகப்படுத்தி, சொத்து, சுகம் சேர்க்க, இவனும் அதில் குளிர் காய்றான்னு தெரிஞ்சது. அம்மா இறந்ததையோ, இத்தனை வருஷமாக அவனை பிரிஞ்சு நாங்க எப்படி எல்லாம் கஷ்டப்பட்டோங்கிறதை பற்றியோ ஒரு வார்த்தை கூட கேட்காம, 'படிச்சு, நல்லா சம்பாதிச்சு, சொத்து சுகம் சேர்க்கணும்ன்னு தானே என்னை படி படின்னு உசிரை வாங்கினீங்க. இப்ப என்கிட்டே நீங்க எதிர்பாத்தபடி நிறைய பணம் இருக்கு; என்னோடு வாங்க. நீங்க விருப்பப்பட்டபடி, நல்லபடியா வச்சிக்கிறேன்'னு சொன்னான்.

''என் எண்ணத்தை புரிஞ்சுக்காத அவனை, புழுவை போல பார்த்து, 'பணம் யார் வேணும்ன்னாலும் சம்பாதிக்கலாம்; திருடன் கூட நிறைய பணம் வச்சிருக்கான். நான், உன்னை பணம் சம்பாதிக்க, படிக்க சொல்லல. அறிவழகன்ங்கிற பேருக்கு ஏத்தமாதிரி அறிவாளியா வரணும்; கல்வியில் உயரணும்ன்னு தான் நினைச்சேன். நீ என்ன தான் பண அந்தஸ்தில் உயர்ந்தவனாக இருந்தாலும், படிக்காத முட்டாளிடம் சோறு வாங்கிச் சாப்பிட எனக்கு இஷ்டமில்ல; நீ போகலாம்'ன்னு சொல்லிட்டேன்.

''என்னை அலட்சியமாக பார்த்து, கிளம்பி போயிட்டான். பணம் வந்ததும், என் உறவுகள் எல்லாம் அவனிடம் சொந்தம் கொண்டாடி, 'இந்த சின்ன வயசுலேயே பெரிய பணக்காரனா ஆகிட்டான்; இதைப் பாத்து, பெருமைப்படாம அவனை குறை சொல்றீங்களே... இருக்கிற கொஞ்ச காலத்தையாவது மகனோட இருந்து சந்தோஷமா அனுபவிங்க'ன்னு எனக்கு அறிவுரை சொன்னாங்க.

''ஏனோ எனக்கு அந்த ஊருல இருக்கப் பிடிக்கல. அதான், எனக்கு யாரும் வேணாம்ன்னு ஊரை விட்டு வந்துட்டேன்.

''ஏழு வருஷமாச்சு... யாருடனும் தொடர்பு இல்ல; இனி, இருக்கிற காலங்களை இப்படியே வாழ்ந்துட்டு போறதுன்னு முடிவு செய்துட்டேன்,'' என்றவர், ''சிவா... எனக்கு ஒரு உதவி செய்வியா?'' என்று கேட்டார்.

அவன், ''சொல்லுங்கய்யா...'' என்றவுடன், கையிலிருந்த கவரை அவனிடம் கொடுத்து, ''இது, அரசு மருத்துவமனையில், உடல் தானம் செய்ய, நான் எழுதி கொடுத்த கடிதத்தின் நகல். இதை நீ வச்சுக்க; என் உயிர் போனதும், இந்த எண்ணிற்கு போன் செய்து, என் உடம்பை எடுத்து போக ஏற்பாடு செய்துடறியா...'' என்றார்.

''ஐயா... உங்க மகன் இருக்கும் போது...''

''வேணாம்பா... என் மகன் கையால கொள்ளி வாங்கினா, இந்த உடம்பு வேகாது. என் உடம்பின் ஒவ்வொரு பாகமும், என் பிள்ளை படிக்கணும்; பெரிய படிப்பாளியா வரணுங்கிற எண்ணம் தான் ஊறிக் கிடந்தது.

''என் உடம்பை தானம் கொடுத்தா, அது படிக்கிற மாணவர்களுக்கு உபயோகப்படும். என் உடலை அறுத்து அவங்க படிப்புக்கு உபயோகப்படுத்திக்கட்டும். அப்படியாவது இந்த உடம்புக்கு ஆத்ம சாந்தி கிடைக்கட்டும்,'' என்று கூறி, மனம் வெதும்பி அழும் பெரியவரை, கண்ணீருடன் அணைத்து ஆறுதல்படுத்தினான், சிவா.

- பரிமளா ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us