PUBLISHED ON : பிப் 17, 2013

மீண்டும் நடிக்கும் பிரபுதேவா!
தமிழில், போக்கிரி படம் மூலம் இயக்குனரான பிரபுதேவா, இந்திக்கு சென்று சல்மான்கான், அக்ஷய்குமார் போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்கி, பாலிவுட்டின் முன்னனி இயக்குனராகி விட்டார். இந்நிலையில், பிரபல நடன மாஸ்டர் ரெமோ டிசோசோ என்பவர் இயக்கத்தில், ஏபிசிடி என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். நடனத்தை உயிராக மதிக்கும் ஒரு இளைஞனைப் பற்றிய கதையில் உருவாகியுள்ள இப்படம், ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
— சினிமா பொன்னையா
அசின் இடத்தை கைப்பற்றும் காஜல்!
துப்பாக்கி படத்தையடுத்து, மீண்டும் விஜயுடன், ஜில்லா படத்தில் ஜோடி சேருகிறார் காஜல் அகர்வால். ஏற்கனவே, கார்த்தியுடன், ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்திலும் கமிட்டாகியுள்ள அவருக்கு, தற்போது தமிழ் சினிமா மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதனால், இன்னும் கோலிவுட்டில் காலியாகவே இருக்கும் அசினின் இடத்தை கைப்பற்றி, நம்பர் ஒன் நாற்காலியில் உட்காரப்போவதாக கூறி வருகிறார் காஜல் அகர்வால். நினைப்பு பிழைப்பை கெடுத்தது!
— எலீசா
வெளிநாடு செல்லும் பிரபு சாலமன்!
மைனா, கும்கி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபு சாலமன், தான் இயக்கும் புதிய படத்தில், கடல் படத்தில் நடித்த கவுதமை நாயகனாக்க உள்ளார். அதோடு, இதுவரை தான் இயக்கிய படங்களை, வெளிநாடுகளுக்கு சென்று படமாக்காத அவர், அடுத்து இயக்கும் படத்தை, முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படமாக்க திட்டமிட்டுள்ளார்.
— சி.பொ.,
6 படத்தை நம்பியிருக்கும் ஷாம்!
சினிமாவில் என் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் படம் 6 என்கிறார் ஷாம். சந்தோஷமாக வாழும் ஒருவனின் வாழ்க்கையில் திடீரென புயல் தாக்கி அவனை என்னென்ன செய்கிறது என்பதே இப்படத்தின் கதை என்று சொல்லும் ஷாம், 6 ஆண்டு, 6 மாதம், 6 வாரம், 6 மணி நேர கால கட்டத்தில் நடிக்கும் இந்த கதை, 6 மாநிலங்களுக்கும் செல்கிறது என்கிறார்.
— சி.பொ.,
டைரக்டர்களை துரத்தும் சிபி ராஜ்!
தற்போது படமே இல்லாமல் இருக்கும் சிபி ராஜ்க்கு, மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கியுள்ளது. அதனால், ஏற்கனவே தன்னை வைத்து, லீ படத்தை இயக்கிய பிரபு சாலமன் உள்ளிட்ட,'ஹிட்' படங்களை கொடுத்து வரும் சில இயக்குனர்களை சந்தித்து, தன்னை வைத்து படம் இயக்குமாறு கேட்டு வருகிறார். அதோடு, தயாரிப்பு செலவுகளை தானே ஏற்றுக் கொள்வதாகவும் உத்தரவாதம் கொடுத்து வருகிறார் சிபி ராஜ்.
— சி.பொ.,
சொந்த வீடு வாங்கிய சூரி!
வெண்ணிலா கபடிக் குழு படத்தில் அறிமுகமான புரோட்டா சூரி, குறுகிய காலத்தில், 25 படங்களை தாண்டி நடித்து விட்டார். மேலும், தன் முதல் படத்தை, என்றென்றும் மறவாமல் இருப்பதற்காக, தன் மகளுக்கு வெண்ணிலா என்று பெயரிட்டுள்ள சூரி, சமீபத்தில் சென்னையிலுள்ள சாலிகிராமம் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி குடியேறியுள்ளார்.
— சி.பொ.,
படிப்புக்கு குட்பை சொல்லும் லட்சுமி மேனன்!
சுந்தர பாண்டியன், கும்கி படங்களில் நடித்த லட்சுமி மேனனின் கைவசம், குட்டிப்புலி, மஞ்சப்பை ஆகிய படங்கள் உள்ளன. இதையடுத்தும் சிலர் கதை சொல்லி வருகின்றனர். அதனால், தமிழ் சினிமாவில் தனக்கு நிலையான இடம் கிடைத்துவிடும் என்று நினைக்கிறார் லட்சுமி மேனன். தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். வருகிற மார்ச் மாதம் தேர்வெழுதி முடித்ததும் படிப்புக்கு, 'குட்பை' சொல்லிவிட்டு, முழு வீச்சில் சினிமாவில் இறங்கப் போவதாக கூறுகிறார். நாடிய பொருள் கைக்கூடும்!
— எலீசா
இலியானாவுக்கு போட்டியாக தீபிகா படுகோனே!
ஜெயம்ரவி நடித்த, தில்லாலங்கடி படம், இந்தியில் ரீ-மேக் ஆகிறது. சல்மான்கான் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், தமன்னா நடித்த ரோலில் நடிக்க, இலியானாவை ஒப்பந்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென்று சல்மானின் சிபாரிசுடன் இடையில் புகுந்து, 'நான் தான் சல்மானுடன் டூயட் பாடுவேன்...' என்று குட்டையை குழப்பி விட்டார் தீபிகா படுகோனே. இதனால், அப்படத்தின் நாயகி யாரென்பது இன்னமும் குழுப்பத்திலேயே இருக்கிறது. இருப்பினும், முயற்சியை தொடர்கிறார் இலியானா.
— சினிமா பொன்னையா
அவ்ளோதான்!
