PUBLISHED ON : பிப் 10, 2013

தூக்கு தண்டனையில் ஜீவா- ஜெயம் ரவி!
ஜீவா நடித்த, ஈ, ஜெயம் ரவி நடித்த பேராண்மை படங்களை இயக்கிய ஜனநாதன், இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் உள்ளார். இவர்களின் கால்ஷீட்டுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த அவர், ஒரு வழியாக கால்ஷீட்டை கைப்பற்றி, மார்ச் மாதத்தில் படப்பிடிப்பை துவங்குவதாக அறிவித்திருப்பதோடு, அப்படத்துக்கு, தூக்கு தண்டனை என்று பெயர் சூட்டி, கோலிவுட்டாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
— சினிமா பொன்னையா
சமந்தாவுக்கு தள்ளு முள்ளு!
நீதானே என் பொன் வசந்தம் படத்திற்கு பின், சமந்தா நடித்த, சீதம்மா வாகிட்லோ சிரிமலே செட்டு என்ற தெலுங்கு படமும், 'ஹிட்' படமாக அமைந்து விட்டது. அதனால், சமந்தாவை படங்களுக்கு, 'புக்' பண்ண, ஆந்திர படாதிபதிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதில் சிலர், தேவையான சம்பளத்தை விருப்பம் போல் பூர்த்தி செய்து கொள்ளுமாறு பிளாங்க் செக்கை சமந்தாவிடம் நீட்டுகின்றனர். அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது!
— எலீசா
நாகேஷ் பெயரில் ஒரு படம்!
மறைந்த காமெடி நடிகர் நாகேஷ், காதலிக்க நேரமில்லை படத்தில், 'ஓஹோ பிக்சர்ஸ்' என்ற பட நிறுவனத்தை துவங்கி, நகைச்சுவை செய்திருப்பார். இப்போது அதே பெயரில் ஒரு பட நிறுவனம் துவங்கி, நாகேஷ் என்ற பெயரிலேயே ஒரு படத்தை தயாரிக்கின்றனர். இதில் நாகேஷ் கதாபாத்திரத்தில் விதார்த் நடிக்கிறார். படம் முழுக்க கலகலப்பூட்ட, விதார்த்துடன் எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, தம்பி ராமைய்யா இணைந்த ஒரு காமெடி பட்டாளமும் நடிக்கிறது.
— சி.பொ.,
புதுமுகங்களுடன் நடிக்க மறுக்கும் பிந்து மாதவி!
அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் பிந்து மாதவியை, புதுமுக ஹீரோக்களுடன் நடிக்க வைக்கவும் சிலர் முயற்சி எடுத்தனர். 'இப்போது விமல், வினய் என்று இரண்டாம் தட்டு ஹீரோக்களுடன் நடிக்கும் நான், அடுத்து விஜய், சூர்யா என்று நடிக்கும் ஆசையில் இருக்கிறேன். அதனால், என்னை பின்னோக்கி இழுக்காதீர்கள்...' என்று சொல்லி அந்த பட வாய்ப்புகளை திருப்பி அனுப்பி விட்டார். நிற்க ஜீவன் இல்லாமல் போனாலும் பேர் நிரப்பக் கட்சி போல!
— எலீசா
சிட்டி இமேஜுக்கு மாறும் விமல்!
இஷ்டம் படத்தில் நடித்தது போலவே, ஜில்லுன்னு ஒரு சந்திப்பு படத்திலும், சிட்டி கெட்டப்பில் நடித்துள்ளார் விமல். அதுமட்டுமின்றி, ஸ்கூல் பையனாட்டம் டிரஸ் அணிந்து, ஓவியாவை, 'சைட்' அடிக்கும் காட்சிகளும் உள்ளதாம். அதனால், 'இப்படத்துக்கு பின், என் மீது படிந்துள்ள வில்லேஜ் நடிகன் என்ற இமேஜ், படிப்படியாக மறைந்து, நகர கதைகளுக்கும் ஏற்ற நடிகராகி விடுவேன்...' என்று சொல்லும் விமல், 'இனி வருங்காலங்களில், என் படங்களின் பாடல் காட்சிகளுக்கும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என்று, அயல்நாடுகளுக்கு சென்று படமாக்கும் நிலை உருவாகும்...' என்கிறார்.
— சி.பொ.,
பிருதிவிராஜ் மீது புகார்!
ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் பிருதிவிராஜ் நடித்து வந்த மலையாள படம், ரகுபதி ராகவ ராஜாராம். இப்படத்தில் அவர் நடித்து வந்த நேரத்தில், இப்படத்தை போன்ற கதையில், இன்னொரு படம் வளர்ந்து வருவதை கேள்விப்பட்ட பிருதிவிராஜ், தொடர்ந்து அப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார். இந்த பிரச்னை காரணமாக, பிருதிவிராஜ் மீது மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளனர்.
— சினிமா பொன்னையா
விஜய் - அஜீத் மீண்டும் இணைவரா?
ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் விஜய், அஜீத் இருவரும் இணைந்து நடித்தனர். விஜய் ஹீரோவாகவும், அஜீத் செகண்ட் ஹீரோவாகவும் நடித்த அப்படத்திற்கு பிறகு அவர்கள் இணைந்து நடிக்கவில்லை. இப்போது அவர்கள் இருவருமே அரை சதம் அடித்து விட்ட நிலையில், அவர்களை மீண்டும் இணைக்க முயற்சிகள் நடக்கிறது. ஆனால், அதற்கு விஜய் தரப்பு நல்ல கதை அமைந்தால் பார்க்கலாம் என்று சம்மதம் சொல்லி விட்டபோதும், 'தல' அஜீத் மவுனம் சாதித்து வருகிறார்.
— சி.பொ.,
அமலா பாலை புலம்ப விட்ட இயக்குனர்!
விஜய் நடிக்கும், தலைவா படத்தின் கதாநாயகி ஆனதும் உற்சாகத்தில் எகிறி குதித்துக் கொண்டிருந்தார் அமலா பால். ஆனால், இப்போது படத்தில் ஒரு இந்தி நடிகையை இணைக்கப் போவதாக முடிவெடுத்துள்ள இயக்குனர் விஜய், அவருக்கும் முக்கிய வேடம் கொடுக்கப் போவதாகவும் கூறுகிறார். இந்த சேதி கேட்டு கடும் குழப்பத்தில் இருக்கும் அமலா பால், 'இந்தி நடிகைக்கு முக்கிய வேடம் என்றால், நான் டம்மி ஹீரோயினியா...' என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். நல்லதுக்கு ஒரு பொல்லாதது; பொல்லாததுக்கு ஒரு நல்லது!
— எலீசா
* ஹாலிவுட், பாலிவுட் என்று அடிக்கடி பறந்து கொண்டிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு திருமண விழாவில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். சென்னையிலுள்ள புகழ் பெற்ற செவன் ஸ்டார் ஓட்டலில் நடந்த இந்த விழாவில் தமிழ், இந்தி பாடல்களை மட்டுமே இசைத்திருக்கிறார் ரஹ்மான்.
அவ்ளோதான்!
