PUBLISHED ON : ஏப் 02, 2017

நடுங்க வைக்கும் குளிருக்கு இதமாக, சூடாக ஒரு டீயோ, காபியோ சாப்பிட்டால் எப்படி இருக்கும்... கூடவே, கரகர, மொறுமொறு என, ஒரு வர்க்கியை டீயில் தொட்டு சாப்பிட்டால்... தேவாமிர்தம் தான்!
மலைகளின் அரசியான ஊட்டி, வர்க்கிக்கும் பிரபலமானது. கோடை கால சீசனில், நாள் ஒன்றுக்கு, 8,000 கிலோ அளவுக்கு வர்க்கிகள் விற்பனை ஆகின்றன. நெய் வர்க்கி, இனிப்பு, சதுரம், எண்ணெய், ரிப்பன் மற்றும் மசாலா வர்க்கி என, பல வடிவங்களில் கிடைக்கிறது. குளிர் சீதோஷணத்தில், பதமாக புளிக்கும் மாவும், அவ்வூர் குளிர்ந்த நீருமே இதன் சுவைக்கு காரணம்.
ஆங்கிலேயர்களின் பிரதான நொறுக்கு தீனியான, 'குக்கீஸ்' (பிஸ்கட்) அவர்கள் காலத்தில் தான் தமிழகத்தில் அறிமுகமானது.
காலையில், நீலகிரியின் மணம் கமழும் தேநீரோடு, சில, பல குக்கிகளை விழுங்குவது, அவர்களது வழக்கம். அவர்களிடம் பணியாற்றிய சில சமையல்காரர்கள், பிஸ்கட்டை அடிப்படையாக வைத்து, புதுச்சுவையில் தயாரித்தது தான் வர்க்கி!
'மொறு மொறு'வென்று இருந்த அதன் புதுச்சுவை, ஆங்கிலேயர்களுக்கு பிடித்துப் போக, இன்று, ஊட்டியின் அடையாளங்களில் ஒன்றாக உயர்ந்து விட்டது, வர்க்கி!
காய்ந்த நிலையில் இருக்கும் பொருளை, வறட்டி என்போம். 'வற வற' என இருந்ததால், 'வறக்கிஸ்' என சொல்லப்பட்டு, பின்னாளில், 'வர்க்கி' என்று மருவியது. நெய்யில் வறுத்து தயாரிக்கப்பட்டதால், இப்பெயர் உண்டானதாகவும் சொல்வர்.
குன்னூர், கூடலூர், கோத்தகிரி மற்றும் முதுமலை என, நீலகிரியின் அங்கங்களான அனைத்து ஊர்களிலும் வர்க்கி கிடைக்கிறது.
- மு.ஆதவன்
