
'இப்படியும் ஒரு திருவிழாவா?' என, வியக்க வைக்கும் வகையில், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மகா மாரியம்மன் எனப்படும், பாடைகட்டி மாரியம்மன் கோவிலில் வித்தியாசமான ஒரு விழா நடக்கிறது.
வலங்கைமான் அருகிலுள்ள புங்கஞ்சேரி அய்யனார் கோவிலுக்கு காதக்கவுண்டர் - கோவிந்தம்மாள் தம்பதி வந்தனர். அங்கு யாராலோ தவற விடப்பட்டு சென்ற, குழந்தையை எடுத்து வளர்த்தனர்.
குழந்தைக்கு, ஏழு வயதான போது, அம்மை ஏற்பட்டு இறந்து விட்டது. உடலை, தங்கள் வீட்டு கொல்லைப் புறத்தில் புதைத்து சமாதி கட்டினர். அங்கு, தினமும் விளக்கேற்றி வழிபட்டனர்.
ஒருநாள், அவர்கள் கனவில் தோன்றிய குழந்தை, 'நான், அம்பாளின் அம்சம்...' எனக் கூறியது.
இதையடுத்து, குழந்தையை புதைத்த இடத்தில், கீற்றுக்கொட்டகை அமைத்து, வழிபட ஆரம்பித்தனர்.
அம்மை நோய் கண்டு குளிர்ந்து (இறந்து) போனதால், அந்த குழந்தைக்கு, சீதளாதேவி என, பெயர் சூட்டினர். சீதளம் என்றால், குளிர்ச்சி. காலப்போக்கில் அங்கு கோவில் கட்டினர். அம்பாள் அதீத சக்தி வாய்ந்தவளாக திகழ்ந்ததால், மகா மாரியம்மன் என, புதிய பெயர் சூட்டினர்.
நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு கூட, உயிர் கொடுத்தாள், இந்த அம்பிகை. இதற்கு நன்றிக்கடனாக, பக்தர்கள் வித்தியாசமான வழிபாடு ஒன்றைத் துவங்கினர். இதை, மரண வழிபாடு என்பர்.
நேர்ச்சை செலுத்துபவரை, பாடையில் படுக்க வைத்து வலம் வந்தனர்.
மூங்கில், தென்னை ஓலையில் பாடையை செய்து, நேர்த்திக்கடன் செலுத்துபவர் படுத்து, இறந்தவர் போல கண்மூடி பாவனை செய்வார். அவருக்கு வாய்க்கரிசி போடுவர். தாரை தப்பட்டை முழங்கும்.
நேர்ச்சை செலுத்துபவர், அம்மா - அப்பாவாக இருந்தால் மகனும், மகன் - மகளாக இருந்தால், அப்பா அல்லது கணவர் தீச்சட்டி ஏந்தி, உடன் செல்வர். நான்கு பேர் பாடையைச் சுமந்து, கோவிலை வலம் வருவர்.
'அம்மா... இறந்தவர்கள் பட்டியலில் என்னை சேர்த்து விடு. ஆனால், என் குடும்பத்துக்கு நான் தேவைப்படுகிறேன். அதற்காக நடைப்பிணமாக வாழவிடு...' என்று வேண்டுவர்.
பின், நேர்ச்சை செலுத்துபவர் மீது, மஞ்சள் நீர் தெளிப்பார், பூசாரி. பாவனை செய்தவர் எழுந்து விடுவார். பங்குனி மாதம் இரண்டாம் ஞாயிறு அன்று, மரண திருவிழா நடத்தப்படும்.
தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அம்மனை வழிபட்டு நிவாரணம் பெறலாம். கும்பகோணம் - மன்னார்குடி சாலையில், 10 கி.மீ., துாரத்தில் இந்தக் கோவில் உள்ளது. கோவில் முன் பேருந்து நிற்கும்.
தி. செல்லப்பா