PUBLISHED ON : ஆக 17, 2014

கேரளா மாநிலம், திரிச்சூர் புன்னயூரில் வசிப்பவர், கய்யா டீச்சர் என்ற, 101 வயது மூதாட்டி. இவர், இஸ்லாமிய பெண்கள் சமுதாயத்திற்கே பெருமை சேர்த்தவர். இஸ்லாமிய பெண்கள் பள்ளி செல்ல அனுமதிக்காத காலகட்டத்தில், சமுதாயத்தினரின் எதிர்ப்பையும் மீறி, பள்ளி சென்று படித்து, உத்தியோகம் பார்த்தவர் இவர்.
சிறுமி கய்யாவுக்கு படிப்பு மீது இருந்த ஆர்வம் கண்டு, அவருடைய தந்தை மகளை படிக்க வைத்தார். 15 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிக்கு நடந்து சென்று படித்து வந்தார் கய்யா. மேல்நிலைப் படிப்பின் போது, விடுதியில் தங்கி படித்தவர், படித்து முடித்ததும் தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியை ஆனார். மாத சம்பளம், 25 ரூபாய்; அன்று ஒரு மூட்டை அரிசி விலை, ஐந்து ரூபாய். கய்யா டீச்சர் ஓய்வு பெற்ற போது, 150 ரூபாயை பென்ஷனாக பெற்றார். அந்த பென்ஷன் இன்று, எட்டாயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. நூறு வயதை தாண்டியும், நல்ல நினைவாற்றலுடன், பேரக்குழந்தைகளுடன், மகிழ்ச்சியாக இருக்கிறார் இந்த முதல் இஸ்லாமிய டீச்சர்.
— ஜோல்னாபையன்.
