sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தந்தையர் தினம்!

/

தந்தையர் தினம்!

தந்தையர் தினம்!

தந்தையர் தினம்!


PUBLISHED ON : ஜூன் 20, 2021

Google News

PUBLISHED ON : ஜூன் 20, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அப்பா, கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டீங்களா... தெரிஞ்ச மாதிரி எதையாவது சொல்லிக்கிட்டு, வாயை மூடிக்கிட்டு பேசாம இருங்க...

''உங்க பேத்திக்கு எல்லாம் தெரியும். நீ வரை, மது. நீ வரையறது தான் கரெக்ட்... தாத்தா இப்படித்தான் எதையாவது சொல்லிட்டு இருப்பாரு,'' என, ஹாலில், பரத் சத்தமாக பேசுவது, சமையல் அறையில், மருமகளுக்கு உதவியாக காய்கறி வெட்டிக் கொண்டிருந்த, கமலத்தின் காதில் விழுந்தது.

''வழக்கம்போல், மாமாவுக்கும், உங்க பிள்ளைக்கும் வாக்குவாதம் ஆரம்பிச்சாச்சு, அத்தை. எப்படியோ போகட்டும்ன்னு, மாமாவும் சும்மா இருக்காம, எதையாவது சொல்லிக்கிட்டே தான் இருக்காரு,'' சட்னிக்கு வதக்கியபடி, மாமியாரிடம் சொன்னாள்.

இது, அந்த வீட்டில் அடிக்கடி நடக்கும் பிரச்னை தான்.

கமலத்தின் கணவர் சிவராமன். வயது, 70ஐ நெருங்குகிறது. 20 ஆண்டுகளாக, 'சுகர்' இருப்பதால், ரொம்பவே தளர்ந்து விட்டார். யார் துணையுமின்றி, வெளியில் எங்கும் போக முடியாது. மாலை நேரத்தில், கை பிடித்து மெதுவாக அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு அழைத்து போய் வருவாள், கமலம்.

மற்றபடி அவர் பொழுதுகள் எல்லாம் வீட்டில் தான். அவருக்குத் தெரிந்ததை சொல்ல, அதை ஏற்காமல் அவரிடம் வாக்குவாதம் செய்வான், பரத்.

'உங்க காலம் மாதிரி நினைச்சுட்டு இருக்காம, பேசாமல் இருங்க... எனக்கு எல்லாம் தெரியும்...' அவன் வார்த்தைகள், சில சமயம் அவரைக் காயப்படுத்தும்.

''என்னங்க பிரச்னை?''

''கமலம், நான் என்ன தப்பா சொல்லிட்டேன். மது, படம் வரைஞ்சா... மலை மேல் சூரியன் உதிக்கிற மாதிரி வரையாமல், மலைக்கு கீழே வரைஞ்சா. 'அது தப்பு. சரியா வரை'ன்னு சொன்னேன்; அவ்வளவு தான்.

''உன் மகன், சண்டைக்கு வந்துட்டான். இந்த வீட்டில் நான் வாய் திறந்தாலே, தப்பா தான் தெரியுது. நான் சொல்றதை யாரும் காதில் வாங்கறதில்லை,'' அவர் குரலில் வருத்தம் தெரிந்தது.

''என்னங்க இது, சின்ன குழந்தை மாதிரி... இதெல்லாம் சாதாரண விஷயம். இந்த காலத்து பிள்ளைகள் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்காங்க. நாம் சொல்லணும்ன்னு அவசியமில்லை. பரத் அதைத்தான் சொன்னான்.''

''நீ எப்பவும், உன் மகனுக்கு தான், 'சப்போர்ட்' பண்ணுவே.''

''சரி விடுங்க, உங்களுக்கு காபி எடுத்துட்டு வரட்டுமா?'' பேச்சை மாற்றினாள், கமலம்.

''அம்மா... இங்கே, 'ஷெல்பில்' 'லைப்ரரி புக்' வச்சிருந்தேன், பார்த்தீங்களா?''

''இல்லையே... நல்லா பாரு, பரத்.''

''எதைத் தேடறீங்க... 'பைண்ட்' பண்ணின புத்தகமா... படிக்கலாம்ன்னு நான் தான் எடுத்தேன். துாக்கி படிக்க முடியலை; பயங்கர, 'வெயிட்!' என் அறையில் தான் எங்கயாவது வச்சிருப்பேன். இரு, பார்த்து எடுத்துட்டு வரேன்,'' என, கைத்தடியை ஊன்றி, மெல்ல உள்ளே போனார், சிவராமன்.

கோபமாக அம்மாவைப் பார்த்து, ''இவர் ஏன்மா இப்படி இருக்காரு. வயசாயிடுச்சுன்னு இன்னுமா இவருக்கு புரியலை... அரைமணி நேரமா, புத்தகத்தை தேடறேன். கோபம் வர்ற மாதிரி எதையாவது பண்றாரு,'' எரிச்சலானான், பரத்.

