தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/எமனுக்கு எமன்!

எமனுக்கு எமன்!

எமனுக்கு எமன்!


PUBLISHED ON : ஜூன் 19, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 19, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இள வயதில் மரணம் என்பது கொடிய துன்பம். இதை எத்தனையோ பேர் அனுபவித்துக் கொண்டிருப்பர். தாங்கள் ஆசையாய் வளர்த்து, 20, 25 வயதுக்குள் அவர்களைப் பறிகொடுத்து விட்டால், பெற்றவர்களின் வயிறு எப்படி துடிக்கும்?

இந்த சோகத்துக்கு காரணமாக இருப்பவர், எமன். விதி முடிந்ததும், அவர், எருமை மீதேறி வந்து விடுவார். அவரை அடக்கி வைக்க வேண்டுமானால், எமனுக்கு எமன் ஒருவர் வேண்டுமே... அவர் தான், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் உள்ள, ஆட்கொண்டேஸ்வரர். இவருக்கு ஒரு சிறப்பு உண்டு.

பைரவர், ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்களுக்கு வடைமாலை சாத்துவோம். இங்கே, ஆட்கொண்டேஸ்வரருக்கும் வடை மாலை. அதிலும் நுாறல்ல, ஆயிரம் அல்ல; லட்சம் வடைகளைக் கோர்த்து, மாலையாக அணிவிப்பர். இதற்கும் ஒரு விசேஷ காரணம் உண்டு.

தெலுங்கு நாட்டில், சுசரிதன் என்ற சிறுவன் வசித்தான். இவனது பெற்றோர் எதிர்பாராமல் காலமாகி விட்டனர். அனாதையானவன் தெற்கு நோக்கி நடந்தான். தஞ்சாவூர் அருகிலுள்ள

பழனம் என்ற கிராமத்தில் இருந்த சத்திரத்தில் தங்கினான். அசதியில் துாங்கியவனின் கனவில், எமதர்மராஜா தோன்றினார்.

'தம்பி... உன் ஆயுள், இன்னும் ஐந்தே நாட்கள் தான். என்னுடன் புறப்பட தயாராக இரு...' என்று சொல்லி விட்டு மறைந்தார்.

பயந்து போனான், சிறுவன். காலையில் எழுந்ததும், அவ்வழியே வந்த வசிஷ்ட முனிவரை சந்தித்தான். அவரிடம், தான் கண்ட கனவு பற்றி சொன்னான்.

'கவலைப்படாதே. அந்த எமனுக்கு எமன், திருவையாறில் இருக்கிறார். அங்குள்ள ஐயாறப்பர் கோவிலின்

தெற்கு வாசல் வழியே நுழைந்தால், மேல்புறத்தில் ஆட்கொண்டேஸ்வரர் சன்னிதி இருக்கும். அவர், சிவனின் ஒரு வடிவம். அவரைச் சரணடைந்தவர்களை கை

விட்டதே இல்லை. அவரை வணங்கினால், நீ தீர்க்காயுள் பெறுவாய்...' என்றார்.

சிறுவனும் ஆட்கொண்டேஸ்வரரை சரண் அடைந்தான். ஐந்தாம் நாள் எமன் வந்தான். அவனைப் பிடித்து, தன் திருவடிகளின் கீழே இட்டு மிதித்த ஆட்கொண்டேஸ்வரர், சிறுவனுக்கு தீர்க்காயுள் அளித்தார். பசியோடு இருந்த அந்த சிறுவனுக்கு, அன்று தனக்கு பக்தர்கள் அளித்த நைவேத்யத்தில், வடைகளை எடுத்து வழங்கினார். குழந்தைகளுக்கு வடை என்றால் இஷ்டமில்லையா?

இந்த நிகழ்வின் அடிப்படையில், பைரவரைப் போல இவருக்கும், தேய்பிறை அஷ்டமி நாட்களில் வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர், பக்தர்கள். நோயால் பாதிக்கப்பட்டும், போதை பழக்கத்திற்கு ஆட்பட்டும் உள்ள கணவர்களை காப்பாற்ற, இங்கு வழிபடுகின்றனர், பெண்கள்.

குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆட்கொண்டேஸ்வரரை மனதில் நினைத்து வழிபட்டாலே போதும். அவர்களை காப்பாற்றி அருளுவார். கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷம்.

தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, 12 கி.மீ., துாரத்தில் உள்ளது.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us