PUBLISHED ON : நவ 06, 2022

இந்த காலகட்டத்தில் பிரபலமான நடிகர்களுக்கு இருந்தது போலவே, தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக, ஜெய்சங்கர் ரசிகர் மன்றங்கள் உருவாகத் துவங்கின.
பொதுவாக, ரசிகர் மன்றங்கள் ஒரு நடிகருக்கு பெரும் பலம். தங்கள் அபிமான நடிகரின் படங்களை ஆராதிப்பது, பட வெளியீட்டின்போது, 'பேனர், கட் - அவுட்' வைத்து அசத்துவது, தங்கள் அபிமான நடிகரின் புகழை பரப்புவது, அன்று முதல் இன்று வரை, ரசிகர் மன்றங்களின் பணிகளாக வரையறுக்கப் பட்டிருக்கின்றன.
இதனால், ரசிகர் மன்றங்களை, தன் நேரடி பொறுப்பில் கட்டமைத்தார், ஜெய்.
தன்னை சந்திக்க விரும்பி கடிதம் எழுதும் ரசிகர்களுக்கு, அதற்கான நாள், நேரம் குறித்து பதில் கடிதம் எழுதிய ஒரே நடிகர், ஜெய்சங்கர் தான். சந்திக்க முடியாதவர்களை சம்பந்தப்பட்ட ரசிகர் வசிக்கும் பகுதியில், படப்பிடிப்புக்காக செல்லும் சமயத்தில், கடிதத்தில் இருந்த விலாசம் மூலம், அவர்களை வரவழைத்து பேசிய அனுபவங்களும் அவருக்கு உண்டு.
கடந்த, 1967ல், ஜெய்சங்கரின் திரை வாழ்க்கையில், தமிழ் படங்களின் வளர்ச்சி ஏறவே செய்தது. அந்த ஆண்டில், பெண்ணே நீ வாழ்க, சபாஷ் தம்பி, உயிர் மேல் ஆசை, பட்டணத்தில் பூதம், ராஜாவீட்டு பிள்ளை, காதல் பறவை, முகூர்த்த நாள், பவானி, பொன்னான வாழ்வு, செல்வ மகள், காதலித்தால் போதுமா? மற்றும் நான் யார் தெரியுமா? போன்ற படங்கள் வெளிவந்தன.
முந்தைய ஆண்டை விட, தமிழ் கதாநாயகர்களில் அதிக படங்கள் நடித்த நடிகர் என்ற சாதனையையும் இந்த ஆண்டு படைத்தார்.
'ஸ்டன்ட்' படங்களிலிருந்து சற்று மாறுதலுக்காக, ஜெய்சங்கர், வாணிஸ்ரீ ஆகியோரைக் கொண்டு எடுத்த, காதலித்தால் போதுமா? படமும் குறையின்றி ஓடியது. இதன் பிறகு, ஜெய்சங்கர் நடித்த, நான்கு கில்லாடிகள் படம், 'மாடர்ன் தியேட்டர்ஸ்' வளாகத்திலிருந்து வெளி வந்தது.
சிறையிலிருந்து தப்பும் நான்கு கைதிகள், வங்கியில் கொள்ளையடித்து, அந்தப் பணத்தில், ஒரு திரைப்படம் எடுக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக படம், 100 நாட்கள் ஓடுகிறது. அந்த மகிழ்ச்சியை கொண்டாட முடியாதபடி, அவர்கள் எதிர்பாராத சூழலில் மீண்டும் சிறைக்கு செல்கின்றனர்.
ஜெய்சங்கர், மனோகர், ஆனந்தன், ஓ.ஏ.கே.தேவர், தேங்காய் சீனிவாசன் மற்றும் சி.ஐ.டி.சகுந்தலா ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் கதை, புதுவிதமாக இருந்ததால் வெற்றி பெற்றது.
தேங்காய் சீனிவாசனின் வளர்ச்சியில், ஜெய்சங்கருக்கு நிறைய பங்கு உண்டு. தான் புகழடைந்த காலத்தில், தம் படங்களில் சீனிவாசனுக்கு வாய்ப்பு பெற்றுத் தந்தார்.
சி.ஐ.டி., சங்கர் படம், வழக்கம்போல் வெற்றி முகம் காட்டியது.
தம் நண்பர்களான ஒளிப்பதிவாளர் கர்ணன், இயக்குனர் பி.மாதவன், கல்லுாரி நண்பர் வி.டி.தியாகராஜன், எடிட்டர் தேவராஜன் ஆகியோரை, பெண்ணே நீ வாழ்க படத்தின் மூலம் தயாரிப்பாளர்களாக்கி அழகு பார்த்தார், ஜெய்சங்கர்.
படம் வெற்றி பெற்றபோதும், ஏனோ இந்த கூட்டணி முடிவுக்கு வந்தது. தனித்தனியே பிரிந்து இவர்கள் தயாரித்த முதல் படங்களிலும், கதாநாயகன் ஜெய்சங்கர் தான்.
இதே ஆண்டில், மந்திரஜால கதையான, பட்டணத்தில் பூதம் படம், ஜெய்சங்கரின் புகழை இன்னும் உயர்த்தியது. ஜெய்சங்கரின் முதல் வண்ணப்படமும் இது.
கே.ஆர்.விஜயா, நாகேஷ், கே.பாலாஜி, வி.கே.ராமசாமி, வி.எஸ்.ராகவன், ஆர்.எஸ்.மனோகர், ஜாவர் சீதாராமன், ஜோதிலட்சுமி மற்றும் விஜயலலிதா என, பெரும் நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில், பிராஸ் பாட்டில் என்ற ஆங்கில நகைச்சுவை படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தை, எம்.வி.ராமன் இயக்கினார்.
விசேஷமான முறையில் எடுக்கப்பட்ட, 'ட்ரிக்' சண்டைக் காட்சிகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் ரசிக்கப்பட்டன. ஏப்., 14, 1967ல் வெளியிடப்பட்டு வெற்றிபெற்ற இந்த படம், ஜெய்சங்கரின் திரை வாழ்க்கையை வேறொரு கட்டத்திற்கு நகர்த்தியது என்றால் மிகையல்ல.
சிவாஜி ரசிகர் மன்றத்தில், முக்கிய பொறுப்பில் இருந்தவர், சின்ன அண்ணாமலை. ஜெய்சங்கர், நாடக நடிகராக இருந்த காலத்திலிருந்தே அவருக்கு தெரியும். இன்னொரு பிரபல நடிகரின் கூடாரத்தில் இருந்தாலும், ஜெய்சங்கரை கொண்டு ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்பது, அவரது நீண்டநாள் ஆசை. நான் யார் தெரியுமா? படம், அந்த ஆசையை பூர்த்தி செய்தது.
ஜெய்சங்கரால், கூத்தபிரானுக்கு நேர்ந்த தர்மசங்கடம்...
- தொடரும்
- இனியன் கிருபாகரன்