/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
தேர்தல் திருவிழா அந்துமணி பதில்கள்!
/
தேர்தல் திருவிழா அந்துமணி பதில்கள்!
PUBLISHED ON : ஏப் 14, 2019

க.நுாருல்லா, தஞ்சாவூர்: தமிழகத்தில், அரசியல் என்று உருப்படும்... இங்கு, கட்சிகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றனவே...
தங்கள் தொகுதியில் உள்ள, அதே இனத்தவரைக் காட்டி, அங்குள்ள தொழில் அதிபர்களிடம், அவர்களது தொழில் பாதிக்காமல் இருக்க, பணம் பிடுங்கவே, கட்சிகள் ஆரம்பித்துக் கொண்டே இருக்கின்றனர்.
இவர்கள் தனித்து நின்றால், 10 ஓட்டுகள் கூட வாங்க முடியாது!
ஓட்டு போடும் மக்கள் திருந்தினால் தான், தமிழக அரசியல் உருப்படும்; அதன் பின், 'டுபாக்கூர்' கட்சிகள் ஒழிந்து போகும்... அதே போன்றவை பின் நாட்களில் தோன்றாது!
அ.ரவீந்திரன், மணிக்கொட்டி, கன்னியாகுமரி: உமக்கும், அரசியலுக்கும் எவ்வளவு துாரம்?
ரொம்ப ரொம்ப... ஏற்கனவே, ஆண்டு கொண்டிருந்தவர்கள், மக்களால், பதவியை விட்டு நீக்கப்பட்டவர்கள், இப்போது, அதையே எதிர்பார்த்து இருக்கும் கட்சியினர், மிக மிக நட்பாக இருப்பர்!
ஆனால், ஆளும் கட்சியினருக்கோ, இப்போது தான் என் நினைப்பே வருகிறது; பேச வேண்டும் என, துடிக்கின்றனர்.
தேர்தல் முடிவுகள் வரும் வரை, கைபேசி இருக்காதே அந்துமணியிடம்!
ச.கல்பனா, விழுப்புரம்: 'நான் ஒருத்தி ஓட்டுப் போடாமல் இருந்தால் என்ன நடந்து விடப் போகிறது...' என, நினைக்கும் என் போன்றோருக்கு, அறிவுரை சொல்லுங்களேன்...
'நான் பதவிக்கு வந்தால், தொகுதிக்கு, அதை, இதை செய்வேன்...' எனக் கூறி, கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று, மேற்கூறியவற்றை, தம் குடும்பத்தினருக்கு மட்டும் செய்து கொடுத்து வருகின்றனர். அவர்களை வீட்டுக்கு அனுப்ப, அவர்களுக்கு எதிரானவர்களுக்கு, ஓட்டளிக்க தவறாதீர்கள்!
* அ.வேளாங்கண்ணி, வேலுார்: சின்னத்தை வைத்தே, ஒரு கட்சி ஜெயித்து விட முடியுமா?
முடியாது! காமராஜர், இந்திரா, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., என்று, ஆண்டோர் பலரும், நம் நாட்டில் பல நேரங்களில் வெற்றி பெறவில்லை!
'குக்கர்' அல்லது பரிசு பெட்டி கிடைத்ததாலேயே, பிரதமரை உருவாக்கி விட முடியுமா?
வாக்காளர்கள் தெளிவாகி விட்டனர்!
அஜித், சென்னை: ஊழல் அரசியல்வாதிகளும், ஊழலில் ஈடுபட்ட அவர்களது வாரிசுகளும், தைரியமாக உலா வருகின்றனரே...
அதை, 'தைரியம்' என்று சொல்ல முடியாது! 'கவனிக்க' வேண்டியவர்களை, திருப்தி செய்து கொண்டிருக்கின்றனர்; ஆனால், அவர்கள் மனதிலும் பயம் இருக்கத்தான் செய்யும்!
சரியான நேரம் வந்தால், 'கம்பி' எண்ணத்தான் வேண்டி இருக்கும்!
தா.ஆரோக்கியதாஸ், சென்னை: கடந்த, 1972 முதல், இன்று வரை, 'தினமலர்' இதழில், முதல் பக்கம் முதல், கடைசி பக்கம் வரை படிப்பவன் நான். ஆனால், வரப்போகும் தேர்தலுக்கு, நமது இதழை, நுனிப்புல் மட்டுமே, மேய விட்டவன், நீ தானே?
