PUBLISHED ON : மே 19, 2019

நம் நாட்டில், யானைகள், மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அடிக்கடி வந்து விடுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்; 'டிவி'யிலும் பார்க்கிறோம்.
காட்டில் தீனியும், குடிக்க நீரும் கிடைக்காத சூழலில், மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருகின்றன, யானைகள்; ஆக்கிரமிப்புகளும் இன்னொரு காரணம்...
இது, நம் நாட்டு கதை. ரஷ்யாவின் நிலை வேறு.
ஆர்டிக் கடலை ஒட்டிய ரஷ்ய பகுதியில், மூன்று பக்கமும் கடலால் சூழ்ந்த, நோவாயா ஷெம்லியா என்ற பகுதி உள்ளது. ஒரு காலத்தில், இது, துருவ கரடிகள் நடமாடிய பகுதி.
தற்போது, இங்கு, தன் ராணுவ முகாம்களை அமைத்துள்ளது, ரஷ்யா. அணு ஆயுத சோதனை நடத்தும் இடமாகவும் இருக்கிறது. இதனால், ஏராளமான கட்டடங்கள் வந்து விட்டன; மக்களும் குடியேறி விட்டனர்.
பனி காலத்தில், ஆர்டிக் கடல் பகுதி உறைந்து போகும். இவை உறைந்தால், துருவ கரடிகள், அதன் மீது நடந்து, கடல் நாய்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று, அவற்றை சாப்பிடும். ஆக்கிரமிப்புகளால், ஆர்டிக் கடல் பகுதி, இம்முறை சரியாக உறையாததால், நோவாயா ஷெம்லியாவில் நுழைந்து விட்டன.
கட்டடங்கள், அலுவலகங்கள், சோதனை சாலை என, எதையும் விட்டு வைக்கவில்லை, கரடிகள். மக்கள் போடும் உணவு கழிவுகளையும் போட்டி போட்டு தின்கின்றன. இவற்றை எப்படி விரட்டுவது என தெரியாமல், அரசின் உதவியை நாடியுள்ளனர், அதிகாரிகள்.
- ஜோல்னாபையன்.