அன்று இரவு சாப்பாடு முடிந்து, ஹாலில், அப்பா - அம்மாவுடன், கதைகள் பேசி விளையாடிக் கொண்டிருந்தாள், மதுமிதா.

அதை சுவாரஸ்யமாக கேட்டபடி, தன் பங்கிற்கு, ''மதுக்குட்டி... உனக்கு தெரியுமா, தாத்தா பெரிய கிரிக்கெட் ப்ளேயர். கிராமத்திலேயே பேட், ஸ்டெம்ப், பால் எல்லாம் வெச்சிருந்தேன். என்னை, 'ஹீரோ' மாதிரி தான் பார்ப்பாங்க. என்னைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டமே இருக்கும்,'' முகம் மலர, தன் நினைவுகளைப் பகிர்ந்தார், சிவராமன்.

''அப்பா, உங்க சுய புராணத்தை எத்தனை தடவை சொல்வீங்க. கேட்டு கேட்டு, காது புளிச்சுப் போச்சு. போய், படுக்கற வழியைப் பாருங்க... அம்மா, இவரை அழைச்சுட்டுப் போங்க,'' என்றான், பரத்.

''வாங்க... படுக்க போகலாம்,'' என, அழைத்துச் சென்றாள்.

இரவு துாக்கத்தில் புரண்டு படுத்தவள், கணவர் துாங்காமல், கட்டிலில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, மெல்ல அவர் தோளைத் தொட்டு, ''என்னங்க, துாக்கம் வரலையா... ஏன் உட்கார்ந்திருக்கீங்க?'' என்றாள்.

இரவு வெளிச்சத்தில், அவர் கண்களில் கண்ணீர் திரண்டிருப்பதைப் பார்த்ததும், பதற்றத்துடன், ''என்னங்க... என்னாச்சு, உடம்புக்கு ஏதாவது செய்யுதா?''

''பழைய நினைவு, கமலம்... பரத்திற்கு, அப்போ மூணு வயசிருக்கும். தினம் ராத்திரி என் பக்கத்தில் படுத்துக்கிட்டு, கதை சொல்வான். காட்டில் ஒரு பெரிய சிங்கம் இருந்துச்சு. காட்டுக்கே அதுதான் ராஜா. பார்க்கவே பயமா இருக்கும்ன்னு, அவன் கண்களை உருட்டி சொல்லும்போது... நானும் பயந்தது போல நடித்து, சுவாரஸ்யமாக அவன் சொல்வதைக் கேட்பேன்.

''ஒரு நாள் இல்லை, தினம் இதே கதை தான். ஒவ்வொரு நாளும் அவன் சொல்லும்போது புதுசா கேட்கிற மாதிரி உற்சாகமாக கேட்பேன். ஒருநாள் கூட, 'இதை நீ எத்தனையோ முறை சொல்லிட்டே; எனக்கும் கேட்டு கேட்டு, காது புளிச்சு போச்சு'ன்னு சொன்னதில்லை.

''ஆனா, இன்னைக்கு அவன் சொன்ன வார்த்தைகள், மனசு வலிக்குது, கமலம்... என்ன தப்பா சொல்லிட்டேன். நான் பேசறதை காது கொடுத்துக் கேட்க, அவங்களுக்கு பொறுமை இல்லை. அப்படித்தானே?'' என்றார். சிவராமன்.

கணவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், குழந்தையாக மாறி, ஏக்கத்துடன் கேட்கும் அவரை மனம் நெகிழப் பார்த்தாள்.

மறுநாள் காலை -

''அம்மா... இன்னைக்கு, 'பாதர்ஸ் டே!' அப்பா இன்னும் எழுந்திருக்கலையா... அவருக்கு தர இந்த வாழ்த்து அட்டை வாங்கினேன். நல்லா இருக்கா பாரு,'' என்றான்.

அப்பாவின் கைப்பிடித்து நடக்கும் சிறுவனின் படம் இருந்தது.

''பரத்... சொல்றேன்னு தப்பா நினைக்காத... இந்த குடும்பத்தை ஆண் மகனாக நிர்வகிச்சவர். இப்ப குழந்தையாக மாறி, அன்புக்கு ஏங்குறாரு... அலட்சியப்படுத்தாமல் அவர் சொல்ற வார்த்தைகளை நாம் காது கொடுத்துக் கேட்டாலே, அவருக்கு சந்தோஷத்தைத் தரும்.

''அப்புறம், ஒவ்வொரு நாளுமே, அவருக்கு தந்தையர் தினமாக மாறி பரவசப்படுத்தும். நீ தரப்போற இந்த வாழ்த்து அட்டையை விட, வயசான காலத்தில், உன் வார்த்தைகள் அவருக்கு நிம்மதியைத் தரட்டும்,'' என்றவள், வாழ்த்து அட்டையை அவனிடம் கொடுத்து, உள்ளே சென்றாள்.

அப்பாவின் கை பிடித்து நடந்த, இளம் பருவ நாட்கள் மனதில் நிழலாட, கண் கலங்கி நின்றான், பரத்.

பரிமளா ராஜேந்திரன்






      Dinamalar
      Follow us