
டிச., 23 - அனுமன் ஜெயந்தி
மனிதன், தன் நல்ல குணத்தால் தெய்வமாகலாம். அது போல் மிருகங்களும், தங்கள் சேவையால், தெய்வத்தன்மை பெற்று, மனிதனையே வணங்க வைக்கலாம்.
யானையின் வடிவத்தை விநாயகர் ஏற்றார். சிங்கத்தின் வடிவை திருமால் ஏற்று, நரசிம்மன் ஆனார். இதுபோல் குரங்கின் வடிவை ஏற்றார், ஆஞ்சநேயர்.
அனுமன் வசித்தது கிஷ்கிந்தை பகுதியில், தற்போதைய கர்நாடகா மாநிலம், ஹம்பியை ஒட்டிய அஞ்சனாத்ரி மலையில், அவர் பிறந்ததாக செவிவழி செய்திகள் கூறுகின்றன.
இதற்கு சான்றாக, அனுமனின் தாய் பெயர், அஞ்சனா என்றும், அவளது பெயரே அவள் வசித்த பகுதிக்கு சூட்டப்பட்டது என்றும் சொல்வர். இந்த அஞ்சனாத்ரி மலை, ராமாயண காலத்தில் கிஷ்கிந்தையாக இருந்ததாக கருதுகின்றனர்.
கிஷ்கிந்தை ஒரு புனிதமான மலை. இந்த மலை, முற்பிறப்பில் ஒரு கழுகாக இருந்தது. அதன் பெயர், சுதேவி. இந்தக் கழுகு, ஒருமுறை, காட்டிலிருந்த சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்தது. அந்த லிங்கம், காய்ந்த இலைகள் மூடி, துாசு படிந்து கிடந்தது.
கழுகு தற்செயலாக, தன் சிறகுகளை வேகமாக அசைத்தது. துாசு அகன்று லிங்கம் வெளிப்பட்டது. அறியாமலே நடந்த அந்த அரிய சேவைக்காக, மறுபிறப்பில் அது ஒரு மலையாக அமைந்தது. அந்த மலை அமைந்த பகுதியே, கிஷ்கிந்தை.
ராமன், அனுமன், அஞ்சனா, வாலி மற்றும் சுக்ரீவன் உள்ளிட்ட தெய்வப்பிறவிகள் எல்லாம் அங்கு கால் பதிக்கும் பாக்கியத்தைப் பெற்றது.
இந்த மலையில் தான், கேசரி என்ற வானர மன்னனும், அஞ்சனா என்ற வானர மங்கையும் வசித்தனர். அவர்கள் காதல் வசப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாயு பகவான் அருளால் பிறந்த மகனே, அனுமன்.
முற்பிறப்பில் அஞ்சனா ஒரு தேவ மங்கையாக இருந்தாள். அழகின் சின்னமான அவளது பெயர் புஞ்சிகஸ்தலை, தன் அழகின் காரணமாக இறுமாப்புடன் திகழ்ந்தாள்.
ஒருமுறை, தவ முனிவர் ஒருவரின் முகத்தைப் பார்த்து, 'நீர் குரங்கைப் போல இருக்கிறீர்...' என கேலி செய்தாள். முனிவர் அதைக் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து, அவரது தவத்தைக் குலைக்கும் வகையில், பழங்களை அவர் மீது வீசி, அட்டகாசம் செய்தாள்.
அந்த மகாமுனிவரின் தவம் குலைந்தது. கோபத்துடன் எழுந்தவர், 'என்னைக் குரங்கென்று வர்ணித்த நீ, அடுத்த பிறப்பில் குரங்காகப் பிறப்பாய்...' என்று சாபமிட்டார்.
அவளும் குரங்காகப் பிறந்து, குரங்கு மன்னனான கேசரியைத் திருமணம் செய்தாள். அவர்கள் வசித்த கழுகு மலைக்கு, அஞ்சனாவின் பெயர் சூட்டப்பட்டு, அஞ்சனாத்ரி மலை என, அழைக்கப்பட்டது.
இந்த மலை, ஹம்பியிலிருந்து, 22 கி.மீ., துாரத்தில் உள்ளது. அஞ்சனாத்ரி பெட்டா என, இதை அழைப்பர். இங்குள்ள அனுமன், அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். இவரை, பிராண தேவர் என்றும், யந்த்ரோ தாரக அனுமன் என்றும் அழைக்கின்றனர்.
உயிர் போகும் நிலை இருந்தாலும் கூட, இந்த பிராணதேவரை மனதில் நினைத்தால், பிராணன் (உயிர்) நிலைக்கும் என்பர்.
அனுமன் ஜெயந்தியன்று, இவரை வணங்கி வரலாம். சென்னையில் இருந்து ஹம்பி, 700 கி.மீ., தொலைவில் உள்ளது.
தி. செல்லப்பா