
'பாப்பா மூச்சா போயிருச்சி பாருக்கா... இதைக் கிளீன் பண்ணு,'' தாழ்வாரத்தில் ஒட்டடை அடித்துக் கொண்டிருந்த, சாந்தியிடம், கிட்டத்தட்ட கட்டளைத் தொனியில் உரக்கக் கூறினான், அவளது தம்பி, யாதவ்.
''இதோ வர்றேன்,'' என்று, கையில் பழைய துணியோடு வந்தவள், கட்டிலுக்குப் பக்கத்தில் குனியும்போது, தரையில் தொங்க விடப்பட்டிருந்த கால்களை மெத்தைக்கு ஏற்றி, சப்பணங்கால் போட்டு அமர்ந்து கொண்டாள், யாதவ் மனைவி காவ்யா.
அவர்களின் ஒன்றரை வயதுப் பெண் குழந்தை அழுதால் கூட, அத்தை சாந்தி தான் சமாதானப்படுத்த வேண்டும் என்று, பொறுப்பு துறந்து, நிம்மதியாக வாழ்பவர்கள்.
அழகுக்காகவோ, இல்லை பால் ஊறவில்லையோ தெரியாது. பிறந்த, 10 நாள் வரை தாய்ப்பால் கொடுத்துவிட்டு அதற்கடுத்துப் புட்டிப்பாலுக்குப் பழக்கிவிட்டதில் தனக்கு சம்மந்தமில்லாதது போலத்தான், அந்தக் குழந்தையிடம் அணுகுவாள், காவ்யா.
பகலில் ஊரார் வீட்டுக் குழந்தையைப் போல் எட்ட நின்று கொஞ்சுவதோடு சரி. முக்கால்வாசி நேரம் அத்தையிடம் தான், தத்து பித்தென்று கொஞ்சி கொண்டிருக்கும் அந்த ஒன்றரை வயது பாப்பா.
பணம் மட்டுமே குறிக்கோளாகி, பாசத்தை துறந்து விட்டவர்களுக்கு பலிகடாவாகி, தன்னை ஒப்படைத்துக் கொண்ட சாந்தி, மற்றவர்களின் பார்வைக்கு, முதிர்கன்னி. அவளைப் பொறுத்தவரை, தன் திருமணம் விரைவில் கைகூடும் என்று கருதியே, காலத்தின் மீது கோபப்படாமல் சலிப்பின்றி காத்துக் கொண்டிருப்பவள்.
தனக்கு காயமென்றால் தானே தாங்கிக் கொள்ள வேண்டுமே தவிர, பக்கத்தில் இருப்பவரை மருந்து உண்ணச் சொல்வது எவ்வளவு அபத்தம். இதை புரிந்தவளாய், தம்பியின் திருமணத்திற்கு தடையாக இல்லாமல் ஒதுங்கி வழி விட்டாள், சாந்தி.
பிறந்த வீடு வசதி என்பதாலும், ஆட்களை ஏவல் செய்து பழகியதாலும், துளியளவும், சாந்தியை மதிக்காத, காவ்யாவுக்கு, அவள் ஒரு வேலைக்காரி. அவ்வளவு தான்.
திருமணமான புதிதில் இதைச் சங்கடமாக உணர்ந்த, சாந்தி, தன் தம்பியிடம் குற்றஞ்சாட்ட, அவன் காவ்யாவுக்கு அறிவுரை சொல்லப் போக, காச் மூச்சென்று கத்தி, பெரும் ரகளையே ஏற்படுத்தி விட்டாள். அத்தோடு, சாந்தியிடம் முகம் கொடுத்துப் பேசுவதையும் நிறுத்திக் கொண்டாள், காவ்யா.
கணவனைப் பாலமாக வைத்து, நன்றாக வேலை வாங்கிக் கொள்வாள். காவ்யாவை சட்டை செய்யாமல் சமாளிக்கக் கற்றிருந்தாள், சாந்தி. ஆறுதலுக்கு அம்மா, அப்பா இல்லாமல், தம்பி தான் சகல துணையாக இருப்பான் என்று நம்பி அனுசரித்துப் போகும், சாந்தி, மிகவும் பொறுமைசாலி.
