PUBLISHED ON : ஜூன் 03, 2012

இந்தி படத்தில் சச்சின் டெண்டுல்கர்!
இந்தியில் உருவாகும், 'பெராலி கீ சவாரி' என்ற படம், பெரிய கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்று கனவு காணும் ஒரு சிறுவனை பற்றிய கதையில் உருவாகிறது. இப்படத்தில், ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். ஐ.பி.எல்., போட்டிகள் முடிந்ததும், இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் சச்சின்.
— சினிமா பொன்னையா.
மூன்று மொழிகளில் அமலா பால் படம்!
தமிழில் பட வாய்ப்பு இல்லாத அமலாபால், தெலுங்கு, மலையாளம் என்று இடம் பெயர்ந்து விட்டார். தற்போது மலையாளத்தில் மோகன்லாலுடன், 'ரன் பை ரன்' என்ற படத்தில் அமலா தான் நாயகி. அவருக்கு தமிழ், மற்றும் தெலுங்கிலும் இருக்கிற ரசிகர்களை மனதில் கொண்டு, இப்படத்தை மூன்று மொழிகளில் வெளியிட உள்ளனர். இதனால், மோகன்லாலுக்கு இணையாக, அமலா பால் வேடத்துக்கும், கதையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். காரணம் இன்றி காரியம் இல்லை!
— எலீசா.
நிர்வாணமாக நடித்த ஷாம்!
'ஆரண்ய காண்டம்' படத்தில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் நிர்வாணமாக நடித்ததைத் தொடர்ந்து, '6' என்ற தெலுங்கு படத்தில், நிர்வாணமாக நடித்துள்ளார் ஷாம். கதைக்கு அவசியப்பட்டதால், அதுமாதிரி நடித்தேன் என்று சொல்லும் ஷாம், 'இப்போதெல்லாம் இமேஜை பற்றி, நான் கவலைப்படுவதில்லை...' என்கிறார்.
— சி. பொ.,
ரகுவரன் பெயரில் விருது!
மறைந்த நடிகர் ரகுவரனின் பெயரில், அவர் மனைவி ரோகிணி, சிறந்த சினிமா நடிகர் - நடிகையருக்கு விருது வழங்க திட்ட மிட்டுள்ளார். ரகுவரனின் பிறந்த நாளான டிசம்பர் 11ம் தேதி, ஆண்டுதோறும் இந்த விருது நிகழ்ச்சியை நடத்தப் போவதாக சொல்லும் ரோகிணி, 'என் கணவர் ஒரு சிறந்த நடிகர். அவரது இடம், தமிழ் சினிமாவில் இன்னும் காலியாகவே உள்ளது...' என்கிறார்.
— சி. பொ.,
கட்டிப் பிடித்து நடிப்பது போர்!
பரத்துடன், 'யுவன் யுவதி' படத்தில், நடித்த ரீமா கல்லிங்கல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்கும் எண்ணம் உள்ளதாக கூறுகிறார். மேலும், ஹீரோக்களை கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது எல்லாம் ரொம்பவே அலுப்பூட்டும் விஷயங்கள் என்கிறார். 'தமிழ் சினிமாவில், என்னை இந்த மாதிரியான கதையம்சம் கொண்ட படங்களாக நடிக்க சொன்னதால் தான், தேடி வந்த பல படங்களை தவிர்த்து, மலையாளத்தில் மட்டுமே நடித்து வருகிறேன்...' என்கிறார். கூத்துக்குப் புகுந்தவள் கொட்டுக்கு அஞ்சித் தீருமா?
— எலீசா.
காஜல் அகர்வால் வைத்த விருந்து!
தன் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே, தங்கை நிஷா அகர்வாலையும், பரபரப்பு நடிகையாக்கி விட வேண்டும் என்று நினைக்கிறார் காஜல் அகர்வால். அதனால், தற்போது விமலு<டன், 'இஷ்டம்' படத்தில் நடித்துள்ள தங்கைக்கு, மேலும் படங்களை கைப்பற்றும் முயற்சியாக, சில மேல்தட்டு ஹீரோக்களிடம் சிபாரிசு கோரிவரும் காஜல், சமீபத்தில் கோடம்பாக்க நடிகர்கள் சிலருக்கு விருந்து உபசரிப்பும் நடத்தியுள்ளார். காரியம் ஆகு மட்டும் கழுதை காலை பிடி; பின்னே கழுத்தைப் பிடி!
— எலீசா.
விஸ்வரூபம் பார்ட் - 2!
விஸ்வரூபம் படப்பிடிப்பு நடந்தபோதே, அப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பல காட்சிகளை படமாக்கி விட்டதாக சொல்கிறார் கமல். மேலும், 'அடுத்த பாகத்துக்கான, 20 சதவீதம் ரிஸ்க்கான காட்சிகளை இப்போதே படமாக்கி விட்டதால், இரண்டம் பாகத்தை சீக்கிரமே முடித்து விடுவேன்...' என்று சொல்லும் கமல், முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்தையும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிக்கும், தனித்தனியே காட்சிகளை படமாக்குவதாகவும் கூறுகிறார்.
— சினிமா பொன்னையா.
அவ்ளோதான்!
