தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/முதல் மனிதனின் திருவிழா!

முதல் மனிதனின் திருவிழா!

முதல் மனிதனின் திருவிழா!


PUBLISHED ON : ஜன 15, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில், பொங்கல் எனப்படும் விழாவுக்கு, மற்ற மாநிலங்களில் வெவ்வேறு பெயர் இருக்கிறது. ஆனால், பொதுவான பெயர், மகர சங்கராந்தி. ஜன., 14 அல்லது 15ல் தான் மகர சங்கராந்தியை கொண்டாடுவர்.

காரணம், இந்த நாளில் தான், சூரியன் மகர ராசிக்குள் நுழைகிறார். சங்கராந்தி என்றால், சங்கமித்தல் என்று பொருள். சூரியன் மகர ராசியில் சங்கமிக்கும் முதல் நாளே, மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது.

பொங்கலை சூரியத் திருவிழாவாக, அனைவரும் கொண்டாடினாலும், திரிபுரா மாநில மக்கள் மட்டும் வித்தியாசமாக, சிவனால் படைக்கப்பட்ட, முதல் மனிதனுக்குரிய விழாவாகக் கொண்டாடுகின்றனர். இதை, ஹாங்ராய் திருவிழா என்கின்றனர், அவர்கள்.

உலகம் படைக்கப்பட்ட காலத்தில், அது வெறுமையாக இருந்தது. அதை அழகுபடுத்த நினைத்தார், சிவன். பெரிய முட்டை ஒன்றை ஓரிடத்தில் வைத்தார். 10 மாதங்கள் கழித்து, அதன் உள்ளிருந்து ஒரு மனிதன் வெளிப்பட்டான்.

அவன், ஹாங்ராய் என, தனக்கு பெயர் சூட்டிக்கொண்டான். அவனால், உலகில் தனியாக வாழ முடியவில்லை. எனவே, மீண்டும் உடைந்து கிடந்த அரை முட்டை ஓட்டுக்குள் அமர்ந்து, இன்னொரு அரை ஓட்டால், தன்னை மூடிக் கொண்டான்.

உலகில் பிறக்க வைப்பது மட்டுமே, கடவுளின் பொறுப்பு. பிறந்தவர் அனைவரும், அவரவரே முன்னேற வேண்டும் என்பதே, கடவுளின் விருப்பம்.

ஆயிரம் ஆண்டுகள் பொறுத்துப் பார்த்து, இவனிடம் முயற்சியே இல்லையே என நினைத்து, இன்னொரு முட்டையை வைத்தார், சிவன். அதிலிருந்து, ஒருவன் வெளிப்பட்டான். இவன் அசகாய சூரனாக இருந்தான்.

'இந்த உலகம் முழுவதும் என்னுடையது. நானே இந்த உலகின், முதல் மனிதன். நானே இதன் அரசன். இதை சொர்க்கபுரி ஆக்குவதே என் முதல் வேலை...' என முழங்கி, சுபராய் என, பெயர் வைத்துக் கொண்டான்.

இந்த சத்தம் கேட்டு முட்டைக்குள் ஒளிந்திருந்த, ஹாங்ராய் வெளியே வந்தான். 'நானல்லவா முதல் மனிதன், நீ எப்படி இதன் ராஜாவாக முடியும்...' என்றான்.

ஒப்புக் கொள்ளவில்லை, சுபராய்.

'பயத்தில் ஒளிந்திருந்த நீ, இந்த உலகத்தின் உரிமையைக் கோர முடியாது. நீ, என் அடிமையாக இரு...' என சொல்லி, அவனை பல விதத்திலும் துன்புறுத்தினான். பல ஆண்டுகள் கழித்து, நோய்வாய்ப் பட்ட ஹாங்ராய், தனக்கு மரணம் நெருங்கியதை உணர்ந்தான்.

ஹாங்ராயை பார்த்து இரக்கப்பட்டு, 'நீ, என் அண்ணன் என்பதைக் கூட உணராமல், உன்னைக் கொடுமைப்படுத்தி விட்டேன். மன்னித்து விடு...' என்றான், சுபராய்; ஹாங்ராயும் மன்னித்தான். இந்த சம்பவம், ஒரு மகர சங்கராந்தி நாளில் நிகழ்ந்தது.

ஹாங்ராய் இறந்ததும், உடலை எரித்து சாம்பலை, புனிதமான ஆறு ஒன்றில் கரைத்தான், சுபராய். இனி, இவ்வுலகில் பிறப்பவர்கள் சகோதர ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என, விரும்பினான்.

இந்நாளில், நதிக்கரைகளில் ஒன்று கூடி, தங்கள் பாசத்தை வெளிப்படுத்துவர், திரிபுரா மக்கள். இதைத் தான், தமிழகத்தில் காணும் பொங்கல் என்ற பெயரில், குடும்ப ஒற்றுமைத் திருநாளாக, நாம் கொண்டாடுகிறோம்.

நம் விழாக்கள் அனைத்தும் நமக்கு நல்லதையே போதிக்கின்றன. அவற்றைப் பின்பற்றி, பொங்கல் திருநாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவோம்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us