தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (1)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (1)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (1)


PUBLISHED ON : ஆக 23, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 23, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இவங்க தான் உன் அப்பா...'

எனக்கு, அப்போது, மூன்று வயது தான் இருக்கும். வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த என்னை, பெரியம்மா அழைத்து, 'இவதான் உன் அம்மா...' என்று அறிமுகப்படுத்தினார்.

இப்படி, அம்மாவை, ஒரு மகனுக்கு அறிமுகப்படுத்திய படலம், எத்தனை மகன்களின் வாழ்வில் நடந்திருக்குமோ, எனக்கு தெரியாது.

'என்னது... பெற்ற அம்மாவை, இன்னொரு அம்மா அறிமுகப்படுத்துவதா...' ஒரே குழப்பமாக இருக்கிறதே என்கிறீர்களா... தீர்க்கிறேன்.

என் பெரியம்மாவுக்கு, குழந்தைகள் இல்லாத காரணத்தால், தன் தங்கை மகனான, என்னை எடுத்து வளர்க்க பிரியப்பட்டார். நண்டும் சிண்டுமாக (எங்கள் பகுதி சொல் வழக்கு) நாங்கள் நால்வர் இருக்கவே, குறும்பு மகனான என்னை விட்டுக்கொடுக்க, அம்மா சம்மதித்தார்.

இதற்கு இருவித காரணங்கள் இருந்தன. முதலாவது, சிறு வயதில் தன் தாயை இழந்த என் அம்மாவுக்கு, பெரியம்மா தான், தாயாக இருந்து பார்த்துக் கொண்டார். மகப்பேறுக்கு தாய் வீட்டிற்கு போவர் அல்லவா... என் அம்மா வந்தது, பெரியம்மா வீட்டிற்கு.

தாய்க்கு தாயாய் இருந்து, தன்னை பார்த்துக் கொண்டவர்களின் விருப்பத்தை எப்படி மறுப்பது... இது, முதல் காரணம்.

இரண்டாவது, நாங்கள் நான்கு பிள்ளைகள். அப்பா, அந்த காலத்து எழுத்தாளர். வருமானம் ஒன்றும் பிரமாதமில்லை. எனவே, ஒரு பிள்ளை குறைந்தால் கொஞ்சம் சமாளிக்கலாம். நான்கு பங்கை, மூன்று பங்காக்கி வைத்தால், மூன்றின் வயிறு நிரம்பும் என, அம்மா சிந்தித்திருக்க வேண்டும். எனவே, பெரியம்மா கேட்டதுமே, மறுக்க இயலாமல் சம்மதித்தார்.

பெரியம்மாவை, நான் ஆத்தா என்றே கூப்பிட்டு பழகினேன். பெரியப்பா, திரு.முத்துராமன், அப்பச்சி ஆகிப் போனார்.

இந்த பின்னணியில், சென்னையிலிருந்து என்னை பார்க்க வந்திருந்த, என் அம்மாவை எனக்கு அறிமுகப்படுத்தினர்.

'இவ தான் உங்க அம்மா...'

எனக்கோ ஒன்றும் புரியாத பருவம்.

'அட போங்க ஆத்தா...' என்று, அவர்கள் என் தோளை பிடித்த பிடியிலிருந்து விலகி ஓடினேன். விளையாட்டு புத்தி.

'அம்மாவாம்... யாரு இவங்க, இவங்க எப்படி எனக்கு அம்மாவாக முடியும்... எனக்கு தான் ஏற்கனவே ஆத்தா இருக்காங்களே...' என்கிற நினைப்பு.

மாலை மங்கியதும், 'கழுதை இப்ப வந்திடும், புடிச்சு குடுத்துடறேன்...' என்றாராம், பெரியம்மா.

'இந்த தடவை, லேனாவை நான் மெட்ராசுக்கு அழைச்சுகிட்டு போகவா... கூடப் பொறந்ததுக பார்க்கணும்குதுக...' என்றார், அம்மா.

'கூட்டிக்கிட்டு போகத்தான் வேணும்கிறியா...' என்ற பெரியம்மாவுக்கு, என்னை விட்டு பிரிய சம்மதமில்லை.

