PUBLISHED ON : மார் 26, 2017

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, தீ விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அச்சமயங்களில், என்னென்ன முன்னெச்சரிக்கைகளை, மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்வோமா...
* உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி விட வேண்டும்.
* தரமான, மடிக்கக்கூடிய ஏணிகளை தயாராக வைத்திருப்பது நல்லது.
* ஜன்னல் கதவுகளை உடனடியாக திறந்து வையுங்கள்.
* திரைச்சீலைகள் சட்டென்று கழற்றப்பட கூடியதாக இருக்கட்டும்.
* உங்கள் வீட்டில், இருட்டில் ஓரிரு முறை நடந்து பழகுங்கள். அதாவது, எந்தெந்த வழிகளில், நீங்கள் வெளியேற வேண்டியிருக்கும் என்பது, இருட்டிலும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
* வீட்டில் உள்ள மின் இணைப்புகளுக்கு, தரமான ஒயர்களை பயன்படுத்துவது அவசியம்.
* உள்ளூர் தீயணைப்பு நிலையம் எங்குள்ளது என்பதையும், அதன் தொலைபேசி எண்ணையும் தெரிந்து கொள்ளுங்கள்.
* வீட்டிலோ, அருகிலோ தீயணைப்பு கருவி இருந்தால், அதை எப்படி கையாள வேண்டும் என்பதை, முன்னதாகவே தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
* தீப்பற்றி எரியும் போது, தவழ்ந்தபடியே வெளியேறுங்கள். ஏனெனில், அடர்ந்த புகையும், நச்சுக்காற்றும், மேற்புறம் தான் அதிகமிருக்கும்.
* வெளியேறும் இடத்தில் புகை சூழ்ந்திருந்தால், மற்றொரு வழி இருந்தால், அவ்வழியே வெளியேறுங்கள்.
* முகத்தை, ஈரமான துணியால் மூடியபடி வெளியேறவும்.
* தீப்பிடித்த வீட்டிலிருந்து வெளியேற, கனமான பெட்ஷீட்டை, உடல் முழுவதும் சுற்றியபடி வெளியேறவும்.
* உங்கள் துணியில், தீப்பற்றி விட்டால், உங்கள் முகத்தை, கைகளால் மூடியபடி, கீழே படுத்து, இப்படியும், அப்படியும் உருளுங்கள்.
* வேறு யாருடைய உடையிலாவது தீப்பற்றிக் கொண்டால், அவர் மீது, தண்ணீரை ஊற்றுங்கள்.
* வெளியேறும் போது, கதவை திறப்பதற்கு முன், கைப்பிடியை தொட்டுப் பாருங்கள்; அது சூடாக இருந்தால், கனமான துணியால் பிடித்து, திறக்கவும்.
* தீப்பிடித்த சமயத்தில், நீங்கள் வெளியேறும் முயற்சியில், எந்த கதவை திறப்பதாக இருந்தாலும் முதலில், சிறிதளவு திறந்து பாருங்கள். மறுபுறம் தீயோ, அடர்ந்த புகையோ தெரிந்தால், சட்டென்று மூடிவிடவும்.
* எல்லாவற்றுக்கும் மேலாக பதற்றப்படாமல் அங்கிருந்து தப்பிப்பதற்கான வழிமுறையை மட்டுமே சிந்தித்து, செயல்பட வேண்டும்.
* வீட்டில் எப்போதும் ஒரு டிரம் நிறைய தண்ணீர் இருக்கட்டும்.
* தீ விபத்து ஏற்பட்டவுடன், உங்கள் வீட்டிலுள்ள காஸ் சிலிண்டர் கனெக் ஷனை எடுத்து விடுங்கள்; முடிந்தால் சிலிண்டரை வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து விடவும்.
* மின்சார பியூஸ் கேரியரை கழட்டி விடுங்கள்.
* டிவி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின் சாதனங்களின் பிளக்கை உடனடியாக கழட்டி விடுங்கள்.
* உடைந்து போன மரச்சாமான்கள், மெத்தை, நாளிதழ்கள் மற்றும் புத்தகங்கள் போன்ற வேண்டாத குப்பைகளை அவ்வப்போது ஒழித்துக் கட்டுங்கள். வருமுன் காப்பது நல்லது!
ஜி.எஸ்.எஸ்.,
