
உஷாராகும் அஜித் படக்குழு!
ஆரம்பம் படத்தை, தீபாவளிக்கு, இரு தினங்களுக்கு முன்பாக வெளியிட்டு, கூடுதல் வசூலுக்கு, வழி செய்தனர். அதே போல், அடுத்து, பொங்கலுக்கு வெளியாகும், அஜித்தின், வீரம் படத்தை, ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே வெளியிட்டு, வசூலிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், பொங்கலுக்கு, விஜய்யின், ஜில்லாவும் வெளியாவதால், வீரம் படத்திற்கான பப்ளிசிட்டியையும், பெரிய அளவில், பிரமாண்டப்படுத்தப் போகின்றனர்.
- சினிமா பொன்னையா
பி.பி.,யை எகிற வைக்க வருகிறார் நயன்தாரா!
இரண்டாவது ரவுண்டில், தமிழ்ப் படங்களில் ஓரளவு அடக்கி வாசிக்கும் நயன்தாரா, தெலுங்கில், அனாமிகா படத்துக்கு பின், கமிட்டாகி உள்ள படங்களில், படுகவர்ச்சியாக நடிக்க வரிந்து கட்டுகிறார். பில்லா படத்தில் நடித்தது போன்று, மீண்டும் பிகினி உடை தரித்து, ரசிகர்களின், பி.பி.,யை எகிற வைக்க திட்டமிட்டுள்ள நயனின் இந்த திடீர் மாற்றம், ஆந்திராவில் மையம் கொண்டுள்ள சமந்தா, தமன்னா, அஞ்சலி போன்ற நடிகைகளுக்கு, 'ஷாக்' கொடுத்துள்ளது. அக்கரை வந்து முக்காரம் போடுது!
- எலீசா
ஹன்சிகாவுக்கு ஷாக் கொடுக்கும் சிம்பு!
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில், த்ரிஷாவுடன் செய்த ரொமான்சை விட, இங்க என்ன சொல்லுது படத்தில், ஆண்ட்ரியாவுடன் அளவுக்கதிகமான நெருக்கம் காட்டி, ரொமான்ஸ் செய்துள்ளார் சிம்பு. அவர்களின் கிளுகிளுப்பான காட்சிகளுக்காகவே, ஒரு அசத்தலான பாடலையும், புதிதாக, 'கம்போஸ்' செய்து, படத்தில் இணைத்துள்ளனர். மேலும், ஆண்ட்ரியாவுடன், சிம்பு, பின்னி பிணைந்துள்ள காட்சிகள், ஹன்சிகாவின் பார்வைக்கு வரும் போது, செம, 'ஷாக்' ஆகி விடுவார் என்கின்றனர்.
- சி.பொ.,
பின்னணி பாடும் ஆசையில் கோலிவுட் நடிகைகள்!
நடிகர்கள் பாடும் பாடல்கள், சமீபகாலமாய், 'ஹிட்'டாகி வருவதால், ஜி.வி.பிரகாஷ், டி.இமான், விஜய் ஆண்டனி போன்ற இசையமைப்பாளர்கள், தாங்கள் இசையமைக்கும் படங்களின் ஹீரோக்களையும், தவறாமல் பாட வைத்து விடுகின்றனர். இந்நிலையில், ஸ்ருதி ஹாசன், ரம்யா ரம்பீசன் போன்ற நடிகைகளையும், மேற்படி இசையமைப்பாளர்கள் பாட வைப்பதால், நஸ்ரியா, லட்சுமி மேனன், ப்ரியா ஆனந்த் போன்ற நடிகைகளுக்கும், பின்னணி பாடும் ஆசை, தலை துாக்கியுள்ளது. இதனால், பாட, வாய்ப்பு கேட்டு, இளவட்ட இசையமைப்பாளர்களை துரத்தி வருகின்றனர்.
- சி.பொ.,
மீண்டும் பாலாவுடன் விஷால்!
பரதேசி படத்தை இயக்கிய பாலா, அதையடுத்து, மீண்டும் விக்ரமுடன் கூட்டணி வைக்க ஆசைப்பட்டார். ஆனால், அவரோ, ஐ மற்றும் ராஸ்கல் போன்ற படங்களை காரணம் காட்டி, பாலாவிடமிருந்து நழுவி விட்டார். அதனால், 'சசிகுமார், அதர்வாவை வைத்து, ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் செய்யலாமா...' என்று, பாலா யோசித்துக் கொண்டிருக்கையில், அவரது, அவன் - இவன் படத்தில் நடித்த விஷாலே முன்வந்து, கால்ஷீட் கொடுத்துள்ளார். அதனால், அவன் - இவன் மற்றும் பரதேசி என தொடர்ந்து, இரண்டு தோல்விகளைக் கொடுத்த பாலா, 'அடுத்த படத்தை, 'ஹிட்'டாக கொடுத்து விட வேணடும்...' என்று, விஷாலுக்கேற்ற ஸ்கிரிப்ட்டை தயார் செய்ய துவங்கியுள்ளார்.
- சி.பொ.,
ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த கவுதம் மேனன்!
நீ தானே என் பொன் வசந்தம் படத்தையடுத்து, விஜய் உள்ளிட்ட சில நடிகர்களை வைத்து, படம் இயக்கவிருந்தார் கவுதம் மேனன். ஆனால், கதையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அவர்களுடனான கூட்டணி முறிந்து போனது. அதையடுத்து, அஜித்திடம் கதை சொல்லி, 'ஓ.கே' செய்து விட்ட கவுதம், அதற்குள், கையில் இருந்த இன்னொரு படத்தை முடிக்கலாமே என்று, தன், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்த, சிம்புவையே, மீண்டும், 'புக்' செய்து, புதிய படத்தை துவங்கி விட்டார். மேலும், முந்தைய படத்திற்கு இசையமைக்க, இளையராஜாவை நாடிய கவுதம் மேனன், இப்படத்திற்கு, மீண்டும், ஏ.ஆர்.ரஹ்மான் பக்கம் திரும்பி விட்டார்.
- சினிமா பொன்னையா
அவ்ளோதான்