மறுநாள், அம்மா புறப்படும்போது, 'வாடா, மெட்ராசுக்கு... அப்பாவை பார்க்க வேணாமா?'

'அப்பாவா... இது என்ன புதுசாய்... எனக்கு தான் அப்பச்சி இருக்காங்களே...' என்று மனது சொல்ல, 'மாட்டேன். நான் வரலை...' என்றேன்.

'ஏண்டா, இப்படி பாசமே இல்லாம போனே... அப்பாவை எப்ப பார்க்கிறது?'

'அப்பாவா... அது யாரு... கருப்பா, சிவப்பா அவர்...'

நான் அமைதியாக அம்மா முகத்தை பார்க்க, அவர்கள் முகத்தில் ஏகமாய் ஏமாற்றம்.

'போயிட்டு வரேன்...' என்று, அம்மா சொல்லிக் கொள்ளும்போது, மனதில் கொஞ்சமாவது பிரிவு துன்பம் ஏறணுமே... யாரோ ஒரு விருந்தினர் வந்து போனால் ஏற்படுமே உணர்வு, அவ்வளவு தான். அதற்கு மேல் எந்த உணர்வும் இல்லை.

அம்மா இப்படி, 'விசிட்டிங் மதராக' ஆகிப்போக, ஒருநாள், அந்த அதிசயம் நிகழ்ந்தது.

பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த போது, 'லேனா... இங்க பாரு, யாரு வந்திருக்கான்னு...' என்று, வரவேற்பு அறைக்கு அழைத்தார், பெரியம்மா.

'லேனா, எப்படியிருக்கே... கிட்ட வா, இவங்கதாண்டா உன் அப்பா...' என, அறிமுகப்படுத்தினார், அம்மா.

எனக்கு ஏற்கனவே சிறு வயதில் கிடைத்திருக்கலாம், அப்பா தரிசனம். ஆனால், என் நினைவேடுகள் விழித்துக் கொள்ள, அதில் பதிவாகிற வயதில், இப்போது தான் அறிமுகமாகிறார், அப்பா. துாய வெள்ளை சட்டை, மடிப்பு கசங்காத வெள்ளை வேஷ்டி, கரு கருவென முடி. ஒருவித வசீகர தோற்றம்.

'இவரா என் அப்பா... அப்ப அப்பச்சி...'

கண்களில் சிறு மிரட்சி காட்டி நிற்க, என் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தார், அப்பா.

அப்பாவின் ஸ்பரிசத்தை முதன் முதலாக உணர்ந்த வயது, ஐந்து.

அப்பாவும், அம்மாவும், என்னை ஒட்டிக்கொள்ள தான் பார்க்கின்றனர். ஆனால், எனக்கு, அவர்கள் அந்நியமாகவே இருக்கின்றனர். ஏதும் பேசாமல், அப்பாவின் அரவணைப்பில் இருந்தபடி, அவரது முகத்தை அடிக்கடி நிமிர்ந்து பார்த்தேன். அவர் ஏதோ கேட்டார். தலையை குனிந்து கொண்டேன்.

'அக்கா, தம்பி, தங்கையெல்லாம் பார்க்க வேண்டாமா நீ... எப்ப பார்க்குறது அப்புறம்...' என, அப்பா கேட்க, நான் பெரியம்மாவை பார்த்தேன்.

பதில் சொல்ல தெரியாமல் இல்லை.

'நான் வரலை...' என்கிற பதிலை, எனக்கு பதிலாக பெரியம்மாவே ஏதாவது சமாதானம் சொல்லி, இந்த இருவரையும் ஊருக்கு அனுப்பிவிட மாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பே, என் பார்வையின் பொருள்.

ஒன்பது வயது வரை, இதுபோன்ற காட்சிகளோ, இதையொட்டிய காட்சிகளோ அவ்வப்போது அரங்கேறி முடிந்தன.

இந்த காட்சிகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்படி, ஒருநாள், அந்த, 'கிளைமேக்ஸ்' காட்சி நடந்தேறியது.

— தொடரும்

லேனா தமிழ்வாணன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us