PUBLISHED ON : அக் 06, 2013

'அதிருப்தி தேவையில்லை!'
விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் தற்போது, கமல் இயக்கி, நடித்துள்ள அதன் இரண்டாம் பாகத்துக்கும், ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சில முஸ்லிம் அமைப்புகள், இப்போதே, சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து, கொடி பிடிக்கத் துவங்கியுள்ளன. ஆனால், இதுபற்றி கமல் கூறுகையில், 'விஸ்வரூபம் படத்தை விட, இப்படம், கதை மற்றும் டெக்னிகல் ரீதியாக, பிரமாண்டமாக இருக்கும். மேலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் கதையையும், கதாபாத்திரங்களையும் சித்தரித்துள்ளேன். அதனால், யாரும் அதிருப்தி அடைய தேவையில்லை...' என்று கூறியுள்ளார்.
—சினிமா பொன்னையா
மணப்பெண் தேடும் ஆர்யா!
தன் சக தோழன், பரத் திருமணம் செய்து கொண்டதை அடுத்து, ஆர்யாவும் அடுத்த ஆண்டில், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இது குறித்து, ஆர்யா சொன்னதும், தடபுடலாக பெண் தேடும் படலத்தை துவக்கியுள்ளனர், அவரது பெற்றோர். குறிப்பாக, நயன்தாராவுடன், ஆர்யா இணைத்து பேசப்பட்டு வருவதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க, திருமணம் தான் சரியானது என்று, தீவிரம் காட்டுகின்றனர். அதனால், இத்தனை நாளும், தன் படங்களில் நடிக்கும் ஹீரோயினிகளின் போட்டோக்களைப் பார்த்து, செலக்ட் செய்து வந்த ஆர்யா, இப்போது, பெற்றோர் கொண்டு வந்து குவிக்கும், மணப்பெண் போட்டோக்களை, துருவி துருவி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
— சி. பொ.,
விட்டுக் கொடுத்த ஆண்ட்ரியா!
கமலுடன், விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்துள்ள ஆண்ட்ரியா, அடுத்து முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், கற்றது தமிழ் மற்றும் தங்க மீன்கள் படத்தை இயக்கிய ராம், தரமணி என்ற பெயரில் சொன்ன கதை பிடித்துவிடவே, புதுமுக ஹீரோவுடன் நடித்துவருகிறார். இது குறித்து, அவர் கூறுகையில்,'தரமணி படத்தில், என்னைச் சுற்றிதான் கதை. அதுவும், சவாலான கேரக்டர். அதனால் தான், ஹீரோவை மனதில் கொள்ளாமல், ஓ.கே., சொன்னேன். மேலும், நல்ல கதாபாத்திரம் கிடைக்கிற போது, ஹீரோ விஷயத்தில் விட்டுக் கொடுப்பது தப்பில்லை...' என்கிறார் ஆண்ட்ரியா. வந்ததை வரப்படுத்தடா வலக்கட்டு ராமா!
— எலீசா
அசினின் அழகு ஜொலிக்குமா?
இந்தி சினிமாவில், அசினுக்கு இருந்த வரவேற்பு குறைந்து வருவதற்கு காரணம், அவரது முகம் பொலிவிழந்து விட்டதுதான். ஆரம்பத்தில், பட்டாம்பூச்சியாய் பளபளத்தவர், பின்னர், இரவு பகல் என்று ஓய்வின்றி நடித்ததால், அவரது முக ஜொலிப்பு மங்கிவிட்டது. இதனால், அவருடன் வெல்கம் படத்தில் நடிக்கயிருந்த அக்ஷய் குமார், அசினை வேண்டாமென்று சொன்னதோடு, ஸ்ருதிஹாசனுக்கு சிபாரிசு செய்துவிட்டார். இதனால், ஆடிப்போன அசின், தன் மைனசை புரிந்து, தற்போது கேரளாவில் முகாமிட்டு, தன் மேனியில் பளபளப்பு கூட்டும், ஆயுர்வேத சிகிச்சைகளை செய்து வருகிறார். முடங்க பாய் இல்லாமல் போனாலும் சடங்குக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
— எலீசா
சமந்தாவை இயக்கும் சித்தார்த்!
தெலுங்கில் கைநிறைய படங்கள் வைத்திருக்கும் சமந்தா, சித்தார்த்துடன், தன்னை இணைத்து வெளியான காதல் கிசுகிசுக்கள், தற்போது அடங்கி விட்டதால், நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். அதே சமயம், இதுவரை லட்சக் கணக்கில் சம்பளம் கேட்டு வந்த சமந்தா, இப்போது, கோடிக் கணக்கில் சம்பளம் கேட்டு, தயாரிப்பாளர்களின் நிம்மதியை கெடுத்து வருகிறார். இதையடுத்து, இப்படி சமந்தாவை சம்பளம் கேட்க வைப்பது, அவரை, பின்னால் இருந்து இயக்கி வரும், சித்தார்த் தான் என்றும், ஒரு புதிய, கிசுகிசு பரவியுள்ளது. முன்னே ஆட்டை பிடி; பின்னே மாட்டை பிடி என்ற கதை.
— எலீசா
மல்லிகா ஷெராவத் அரசியல் பிரவேசம்!
தமிழில், தசாவதாரம் மற்றும் ஒஸ்தி படங்களில் நடித்தவர், பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். இவருக்கு, தற்போது அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்ற, ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், எந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளலாம் என்று, அவர் யோசித்து வந்த போது தான், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதனால், அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள, இது தான் சரியான தருணம் என்று, முடிவு செய்த மல்லிகா, 'இந்தியாவின் தலைசிறந்த பிரம்மச்சாரி...' என்று சொல்லி, மோடியை பெருமைப்படுத்தியவர், சமீபத்தில், அவரது 64வது பிறந்த நாளின் போது, பிரத்யேக வாழ்த்து சொல்லி, பா.ஜ.,வில் இடம் பிடிக்க காத்துள்ளார்!
—சினிமா பொன்னையா
அவ்ளோதான்!
