
அரசியல்வாதிகளை சாடும் ராஜ்கிரண்!
வித்தியாசமான வேடங்களில் மட்டுமே நடிப்பது என்ற, பாலிசியை கடைபிடித்து வரும் ராஜ்கிரண், சிவப்பு என்ற படத்தில், அகதிகளாக வரும் இலங்கை தமிழர்களுக்கு, அடைக்கலம் கொடுக்கும், ஒரு கோனார் வேடத்தில் நடித்துள்ளார். அதோடு, சமீபகாலமாய், இலங்கை தமிழர்களை வைத்து, சிலர் அரசியல் செய்வதற்கும், இப்படத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ராஜ்கிரண். 'அவங்களுக்கு நல்லது செய்யணும்ன்னா செய்யுங்க; இல்லேன்னா விட்டுடுங்க. தயவு செய்து அவங்களை வச்சு அரசியல் மட்டும் பண்ணாதீங்க...' என்று, ஒரு காட்சியில், அரசியல்வாதிகளைப் பார்த்து, ஆவேசமாக வசனம் பேசி நடித்துள்ளார் ராஜ்கிரண். இதனால், படம் திரைக்கு வரும் நேரத்தில், சர்ச்சைகள் உருவாகும் என, தெரிகிறது.
— சினிமா பொன்னையா
கவர்ச்சிப் பேயான சன்னி லியோன்!
ஜெய் நடிக்கும், வடகறி படத்தில், குத்து பாடலுக்கு நடனமாடி, கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் சன்னி லியோன், தொடர்ந்து, தென்னிந்திய படங்களில் கலைச் சேவை செய்ய முடிவெடுத்துள்ளார். இந்நிலையில், அவரது மார்க்கெட்டை, மேலும் சூடேற்றும் வகையில், இந்தியில் சன்னி நடித்த, ராகினி என்ற படத்தின் இரண்டாம் பாகமான, எம்எம்எஸ்-2 என்ற படம், இந்தியா முழுக்க வெளியாகிறது. இப்படத்தில், பேய் வேடத்தில் நடித்துள்ளபோதும், தன் பிராண்ட் கிளாமரையும் வாரி வழங்கி நடித்துள்ளார் சன்னி லியோன். இதையடுத்து, அவரது பெயருக்கு முன், கவர்ச்சிப் பேய் என்ற பட்டத்தையும், டைட்டில் கார்டில் போட முடிவெடுத்துள்ளனர். ஆட லோகத்து அமுதத்தை, ஈக்கள் மொய்த்து கொள்வது போல!
— எலீசா
மலையாள வாரிசுகள்!
மலையாள சினிமாவிலும், வாரிசு ஹீரோக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான், டைரக்டர் பாசிலின் மகன் பஹத் பாசில் ஆகியோர், மலையாள படங்களில் நடித்து வருவதையடுத்து, மோகன் லால் தன் மகன் ப்ரணவுக்கு, நடிப்பு பயிற்சி கொடுத்து வருகிறார். அவரைப் பார்த்து ஜெயராமும், தன் மகன் காளிதாசுக்கு நடிப்பு, நடனம் மற்றும் சண்டை பயிற்சி கொடுத்து வருபவர், தீவிரமாக கதையும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருமே, தமிழ், மலையாளம் என, இரண்டு மொழிகளிலும் தயாராகும் படங்களில், தங்கள் மகன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
— சி.பொ.,
அனுஷ்கா படத்துக்கு சிக்கல்!
ராஜமவுலி இயக்கத்தில், அனுஷ்கா நடித்து வரும் படம், பாகுபாலி. சரித்திர கதையில் உருவாகும் இப்படத்தில், ஆயிரக்கணக்கானோரை வெட்டி சாய்ப்பது போன்ற போர்க்கள காட்சிகளும் உள்ளதாம். ஆனால், பாகுபாலி என்பது, ஒரு ஜைன புத்தமத துறவியின் பெயராம். அமைதியே உருவான அவரது பெயரை, படத்துக்கு வைத்து விட்டு, இப்படி, ரத்தக்களறியான காட்சிகளை வைப்பது, அவரது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்று, கர்நாடகத்திலுள்ள புத்தமதத்தினர் போர்க்கொடி பிடித்திருப்பதோடு, தடைகோரி, நீதி மன்றத்தையும் நாடியுள்ளனர். இதனால், பாகுபாலி என்ற டைட்டிலை மாற்றுவது குறித்து, ஆலோசித்து வருகிறார் ராஜமவுலி.
