
குழந்தை இல்லாதவர்களுக்காக, காஞ்சிபுரம் அருகிலுள்ள திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் கோவிலில், கருத்தரிப்பு வழிபாடு நடக்கிறது.
பொதிகைக்கு செல்லும் வழியில், பல இடங்களில் லிங்கம் அமைத்து வழிபட்டார், அகத்தியர். பனங்காட்டில் அவர், ஒரு லிங்கத்தைக் கண்டார். அதற்கு அபிஷேகம் செய்ய, தண்ணீர் தேடினார்; கிடைக்கவில்லை. சிவனை வேண்டவே, ஓரிடத்தில் தண்ணீர் கொப்பளித்து, அது, தீர்த்தமாக தேங்கியது. இது, 'ஜடாகங்கை தீர்த்தம்' எனப்பட்டது.
அந்த தீர்த்தத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்த அகத்தியர், பனம் பழங்களை நைவேத்யமாக படைத்தார். இறைவன், பனங்காட்டில் எழுந்தருளியவர் என்பதால், தாளபுரீஸ்வரர், என பெயர் பெற்றார். தாளம் என்றால், பனை என்று அர்த்தம்.
அகத்தியருடன் வந்த அவரது சீடர், புலத்தியரும், ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவர், கிருபாபுரீஸ்வரர் என்ற பெயரில் அருளுகிறார்.
தேவாரம் பாடிய, சுந்தரர், காஞ்சிபுரம் வந்தபோது, அவருடன் வந்த அடியார்கள் பசியால் களைத்து போயினர்.
அப்போது, அங்கு வந்த ஒரு முதியவர், அவர்களுக்கு உணவு கொடுத்தார். சுந்தரர் அவரிடம், 'உண்ண உணவு கொடுத்த நீங்கள் பருகுவதற்கு தண்ணீரும் தாருங்கள்...' என்றார்.
அவர் ஓரிடத்தில் கையைக் காட்ட, அங்கு தண்ணீர் பொங்கியது. வியந்த சுந்தரர், அவரிடம், 'தாங்கள் யார்...' என்றார். அதற்கு முதியவர், 'உன் திருமணத்தில் வம்பு செய்தவன். பனங்காட்டில் குடியிருப்பவன்...' என்று சொல்லி, மறைந்தார்.
தங்களுக்கு உணவு தந்தது, சிவன் என அறிந்த சுந்தரர், மகிழ்ச்சி கொண்டார். அவர் சொன்ன பனங்காட்டிற்கு சென்றார். சிவனை வணங்கி, அவர், தன் நண்பர் என்ற உரிமையுடன், 'வம்பு செய்பவன், கள்ளன்' என்று செல்லமாகத் திட்டி, பதிகம் பாடினார்.
பிரதான மூலவர் தாளபுரீஸ்வரருக்கான அம்பிகை அமிர்தவல்லி, கிருபாபுரீஸ்வரருக்கான அம்பிகை, கிருபாநாயகி ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. ஆண், பெண் என, இரண்டு பனை மரங்கள், தல விருட்சமாக உள்ளன. இம்மரங்களை, திருமணத்தடை உள்ளவர்கள் சுற்றி வருகின்றனர்.
இங்கு, கருத்தரிப்பு வழிபாடு நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதோர், சுவாமிக்கு பனம் பழம் படைப்பர். அதையே பிரசாதமாக சாப்பிட்டால், கருத்தரிக்கும் என நம்புகின்றனர்.
கோவிலுக்கு வெளியே, வன்னி மரத்தின் அடியில், சனீஸ்வரரும், காவல் தெய்வம், யோகானந்த முனீஸ்வரரும் உள்ளனர். இவர்களை வணங்கினால், கிரக தோஷம் நீங்கும்.
காஞ்சிபுரம் - செய்யாறு வழியில், 12 கி.மீ., துாரத்திலுள்ள திருப்பனங்காடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து, 1 கி.மீ., தொலைவில் கோவில் உள்ளது.
தி. செல்லப்பா