தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (7)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (7)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (7)


PUBLISHED ON : அக் 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 04, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மறுபடி வாங்கிய அடி!

இவ்வளவு நடந்தும், காசு திருடும் பழக்கம் மாறவே இல்லை. பயத்தை, ஆசை வென்றபடி இருந்தது. அப்பாவிடம் எவ்வளவு அடி வாங்கியும் படிந்து போன என் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவே முடியவில்லை.

ஆனால், இம்முறை வாங்கிய அடி, காசு திருடியதற்காக அல்ல.

அது ஒரு வித்தியாசமான காரணம். படிப்பு சார்ந்த அடி இது. அதிலும் கணக்கு, ஆங்கிலம் சுத்தம். சுட்டுப் போட்டாலும் வராது என்கிற நிலை. கல்யாணசுந்தரம் என்கிற ஓய்வுபெற்ற ஆசிரியரை, வீட்டிற்கே வந்து, 'டியூஷன்' சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார், அப்பா.

பொறுமையின் பூஷணமான அவரையே, நான் கோபப்பட வைத்தேன். கவனம் படிப்பில் இருந்தால்தானே... எங்கோ கவனம், எதிலோ லயிப்பு... எப்படி வரும் படிப்பு?

வீட்டுப்பாடம் கொடுப்பார், டியூஷன் சார்.

மறுநாள் வரும்போது, முதல் கேள்வியாக இதைத்தான் கேட்பார். அசடு வழிவேன்.

'என்னடா பண்ணுனே நேத்து முழுக்க... ஏண்டா இப்படி வதையை வாங்குறே... அப்பாகிட்ட சொல்ல வேணாம்ன்னு பார்க்கிறேன். சொல்ல வச்சுடுவே போலிருக்கே...' என்றவர், ஒருநாள் புகார் செய்து விட்டார்.

ஆனால், இம்முறை சரிவரப் படிக்காத காரணத்திற்காகவோ, வீட்டுப் பாடம் செய்யாததற்காகவோ அல்ல.

'பையன் கையெழுத்து சரியில்லை. இப்படியெல்லாம் எழுதினா, நல்லாப் படிச்சு எழுதினாக் கூட மார்க் போட மாட்டாங்க...' என்று அப்பாவிடம் சொல்ல.

அப்பா எந்த மூடில் இருந்தாரோ தெரியவில்லை.

செம அடி கொடுத்தார்.

காப்பாற்ற அம்மாவோ, புண்ணியகோடி முதலியாரோ இல்லை.

அப்பாவிடம் ஒரு பழக்கம். எப்போது அடிக்கிறாரோ, அப்போதெல்லாம் கதவைத் தாழிட்டு விடுவார். எவரும் உள்ளே வர முடியாது. நானும், அப்பாவும் மட்டும் தான். வேணும் என்கிற வரை பூசை நடக்கும்.

ஒருமுறை என் அம்மாவிடம் இப்படிச் சொல்லியிருக்கிறார்:

'இவனை அடிச்சு அடிச்சு, எனக்குத் தான் வலிக்குது. அவனுக்கு வலிச்சதாத் தெரியலை...'

இதைப் படிப்பவர்கள், என் அப்பா சற்றுப் பொல்லாதவர்; அன்பு வழிகளை நம்பாதவர் என்கிற முடிவிற்கு வரக்கூடும்.

ஆனால், உண்மை அதுவல்ல. என்னுடன் பிறந்த மூவரும், அப்பாவிடம் ஓர் அடி கூட வாங்கியதில்லை. காலமெல்லாம் வாங்கிக் கட்டிக்கொண்டவன் நான் மட்டுமே.

என் அப்பா, எனக்கு அறிமுகமானது, ஒன்பது வயதில். அவர் மறைந்தது, என், 22ம் வயதில். இந்த, 13 ஆண்டுகளில் அவருடன் எனக்குக் கிடைத்த ஸ்பரிசம் எல்லாம், அடிகளின் வழியாகத்தான் அதிகம் என்பேன்.

அடி வாங்கும் படலம் இதோடு முடிந்ததா என்றால், அதுதான் இல்லை.

அப்பாவின் நெடுநாளைய நண்பர், எழுத்தாளர் ரவீந்தர். 'கல்கண்டு' ஆசிரியர் குழுவின், மூத்த எழுத்தாளர். அப்பாவுக்கு பிறகும், 'கல்கண்டில்' பல காலம் எழுதியவர். இவர், அப்பாவை பார்க்க அடிக்கடி வீட்டிற்கு வருவார்.

