PUBLISHED ON : அக் 28, 2012

தம்பி ராமைய்யா இயக்கும் காமெடி படம்!
வடிவேலு நடித்த, 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தை இயக்கிய நடிகர் தம்பி ராமைய்யா, அதன் பிறகு இயக்கிய, 'ஒரு கூடை முத்தம்' என்ற படம் கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில், மீண்டும் அவர் ஒரு காமெடி படம் இயக்கும் யோசனையில் உள்ளார். இதற்காக, சில முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி வருகிறார்.
— சி.பொ.,
'சாரி டீச்சர்' படத்துக்கு எதிர்ப்பு!
'சாரி டீச்சர்' என்ற படம், ஒரு ஆசிரியை - மாணவனை மையப்படுத்திய காதல் கதையில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்களில், ஒரு ஆசிரியை கவர்ச்சியை வெளிப்படுத்தியபடி, 'போஸ்' கொடுத்திருப்பதை கண்டித்து, பள்ளி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அடுத்து, பெரிய போராட்டம் வெடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
— சினிமா பொன்னையா
டைரக்டர் பார்வதி!
'மரியான்' படத்தில், தனுஷுடன் நடித்து வரும் நடிகை பார்வதிக்கு, படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருப்பதால், ஸ்பாட்டில் ஓடியாடி வேலை செய்கிறார். தான் இயக்கப் போவது, மலையாள படமாக இருந்தாலும், அதில், சில முக்கிய தமிழ் நடிகர்களையும் நடிக்க வைத்து, தமிழிலும் அப்படத்தை, 'டப்' செய்ய திட்டமிட்டுள்ளார். ஆசை பெருக, அலைச்சலும் பெருகும்!
— எலீசா
நமீதாவின் ஜோதிட நம்பிக்கை!
தன் மார்க்கெட் திடுதிப்பென்று கவுந்து விட்டபோதும், சினிமா உலகை விட்டு வெளியேறுவதாக இல்லை நமீதா. 'அடுத்த ஆண்டு எனக்கு பிரகாசமாக இருக்கும் என்று, குடும்ப ஜோதிடர் சொல்லியிருக்கிறார். அதுவரைக்கும் சினிமா விழா, கடை திறப்பு விழா என, கோலிவுட்டில் இருந்தபடியே காலம் தள்ளுவேன்...' என்கிறார். அதை விட்டாலும் கதி இல்லை; அப்புறம் போனாலும் விதி இல்லை!
— எலீசா
தமிழுக்கு வர மறுத்த பிருத்விராஜ்!
'உருமி' படத்தை அடுத்து, மலையாளத்தில் பிருத்விராஜின் மார்க்கெட் எகிறி நிற்கிறது. அதனால், சில தமிழ்ப்பட இயக்குனர்கள் அழைப்பு விடுத்தபோதும், மறுத்து விட்டார். ஆனால், தமிழ் ரசிகர்கள், தன்னை மறக்காமல் இருக்க, அவ்வப்போது தான் நடிக்கும் மலையாள படங்களை தமிழில், 'டப்' செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.
— சி.பொ.,
தன்ஷிகாவுக்கு கிடைத்த ஏமாற்றம்!
'பரதேசி' படத்தை, நான் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. காரணம், 'அரவான்' படத்தை எந்த அளவுக்கு எதிர் பார்த்தேனோ, அதைவிட பெருத்த ஏமாற்றம் கிடைத்தது. அதனால், இப்போது நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு குறைந்து விட்டது...' என்று சொல்லும் தன்ஷிகா, இனி, ஹீரோயினி மட்டுமின்றி மாறுபட்ட கேரக்டர்களிலும் நடிக்கப் போவதாக கூறுகிறார். அதைத்தான் சொல்வானேன்; வாய் தான் நோவானேன்?
— எலீசா
ஜெயம்ரவி எடுத்த முடிவு!
'இனிமேல் முழு காதல் கதைகளில் நடிக்க மாட்டேன்...' என்று சொல்லும் ஜெயம்ரவி, ஆக்ஷனையும் அதிகமாக புகுத்த சொல்கிறார். அது மட்டுமின்றி, ரசிகர்களின் ரசனையும் மாறி வருவதால், ஒரே மாதிரியாக இல்லாமல், மாறுபட்ட கெட்டப்புகளில் தன்னை வெளிப்படுத்தும் கதைகளுக்கே, முக்கியத்துவம் கொடுக்கப் போவதாக கூறுகிறார்.
— சி.பொ.,
அரசியலில் மனீஷா கொய்ராலா!
கணவரை விவாகரத்து செய்து, மீண்டும் நடிக்கத் துவங்கியிருக்கும் மனீஷா கொய்ராலா, அரசியல் களத்திலும் குதித்துள்ளார். இன்னும் எந்த கட்சியிலும் தன்னை இணைத்துக் கொள்ளாத போதும், தான் பிறந்து வளர்ந்த ஊரான நேபாளத்தில் உள்ள காட்மண்டுவில் முதன் முதலாக தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.
— சினிமா பொன்னையா
அவ்ளோதான்!
