
ஒரு கோவிலில் சுவாமிக்கு ஒன்று, அம்மனுக்கு ஒன்று என, இரண்டு கொடி மரங்கள் இருப்பது வழக்கம். ஆனால், கொடி மரம் மட்டுமின்றி, கோபுரம், பிரகாரம், விநாயகர், நந்தி என எல்லாமே, ஐந்து ஐந்தாக உள்ள கோவில் தான், கடலுார் மாவட்டம், விருத்தாச்சலம் பழமலை நாதர் கோவில்.
'விருத்தம்' என்றால் பழமை; 'அசலம்' என்றால், மலை என்று பொருள். பல காலத்துக்கு முந்திய மலை என்பது, இதன் பொருள். இவ்வூரில் மலை தோன்றிய பின் தான், உலகிலுள்ள அனைத்து மலைகளும் தோன்றின என்று கூறுவர்.
பழமலை நாதர் என்ற பெயரில், சிவன் இங்கு, மலை வடிவில் முதலில் தோன்றினார். சுந்தரரை, ஆட்கொண்டு தேவாரம் பாட வைத்து, 12 ஆயிரம் பொற்காசு வழங்கினார். காசி போல, விருத்தாச்சலம் முக்தி தலமாக விளங்குகிறது.
இங்கு, விருத்தாம்பிகை என்னும் அம்பாள் அருள்பாலிக்கிறாள். திருவண்ணாமலையிலிருந்து வந்த குரு நமச்சிவாயர் என்ற மகான், அம்பாளிடம் உணவு கேட்டு, 'கிழத்தி' அதாவது, மூதாட்டி என்ற சொல் வரும்படி பாடல் ஒன்றை பாடினார்.
அம்பிகையும், மூதாட்டி வடிவில் தோன்றி, 'ஒரு கிழவியால் எப்படி சோறு சுமந்து வர முடியும்?' என, கேட்டு மறைந்தாள். பின், குரு நமச்சிவாயர், அம்பிகையின் இளமையை பாடினார். அது கேட்டு மகிழ்ந்த அம்பிகை, இளையவளாக காட்சியளித்து, அன்னமிட்டாள். அவளுக்கு, 'பாலாம்பிகா' என்ற பெயர் ஏற்பட்டது. விருந்தாம்பிகை மற்றும் பாலாம்பிகா என்ற இந்த இருவர் பெயரிலும் சன்னிதிகள் உள்ளன.
இக்கோவிலில் எல்லாமே ஐந்து தான். விருத்தகிரீஸ்வரர், பழமலை நாதர், விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர் மற்றும் விருத்தகிரி என, சுவாமிக்கு ஐந்து பெயர். திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாச்சலம், நெற்குப்பை மற்றும் முதுகிரி என ஊருக்கு ஐந்து பெயர்.
ஆழத்து பிள்ளையார், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், தசபுஜ கணபதி மற்றும் வல்லப கணபதி என, ஐந்து விநாயகர் சன்னிதிகள் உள்ளன.
கோபுரம், கொடி மரம், பிரகாரங்களும் ஐந்தாக உள்ளன.
இந்திர நந்தி, வேத நந்தி, ஆத்ம நந்தி, மால்விடை நந்தி மற்றும் தர்ம நந்தி என, ஐந்து நந்திகள் இருக்கின்றன. இங்குள்ள ஆழத்துப் பிள்ளையாரை, 18 படிகள் இறங்கி தரிசிக்க வேண்டும்.
தல விருட்சம் வன்னி மரம், 3,000 ஆண்டு பழமையானது. விபசித்து முனிவர் என்பவர், இக்கோவிலில் திருப்பணி செய்த ஊழியர்களுக்கு, இந்த வன்னி மர இலைகளைக் கூலியாகக் கொடுத்தார். அவை, அவர்களின் உழைப்பிற்கு ஏற்ப, தங்க காசுகளாக மாறின.
சிவ ஆகமங்கள், 28. இதைக் குறிக்கும் விதத்தில் இங்கு, 28 லிங்கங்கள் உள்ளன. தெற்கு வரிசை ஆகம லிங்கங்களின் நடுவில், விநாயகரும், மேற்கு வரிசை லிங்கங்களின் நடுவில், வள்ளி - தெய்வானையுடன், முருகனும் அருள்பாலிக்கின்றனர்.
சென்னை -- மதுரை சாலையில், உளுந்துார்பேட்டையில் இருந்து, 23 கி.மீ., துாரத்தில் விருத்தாச்சலம் உள்ளது.
தி. செல்லப்பா