இவரது பைக், 'ஜாவா' எனப்படும் ரகத்தைச் சேர்ந்தது. இது, 'எஸ்டி' என்று, பிறகு, பெயர் மாற்றம் ஏற்பட்டது.

இந்த பைக் வந்ததுமே, அதில் ஏறி அமர்ந்து கொள்வேன். 'ஹாண்டில் பார் லாக்' செய்யாமல் போய் விடுவார், ரவீந்தர்.

எனவே, திரைப்படத்தில் பைக் ஓட்டத் தெரியாதவர்களைக் கூட, ஓட்டத் தெரிந்தவர் போல், பின்னால் ஒரு காட்சியை - 'பேக் புரொஜக் ஷன்' ஓடவிட்டு, ஹீரோவோ, வில்லனோ பைக் ஓட்டுவதாகக் காட்டுவரே, அந்த நினைப்பு எனக்குள் வந்துவிடும்.

ஏறி அமர்ந்து பைக் ஓட்டுவது போல், பாவனை செய்வேன்.

இதை நண்பன் மீனாட்சிசுந்தரம் பார்த்துவிட்டு, 'டேய்... நானும் ஓட்டுறேண்டா...' என்றான் ஒருமுறை.

விபரீதத்தை உணராதவனாய், 'வா ஓட்டு...' என்று, தாராளமாய் நான் அனுமதி வழங்க, மீனாட்சிசுந்தரம் ஏறி அமர்ந்த நேரமோ என்னவோ (என்னை விடச் சற்று உயரமான மோட்டாவான ஆள்) ஸ்டாண்டின் ஒருபுறம் மண்ணில் புதைய, வண்டி குடை சாய்ந்து விழுந்தது. பைக்கின், 'ஹெட் லைட்' ஒரு கல்லின் மீது பட, 'மடார்' என்ற சத்தத்துடன், அது உடைந்தது.

அந்தப் பகுதியே கேட்கும்படியான சத்தம். கண்ணாடி சில்லுச் சில்லாக உடையும் சத்தம் வேறு. நானும், மீனாட்சி சுந்தரமும் செய்வதறியாது, பயந்து, அந்தப் பகுதியிலேயே நிற்காமல் ஓடி ஒளிந்தோம். வெளியே வந்து பார்த்த ரவீந்தர், அதிர்ச்சியாகிப் போனார்.

நாங்கள் ஏறி விளையாடியதில் தான் வண்டி கவிழ்ந்தது தெரிய வந்தது. அப்பா இதை எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று நான் பயந்து நடுங்க, அவர் எதுவுமே சொல்லாமல், அக்கண்ணாடிக்கான விலையை ஊகித்து, உரிய தொகையை ரவீந்தரிடம்

கொடுக்க, விஷயம் அடங்கிப் போனது போல் தெரிந்தது.

ஆனால், எனக்குள் பயம். நண்பன் இப்படி நம்மை மாட்டி விட்டு விட்டானே... இன்று இரவு வீட்டிற்குப் போனதும் செம அடி காத்திருக்கிறது என்று, நான் பயந்து நடுங்க, அம்மாவுக்குத் துாது அனுப்பினேன்.

'இந்த லேனாவோட வால்தனம் கொஞ்சங் கூட குறையவே இல்லை. ரவியைப் பார்... அவனைத் தேடி ஒருத்தனாச்சும் வர்றானா பாரு. லேனாவோட நண்பர்கள் எவனுமே சரியில்ல. லேனா கெட்டுப் போக, அவனது கெட்ட சகவாசம் தான் காரணம். லேனாவை நெனச்சா எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு...' என்றார், அப்பா.

அம்மாவின் சமாதானத்தால் நான் தப்பித்தேனே தவிர, அப்பாவின் புது உத்தரவு என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

'இனி லேனாவைத் தேடி ஒரு பயல் கூட வீட்டிற்கு வரக்கூடாது...' என்பதே அது.

நானும் ஒரு ரிக் ஷாக்காரன்!

பத்திரிகைகளில் பல புதுமைகளைப் புகுத்தியவர் தமிழ்வாணன். 'கல்கண்டு' இதழில், 'நானும் ஒரு

ரிக் ஷாக்காரன், நான் ஒரு தொழிலாளி, நான் ஒரு ஜோதிடக்காரன்' என்ற தலைப்புகளில், தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதினார், தமிழ்வாணன்.

'நானும் ஒரு ரிக் ஷாக்காரன்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைக்கு, ஓவியர் ராகியை கை ரிக் ஷாவில் அமர வைத்து தமிழ்வாணன் ரிக் ஷா இழுக்கும் காட்சி இது.

தொடரும்

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us