அன்று காலை வாசலில் கீரைக் கூடையோடு நின்றிருந்த சரசம்மா, ''நீ பாவாடை சட்டை போட்ட நாள்லயிருந்து தினம் உன்னைப் பார்க்கிறேன். நான் கீரைக்காரி தான். ஆனால், மனசு கேட்கலை. ஒண்ணு சொல்லுவேன் தப்பா நினைச்சிக்கக் கூடாது சரியா?'' என்று சொல்லும்போதே, அக்கம் பக்கத்தில் யாரும் இருக்கின்றனரா என, ஒரு பார்வை பார்த்துக் கொண்டாள்.
''என்னம்மா இப்படிக் கேட்டுட்டீங்க, என் அம்மா மாதிரி நீங்க,'' என, அனுமதி வழங்கினாள், சாந்தி.
''என் கண்ணு, சரியா சொல்லிட்ட. உனக்குன்னு ஒரு வாழ்க்கைத் துணை வேணும். ரெண்டாந்தாரமா இருந்தாலும் சரின்னு, ஒரு ஆம்பளைத் துணை தேடிக்கோயேன்ம்மா. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் கூட, உன்னை மாதிரி ஒரு பொண்ணு தேடிட்டு இருக்காரு.''
''கீரைக்கட்டுக்கு காசு எவ்வளவும்மா,'' கொஞ்சம் விரைப்பாக சாந்தி கேட்டபோது, அவளது முகத்தில் எப்போதும் இருக்கும் அமைதிக் கலை தொலைந்து போயிருந்தது.
''இந்தா பார்த்தியா, அம்மா மாதிரின்னு சொல்லிட்டு, இப்பக் கோபப்படுற பார்த்தியா...'' கீரைக்காரம்மாவுக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது.
''கோபமெல்லாம் இல்லை. இந்தாங்க பிடிங்க,'' என, 20 ரூபாயை கொடுத்தாள்.
சாந்தியின் எதிர்ப்பு புரிந்தமையால், பதில் பேசாமல், இடுப்புச் சுருக்குப்பையில் பணத்தைத் திணித்து, அங்கிருந்து நகர்ந்தாள், கீரைக்காரம்மா.
'நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதோ...' என்ற உறுத்தல், தலைச்சுமையை விட அதிகமாகி, கீரைக்காரம்மாவின் மனதைக் கனக்க வைத்தது.
தொடர் வேலைகளால் கவலைப்படக் கூட நேரமில்லாமல், பகல் கழிந்தது, சாந்திக்கு.
அன்றிரவு படுக்கைக்குச் சென்றதும், அன்றைய நாள் கடந்த விதத்தை வரிசையாக ஓட விட்டாள். கீரைக்காரம்மாவின் உரையாடல் வரும்போது, நினைவை முந்திக் கொண்டது, அவளது கண்ணீர்.
இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின்பும், தனக்கு விருப்பமாக வேறொருவரைத் தேடிக் கொண்ட அம்மாவை நினைத்து, கோபம் வந்தது.
தாலி கட்டியவள் ஏமாற்றிச் சென்றுவிட, தகப்பனுக்கு மட்டும் பொறுப்பு வருமா என்ன? அன்றே காணாமல் போனார். ஐந்து வயதும், மூன்று வயதுமான, சாந்தி, யாதவை வளர்க்கும் பொறுப்பு, பாட்டி தலை மேல் விடிந்தது.
சத்துணவுக்காக, உள்ளூர் பள்ளியில், 8ம் வகுப்பு வரை படித்து, அதன்பின், தான் வேலைக்குச் சென்று, யாதவை படிக்க வைப்பதற்காக, பெரிய மனுஷி போல் முடிவெடுத்தாள். சித்தாளாக, களையெடுப்பவளாக, கிடைத்த வேலைக்கு போய், சம்பாதிக்கத் துவங்கினாள், சாந்தி.