நமது நாளிதழ் ஆசிரியரிடம், உங்கள் கேள்வியைக் காட்டினேன்! சிரித்தவர், 'உனக்கும், 'தேர்தல் திருவிழா' பக்கங்களுக்கும் என்ன தொடர்பு...
'மற்ற நாளிதழ்களை பார்க்கச் சொல்... அவர்கள், 'தேர்தல் களம்' என்ற தலைப்பில், இரண்டு பக்கங்கள் தான் வெளியிடுகின்றனர்; ஆனால், நாமோ, ஆறு பக்கங்கள் ஒதுக்குகிறோம். மாதம், 180 ரூபாய் கொடுத்து வாங்கும், நம் முதலாளியான, ஆரோக்கியதாசை அப்பங்கங்களை பார்க்கச் சொல்...' எனக் கூறி விட்டார்.
* வி.ஜெய்சங்கர், சங்கரன்கோவில்:அரசியல்வாதிகளின் இன்றைய நோக்கம் என்னவாக இருக்கிறது?
பொங்கலுக்கு, 'போனஸ்' கொடுத்து, அனைத்து இலவசங்கள் மூலம் ஓட்டு வாங்குவது தான்! ஆனால், முதலாவது, தம் குடும்பத்துக்கு, பல தலை முறைகளுக்கு சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்பது தான்!
ச.கண்ணன், வத்தலக்குண்டு, திண்டுக்கல்: கைது செய்யப்படும், லஞ்ச அரசியல்வாதிகள், நெஞ்சுவலி என்று மருத்துவமனைகளில் சேர்ந்து விடுகின்றனரே... இது எப்படி?
அவர்கள் பையில் இருக்கும், தேசப்பிதா காந்தியின் படம் அச்சிடப்பட்ட, நோட்டுகளே! கீழ் மட்டம் முதல், மேல் மட்டம் வரை, கட்டுக் கட்டாக, காந்தியை காட்டி விடுகின்றனரே...
சோலை ராகவன், அவனியாபுரம், மதுரை: கருப்புக் கொடி, பலுான், செருப்படிகளைச் செய்தவருக்கு, என்ன, 'மாதிரியான' பாடம் புகட்டலாம்?
தேர்தல் ஓட்டுப் பொத்தான், உங்கள் ஆள் காட்டி விரலில் தானே உள்ளது!
* ச.பிரேமா, சென்னை: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள், எந்த துணிச்சலில், மீண்டும் ஓட்டு கேட்டு வருகின்றனர்...
பணத்தை நம்பித்தான்! 'ஜெயித்தால், 20 ஆயிரம் ரூபாய் தருகிறேன்...' என்பதை ஏற்று, 20 ரூபாய் மட்டுமே பெற்று, ஏமாந்த வாக்காளர்களை நம்பித்தான்!
கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு:விஜயகாந்த் கட்சியின் கூட்டணியை, பல பெரிய கட்சிகளும் விரும்பியது ஏன்?
எதையாவது செய்து, பதவிக்கு வரணும்ங்கிற நோக்கம் தான். மேலும், கூட்டணி பேச வருபவர்களிடம், காந்திஜி படம் போட்ட தாளை, எவ்வளவு கறக்கலாம் என்று கணக்கு போட்டும், நாட்கணக்கில் இழுத்தடித்ததும் தான் நமக்கு தெரியுமே!
ஆனால், தேச தந்தை, நாடு சுதந்திரம் அடைந்தபின், 167 நாட்கள் வரை, நாட்டின் நன்மைக்காக மட்டுமே பேசி வந்தார். ஆனால், இவர்களோ...
கே.கணேசன், சென்னை: புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க விரும்புகிறேன்... அதற்கு என்னென்ன தகுதி இருக்க வேண்டும்?
மன்னித்துக் கொள்ளுங்கள் கணேசன்... எனக்கு தெரியவில்லை. லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், 40 - 40 வெல்லப் போவதாகச் சொல்லும், 'மையம்' தலைவர், நடிகர், கமலிடம் ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்களேன்!
த.பாரதி தமிழ்செல்வம், சூரங்குடி, துாத்துக்குடி மாவட்டம்: பா.ஜ.,வின் சுப்பிரமணிய சாமி மட்டும், தனித் தன்மையுடன் உள்ளாரே... எப்படி?
