
கூட்டணி அமைத்த 'வி' நடிகர்கள்!
நடிகர்கள் விமல், விதார்த், விஜயசேதுபதி ஆகிய மூன்று பேருமே கூத்துப்பட்டறையில் இருந்து வந்தவர்கள். அதனால், இப்போதும் நண்பர்களாக இருக்கும் அவர்களுக்கு, மூன்று பேரும் சேர்ந்து, ஒரே படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தங்கள் மூன்று பேர் பெயர்களின் முதல் எழுத்தான, 'வி'யை, பேனராக்கி, ஒரு பட நிறுவனம் துவங்குகின்றனர். அவர்கள் மூன்று பேர் சம்பந்தப்பட்ட படங்கள் மட்டுமே, அந்த பேனரில் தயாராகும்.
— சினிமா பொன்னையா
நழுவிய நிஷா அகர்வால்!
விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வரும், ஜில்லா படத்தில், விஜய்யின் தம்பி வேடத்தில், மகத் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க, காஜலின் தங்கையான நிஷா அகர்வாலை கேட்டனர். ஆனால், அவரோ, 'என் அக்காவை, போல் நானும், பெரிய ஹீரோயினியாக வர திட்டமிட்டுள்ளேன். அதனால், துக்கடா வேடத்தில் நடிப்பது, என் வளர்ச்சியை பாதிக்கும்...' என்று நாசூக்காக சொல்லி நழுவிக் கொண்டார். வந்த காரியத்தை கவனிக்காமல் பந்தக்காலைக் கட்டிக் கொண்டு நின்றாளாம்!
— எலீசா
நீர்யானை குட்டிக்கு த்ரிஷா பெயர்!
வண்டலூர் உயிரியல் பூங்காவில், சமீபத்தில் நீர்யானை ஒன்று, குட்டி ஈன்றுள்ளது. அந்த குட்டி யானைக்கு, விலங்குகள் மீது அதிக பாசம் கொண்ட நடிகை த்ரிஷாவின் பெயரை, சூட்டியுள்ளனர். இதை அறிந்து சந்தோஷமடைந்த த்ரிஷா, அந்த யானையை நேரில் சென்று பார்த்து, அதனுடன் நின்று, புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த குட்டியை பராமரிக்கும் செலவையும் ஏற்றுக் கொண்டிருந்தால், இன்னும் சந்தோஷமாக இருந்திருக்குமே என்கின்றனர். பெருமை சொன்னால் கறவைக்கு புல் ஆகுமா?
— எலீசா
விஜய் படத்தில் மோகன்லால்!
இருவர், சிறைச்சாலை மற்றும் உன்னைப்போல் ஒருவன் உட்பட, பல தமிழ்ப் படங்களில் நடித்தவர், மலையாள நடிகர் மோகன்லால். இவர் தற்போது, விஜய் நடிக்கும், ஜில்லா படத்தில் நடிக்கிறார். அப்பா - மகனுக்கிடையே நடக்கும் இந்த பாசப் போராட்ட கதையில், விஜய்யின் அப்பாவாக நடிக்கிறார் மோகன்லால். அதனால், கதையில் விஜய்க்கு இணையாக மோகன்லாலுவின் கேரக்டருக்கும், முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
— சி.பொ.,
ஷாருக்கான் மகளும் நடிகையாகிறார்!
கமலின் மகள் ஸ்ருதிஹாசன், அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்க வந்ததை அடுத்து, தன் மகள் சுஹானாவையும் நடிகையாக்க முடிவு செய்துள்ளார், இந்தி நடிகர் ஷாருக்கான். 'தற்போது, 19 வயதாகும் என் மகளுக்கு, நடிப்பு ஆர்வம் மிகுதி; அதனால், அவள் சிறந்த நடிகையாக வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது...' என்று, நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஷாருக். இதையடுத்து, சுஹானாவை நடிக்க வைக்க, சில இந்திப் பட நிறுவனங்களும், ஷாருக்கானிடம் பேசி வருகின்றன.
— சி.பொ.,
சனாகானுக்கு சல்மான்கான் சிபாரிசு!
சிலம்பாட்டம் படத்தில் நடித்த சனாகான், அதன் பின், ஆயிரம் விளக்கு மற்றும் பயணம் போன்ற படங்களில் நடித்தார். அவரது நடிப்பு பேசப்பட்ட அளவுக்கு, புதிய படங்கள் கமிட்டாகவில்லை. அதனால், பாலிவுட்டில் அதிரடி முயற்சியை முடுக்கி விட்ட சனாகானுக்கு, அங்குள்ள முன்னணி நடிகரான சல்மான்கானே, தான் நடிக்கும், மெண்டல் என்ற படத்தில் நடிக்க சிபாரிசு செய்துள்ளார். இதனால், உற்சாகத்தின் உச்சத்தில் பறந்து கொண்டிருக்கும் நடிகை, 'இனி நான் முழு நேர இந்தி நடிகை...' என்று முழங்கிக் கொண்டிருக்கிறார். அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது.
— எலீசா
மீண்டும் வருகிறார் ஆர்.சுந்தர்ராஜன்!
ஒரு காலத்தில் வெள்ளி விழா இயக்குனராக இருந்த ஆர்.சுந்தர்ராஜன், பிரபு நடித்த, சீதனம் படத்திற்கு பின், முழுநேர நடிகராகி விட்டார். பத்தாண்டு இடைவெளிக்கு பின், இப்போது, தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா முக்கிய வேடத்தில் நடிக்கும், நிலாச்சோறு என்ற படத்தை இயக்குகிறார். அதோடு, 'இப்படத்திற்கு பின் மீண்டும் வெள்ளி விழா இயக்குனர் என்ற புகழை பெறுவேன்...' என்றும் கூறுகிறார்.
—சி.பொ.,
வித்யாபாலனுக்கு அதிர்ச்சி!
சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையில் உருவான, த தர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த வித்யாபாலன், அடுத்து கர்நாடக இசைப்பாடகி, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை கதையில் உருவாகியிருந்த படத்திலும் நடிக்க ஆர்வமாக இருந்தார். ஆனால், ராஜீவ் மேனன் இயக்க இருந்த, அந்த கதையின் உரிமையை ஏற்கனவே தாங்கள் வாங்கி விட்டதாக, ஒரு பட நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, தடை வாங்கி விட்டது. இதனால், ராஜீவ் மேனனை விட, அதிக அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார் வித்யாபாலன்.
— சினிமா பொன்னையா