— எலீசா
கும்கி நடிகையின் கைவசம்
அரை டஜன் படங்கள் உள்ளன. அனைத்துமே பேசப்படும் ஹீரோக்களின் படங்கள் என்பதால், அதே வேகத்தில் முத்தக்காட்சி, கவர்ச்சி கலாசாரத்தையும் கடைபிடிக்கும் நடிகை, தான் பக்கா கமர்ஷியல் நடிகையாகி விட்டதை உணர்த்தும் பொருட்டு, சமீபத்தில் தன் கோலிவுட் அபிமானிகளுக்கு, 'பார்ட்டி' கொடுத்துள்ளார். அப்போது, 'முதல் தர ஹீரோக்களுடன் என்னை, 'டூயட்' பாட வைத்தால், யார் மூலமாக அந்தப்பட வாய்ப்பு வருகிறதோ, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில், ஒரு மிகப்பெரிய,'கிப்ட்' தருவேன்...' என்று, சஸ்பென்சாக கூறியுள்ளார். இதனால் மேல்தட்டு ஹீரோக்களை நோக்கி, தங்கள் முயற்சிகளை முடுக்கியுள்ளனர் அபிமானிகள்.
கறுப்புப் பூனை!
* மரணப்படுக்கையில் இருந்த போது, மனம் என்ற படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார், சமீபத்தில் மறைந்த, தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ்.
* சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த, ஜெய் -சுவாதி ஆகிய இருவரும், ஐந்து ஆண்டுகளுக்கு பின், வடகறி படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
* விலங்குகள் நல அமைப்பான, 'பீட்டா'வில், தன்னை இணைத்துள்ள எமி ஜாக்சன், தன் தோழிகளையும் அந்த அமைப்பில் இணையுமாறு வலியுறுத்தி வருகிறார்.
* சமந்தாவைத் தொடர்ந்து, காஜல் அகர்வாலும் காளஹஸ்தி கோவிலில், ராகு - கேதுவுக்கு பரிகார பூஜை செய்துள்ளார்.
* ஆரோகணம் படத்தை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின், அடுத்த படத்தில், பியா நாயகியாக நடிக்கிறார்.
* விக்ரமை வைத்து செல்வராகவன் இயக்கயிருந்த, சிந்துபாத் கதையில், தற்சமயம் சிம்பு நடிக்கிறார்.
* லட்சுமி மேனனுக்கு நேரடி போட்டி நடிகையாக இருந்து வந்த நஸ்ரியா, நடிப்புக்கு முழுக்குபோடுவதாக அறிவித்திருப்பதால், அவரது படங்கள் அனைத்தும், இப்போது லட்சமி மேனன் பக்கம் திரும்பி நிற்கின்றன. இந்த ஆண்டு மட்டுமின்றி, அடுத்த ஆண்டு வரை, அவரது கால்ஷீட் டைரி, 'புல்'லாகி விட்டது.
*தொப்புள் சர்ச்சை நடிகை, மலையாள நடிகரை திருமணம் செய்ய முடிவு செய்த விவகாரம், அவரை லவ்வி வந்த இரண்டெழுத்து நடிகரை பெரிதாக பாதிக்கவில்லை. சேதியறிந்து துக்கம் விசாரிக்கும் நண்பர்களிடம், 'இதெல்லாம் ஒரு விஷயமா; பத்தோட பதினொன்னா நினைச்சிட்டு போவியா...' என்று, தனக்கு தைரியம் சொல்ல வந்தவர்களிடம், நடிகை தனக்கு டாடா காட்டி விட்டதை, கேஷுவலாக சொல்கிறார் நடிகர்.