எல்லாம், எடக்கு, முடக்கான அறிக்கைகளால் தான்! அவர், இங்கே நின்று இருந்தால், 'தாமரை' மலர்ந்து இருக்காது; அந்த தொகுதியில் உள்ள குளங்களில் மட்டுமே அது நடந்திருக்கும்!
எல்.மகாதேவன், காளாம்பாளையம், கோவை: வவ்வால் குணம் உடைய சிலர், அரசியல் கட்சி அமைத்து, தங்களை, தாங்களே தலைவர் என்று அழைத்துக் கொள்கின்றனர். இவர்களில் ஒருவர், இந்த தேர்தலில் என்ன சாதித்து விடுவார்?
அந்த ஒருவரது, தேர்தல் பொதுக் கூட்டத்தை பார்த்தேன்! அவரது பேச்சு, நான், மதியம் சாப்பிட்டிருந்த, உருளைக் கிழங்கின், 'படுத்தலை' அங்கேயே தீர்த்து விட்டது!
'இவர், சினிமாவிலேயே இருந்திருக்கலாமே... எத்தனையோ படத்தை இயக்கி தோல்வி அடைந்தவர்கள், இன்று, நடிகர்களாகி, நல்லா சம்பாதிக்கின்றனரே...' என, நினைத்தபடி, அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றேன்!
ஆர்.கார்த்தியாயினி, பெங்களூரு: 'தென் சென்னை, லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளரான, தமிழச்சி தங்க பாண்டியன், அழகானவர். இவ்வளவு அழகான வேட்பாளரை, உங்கள் பிரதிநிதியாக அனுப்பத் தவறாதீர்கள்...' என்று, பொது மேடையில் கூறியிருக்கிறாரே, உதயநிதி ஸ்டாலின்...
அவர், சினிமாக்காரர் தானே... அதனால் தான்!
வ.மீனாட்சிசுந்தரம், உலகம்பட்டி, சிவகங்கை: தனக்கு பிடித்த நிறம், 'கருப்பு' என்பது போல், ம.தி.மு.க., கட்சியின் தலைவர், வைகோ நடந்து கொள்கிறாரே... இது ஏன்?
வெற்றி கொடி கட்டு என்ற படத்தில், பா.விஜய் எழுதிய, 'கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு...' என்ற இப்பாடல், வைகோவுக்கு பிடித்து போய் விட்டதோ என்னவோ... பாடலை பாடியவர், அனுராதா ஸ்ரீராம்!
எனக்கும் அந்த நிறம் தான் மிகவும் பிடிக்கும்... உங்களுக்கு?
வ.மீனாட்சிசுந்தரம், உலகம்பட்டி, சிவகங்கை: தனக்கு பிடித்த நிறம், 'கருப்பு' என்பது போல், ம.தி.மு.க., கட்சியின் தலைவர், வைகோ நடந்து கொள்கிறாரே... இது ஏன்?
வெற்றி கொடி கட்டு என்ற படத்தில், பா.விஜய் எழுதிய, 'கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு...' என்ற இப்பாடல், வைகோவுக்கு பிடித்து போய் விட்டதோ என்னவோ... பாடலை பாடியவர், அனுராதா ஸ்ரீராம்!
எனக்கும் அந்த நிறம் தான் மிகவும் பிடிக்கும்... உங்களுக்கு?
எ.டபிள்யூ.ரபீக் அகமத், சிதம்பரம்: வேட்பாளர்கள் சொத்து கணக்கை பார்த்தால், பிரமிக்க வைக்கிறதே!
உண்மை தான்! அவர்கள் கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு குறித்து, தாளில் எத்தனையோ, பூஜ்ஜியம் - 'சைபர்' போட்டு எழுதிப் பார்த்தேன்... விடையே கிடைக்கவில்லை!
கோடி கோடியாக, கட்டுக் கட்டாக இப்போது சிக்கும் பணத்திற்கு, 'சைபர்' போட்டு பார்க்கக் கூட நினைக்க மாட்டேன் - மயக்கம் வந்து விடும்!
எம்.சிவா, சென்னை: சுயநலத்திற்காக, அரசியலில் கூட்டணி வைக்கின்றனரே... இவர்களுக்கு எப்படி பாடம் புகட்டலாம்?
உங்கள் தொகுதியில் அவர்கள் நின்றால், 'கவனித்து'க் கொள்ளுங்கள்!