அம்மா வழிச் சொந்தங்களில் ஒரு சிலர் பரிதாபப்பட்டு, துார இருந்து உதவுவர். இவளாகப் போய் அவர்களிடம் எதற்காகவும் நின்றதில்லை.
மூன்றாம் ஆண்டு கல்லுாரிப் படிப்பில் யாதவ் இருந்தபோது, சாந்தியின் பொறுமையான குணத்திற்கு விருப்பப்பட்டு வரன் ஒன்று வந்தது. ஆனால், சிறுபிள்ளையாக குலுங்கிக் குலுங்கி, அழுதபடி, 'அக்கா... நீ கல்யாணமாகிப் போயிட்டா எனக்கு யாரு இருக்கா. ப்ளீஸ் அக்கா, என் கூடவே இரு...' என, அன்று அடம்பிடித்தவனை நம்பி, வாய்ப்பைத் தவற விட்டாள்.
இப்படியாக அவளைத் தேடி வந்த நான்கைந்து வரன்களும் விலகிச் சென்றன. தட்டிக் கழிக்கும் இடத்தில் தொடர்ந்து கதவைத் தட்டினால், பிரயோசனம் இல்லையென்று, வரன்கள் வரத்தும் குறைந்து போனது.
வேலைக்கு சென்ற கொஞ்ச நாளில், காவ்யாவின் மீதான காதலையும், அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சேதியாகச் சொன்னானே தவிர, அனுமதியெல்லாம் கேட்கவில்லை, யாதவ்.
நல்ல வசதியான இடம். அவர்கள் செலவிலே திருமணம் செய்து வைத்து, காவ்யாவின் பெயருக்கு ஒரு வீட்டையும் எழுதிக் கொடுத்தனர்.
நல்லவேளை, வீட்டை விட்டு விரட்டாமல் இருக்கின்றனரே... அதுவே பெரிதென்று அவர்களோடு ஒண்டி வாழ்தலைத் தவிர, வழியில்லையென்று புரிந்ததால், எதிர்த்துப் பேச முடியாமல் மவுனமாக இருக்கிறாள், சாந்தி.
'வாழ் நாள் முழுமைக்கும் இப்படியேவா இருக்கணும்...' என்று மலைத்து, விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் காதுகளில், 'உனக்குன்னு ஒரு வாழ்க்கைத் துணை வேணும். ரெண்டாந்தாரமா இருந்தாலும், சரின்னு ஒரு ஆம்பளைத் துணை தேடிக்கோயேன்ம்மா...' மாறி மாறி ஒலித்ததில், துாங்கவேயில்லை, சாந்தி.
மறுநாள்-
வழக்கம் போல் வரும் கீரைக்காரம்மா, சாந்தி இருக்கும் வீட்டின் பக்கம் வரவில்லை. ஆனால், அடுத்த தெருவில் அவள் குரல் மெலிதாகக் கேட்டது.
அன்று, சாந்திக்கு யாரிடமாவது மனம் விட்டுப் பேச வேண்டும் போல் இருந்தது. கூடிச் சிரித்து விளையாடத் தோட்டம் தானே தோதாக இருக்கும். எத்தனை நேரம் தான் தனி மரம் தன் நிழலோடு மட்டுமே காலத்தைக் கடத்தும்.
''அக்கா... பாப்பாவுக்கு பால் ஆத்திட்டு வா,'' உள்ளிருந்து கேட்ட யாதவின் குரலுக்கு, இப்போது அவசரமாக இயங்கத் தோணவில்லை, சாந்திக்கு.
கீரைக்காரம்மா எப்படியும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும் என்ற யோசனையுடன் கையில் துணிப்பையோடு தெரு முனைக்குச் சென்றாள்.
திடீரென்று ஒட்டிக் கொண்ட கல்யாணக்களையில் மளமளவென்று சாந்திக்கு வயது குறைந்திருந்தது
.
கனகா பாலன்